ஊரடங்கு உத்தரவை மேலும் 2 வாரங்களுக்கு நீடிப்பதைத் தவிர்க்க முடியாது என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இந்தியா உள்ளிட்ட 205 நாடுகளும் மேலாக கொரோனா வைரஸ் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,447 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 239 ஆக உயர்ந்துள்ளது.
இதற்கிடையே, கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள் முடக்கத்தை மத்திய அரசு கடந்த மாதம் 25ம் தேதி அமல்படுத்தியது. இது, வரும் 14ம் தேதியுடன் முடிகிறது.
முடக்கத்தை அறிவித்து 16 நாட்கள் கடந்த நிலையில், கொரோனா பரவல் அதிகமாகி இருக்கிறதே தவிர, குறையவில்லை.
இதனால், மகாராஷ்டிரா உட்பட அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பெரும்பான்மை மாநிலங்கள் முடக்கத்தை நீட்டிக்க மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன.
கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடனும் பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் இன்று ஆலோசனை நடத்தினார்.
அப்போதும், ஊரடங்கை நீட்டிக்க பெரும்பாலான முதல்வர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஊடரங்கு நீட்டிப்பது தொடர்பாக நாளை அல்லது நாளை மறுநாள் முக்கிய அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, ஊரடங்கு நீட்டிப்பது குறித்து முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், இன்று முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி கலந்தாலோசிக்கிறார். ஊரடங்கை இரு வாரங்களுக்கு 30-4-2020 வரை நீடிப்பதைத் தவிர்க்க முடியாது என்று தோன்றுகிறது.
ஊரடங்கு காலத்தில் மோடி அரசு ஏழைகளை மறந்துவிட்டது. இந்தியாவில் உள்ள அனைத்து ஏழைக் குடும்பங்களுக்கும் தலா ரூபாய் 5000 தந்தால் மொத்தச் செலவு ரூ 65,000 கோடி. இது நம்மால் முடியும்,
இதனைக் கண்டிப்பாகச் செய்ய வேண்டும்.என் பணிவான யோசனையை நம் முதலமைச்சர்களிடம் நான் தெரிவித்திருக்கிறேன். பிரதமரின் முடிவு என்னவென்று பார்க்கலாம் என்று பதிவிட்டுள்ளார்.