முக்கிய செய்திகள்

வீடு வரைக்கும் போய் ஓபிஎஸ்-சுக்கு அழைப்பு விடுத்தோம்: ஆர்.பி.உதயகுமார் விளக்கம்

 

இரட்டை இலைச் சின்னம் கிடைத்தாலும் கிடைத்தது, இரட்டைக் குழல் துப்பாக்கிகள் ஆளுக்கொரு பக்கமாய் வெடிக்கத் தொடங்கி உள்ளன. ஓபிஎஸ்-ஐ வீடுவரைக்கும் போய் அழைப்பு விடுத்தும், வேறு ஏதோ காரணத்தால் அவர் மதுரையில் நடைபெற்ற கொடியேற்ற விழாவில் கலந்து கொள்ளவில்லை என்று கூறியிருக்கிறார் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.

இரட்டை இலை சின்னம் கிடைத்ததை கொண்டாடும் வகையில் மதுரை தோப்பூர் நான்கு வழிச் சாலையில் எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாவின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள 100 அடி உயர கம்பத்தில் அதிமுக கொடி ஏற்றும் விழா  சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவிற்கு ஓபிஎஸ் அணியை சேர்ந்தவர்களுக்கு அழைப்பு இல்லை என்று, சென்னையில் “தமிழிசை விழாவுக்காக” ஆளுரைச் சந்தித்த பின்னர் பேட்டி அளித்த அதிமுக எம்பி மைத்ரேயன் மனம் குமைந்து கூறியிருந்தார். இந்நிலையில் தோப்பூரில் சனிக்கிழமை நடைபெற்ற கொடியேற்றும் நிகழ்ச்சியை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் புறக்கணித்தார்.

அ.தி.மு.கவின் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் தன்னை கொடியேற்ற அழைக்காமல் இணை ஒருங்கிணைப்பாளராக இருக்கும் எடப்பாடி பழனிசாமியை கொடியேற்ற வைத்ததே புறக்கணிப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், இந்த விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று துணை முதலமைச்சர் வீடு மற்றும் அலுவலகத்திற்கு சென்று அழைப்பு விடுக்கப்பட்டதாக கூறினார். ஆனால் அன்றைய தினம் கோவில் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள திட்டமிடப்பட்டு இருந்ததால் துணை முதலமைச்சரால் கலந்து கொள்ள முடியவில்லை என்றும் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.