முக்கிய செய்திகள்

புயலைப் புயலென்று சொல்லி இருக்கலாமே: கதறுது குமரி!

ஒக்கி புயலால் கடுமையாக சூறையாடப்பட்டு 5 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், குமரி மாவட்டம் அதில் இருந்து இதுவரை மீளவில்லை. இந்த நிலையில், காணாமல் போன மீனவர்கள் எத்தனை பேர் என்ற விவரங்களே நம்மிடம் இல்லை என்பதை, சேதத்தை பார்வையிட வந்த ராணுவத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனே கூறிவிட்டுச் சென்றுள்ளார். அது மட்டுமின்றி, 234 படகுகளில் சென்ற 2000க்கும் மேற்பட்ட மீனவர்கள் கரை திரும்பவில்லை என்று கடலோரக்காவல்படை சார்பில் அவரிடம் தெரிவிக்கப்பட்ட தகவலையும் கூறிச் சென்றுள்ளார். மத்திய அரசு தரப்பில் புயல் வருவது குறித்து முன்கூட்டியே எச்சரிக்கப்பட்டுவிட்டதாக வேறு நிர்மலா சீதாராமன் கூறியிருப்பதுதான் இதில் உச்சக்கட்ட வேதனை.

பாதிக்கப்பட்ட மக்களை, இன்று காலை (திங்கள்) நேரில் சந்தித்த  எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினிடம், மீனவ கிராமங்களைச் சேர்ந்த  மக்கள், தாங்கள் அனாதைகளாகிவிட்டதாகவே கூறி கதறியுள்ளனர். கடலுக்குச் சென்ற அவர்களது அன்புக்குரியவர்கள், திரும்பும் வரை அரசு கொடுக்கும் எந்த உதவிகளையும் ஏற்கும் மனநிலையில் இல்லை என்பதையும் அப்போது கூறியுள்ளனர். குஜராத்திலும், மகாராஷ்ட்ராவிலும் தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் சிலர் சென்று சேர்ந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நிர்மலா சீத்தாராமன் கூறிய கணக்குப்படி  தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்களில் 71 பேர் மீட்கப்பட்டதாக தெரிகிறது. இதுகுறித்த சரியான விவரங்கள் யாருக்கும் கிடைத்ததாக தெரியவில்லை. தகவல் தொழில் நுட்பத்தில் இதுவரை நாம் அடைந்ததாக கூறிக்கொள்வதெல்லாம், வெற்றுப் பீற்றல் என்பது இதன் மூலம் அம்பலமாகி இருக்கிறது. இதற்குப் பயன்படாத தகவல் தொழில் நுட்பம் வேறு எதற்கு தேவை? அரசு குறைதீர் கூட்டங்களில் ஸ்மார்ட் போன்களில் அதிகாரிகள் சேட் செய்து விளையாடவா? அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத் தேவையுடன் தொடர்பு படுத்தப்படாத, அதற்கு பயன்படாத தொழில் நுட்பத்தால் என்ன பயன்?

இந்நிலையில், ஒக்கிப் புயலின் தாக்கம் குறித்து முன்கூட்டியே தெரிந்திருந்தும் தமிழக அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தவறி விட்டது என்ற குற்றச்சாட்டுக்கு அரசு தரப்பிடம் பதில் இல்லை. வியாழக்கிழமை காலை 6.30 மணி அளவில் பள்ளிகளுக்கு விடுமுறை என மாவட்ட நிர்வாகம் அறிவித்த போது கூட, கனமழை என்றே கூறியுள்ளனர். புயல் என்ற வார்த்தையை, பொதுமக்களும், ஊடகங்களும் சொல்லத் தொடங்கிய பின்னரே அரசு தரப்பில் அத்தகைய பெயர் உச்சரிக்கப்பட்டது. இது எத்தனை பெரிய கொடுமை? புயலை, புயல் என்று கூறி, அதற்கு உரிய முன்னெச்சரிக்கை நடவடிகக்கை எடுத்திருந்தால், இழப்புகளையும், இடர்களையும் ஓரளவேனும் தவிர்த்திருக்கலாமே என்ற அந்த மக்களின் கதறல் நம் நெஞ்சைப் பிழிகிறது.

ஆனால், மத்திய அமைச்சர் நிர்மலாவோ, கப்பல் படையும், விமானப்படையும் சம்மந்தப்பட்டிருப்பதால் தாம் வரவேண்டியதாயிற்று என்ற போக்கில் பேசிச்சென்றுள்ளார். இத்தகைய அரசுகளுக்கு மத்தியில் தான் நாம் வாழ்கிறோம் என்பதை நினைக்கவே நெஞ்சம் பதறுகிறது. வெளிநாடு சென்றிருக்கும் பொன்.ராதாகிருஷ்ணன் வேறு, குமரிக்குப் போய் மக்களைச் சந்திக்குமாறு கேட்டுக் கொண்டதாக தம்மிடம் நிர்மலா கூறியிருக்கிறார். ஆக, தவிர்க்க முடியாத தர்மசங்கடத்துடனேயே அவர் குமரிக்கு வந்திருப்பது தெரிய வந்துள்ளது. நமது துணை முதலமைச்சர் , ஹெலிகாப்டர் தளம் அமைத்துத் தாருங்கள் அது… இது என்று மத்திய அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்ட கூத்துகளும் குமரிப்பேரிடருக்கு இடையேயும் மிதந்த சில நகைச்சுவைக் குமிழிகளைப் போல் நடந்தேறின. அதே நேரத்தில், பாஜக  ஆட்சியில் இருக்கும் மாநிலங்களிள் இது போன்ற பேரிடர் ஏற்பட்டிருந்தால், அப்போது இவர்கள் இப்படிப் பேசுவார்களா? தமிழகத்திலும், தென் மாநிலங்களிலும் அவர்களால் கோலோச்ச முடியவில்லை என்ற ஆத்திரம் தானே அவர்களை இப்படிப் பேசச் சொல்கிறது? போகட்டும். 2015 வெள்ளத்தில் சிக்கிய போது, எப்படித் தங்களைத் தாங்களே காத்துக் கொள்ள வேண்டிய நெருக்கடிக்கு சென்னை மக்கள் ஆளானார்களோ, அதே நிலைக்கு இப்போது குமரி மக்களும் தள்ளப்பட்டிருக்கிறார்கள். காதுள்ளவர்கள் அவர்களது அழுகுரலைக் கேட்கட்டும், மனமும், கரமும் உள்ளோர் அவர்களுக்கு உதவ முன்வரட்டும். காணாமல் போன மீனவர்களில் மீதமிருப்போரையேனும் முழுமனதுடன் தேடிக் கண்டுபிடிக்க   இரண்டு அரசுகளும் உதவினால் நன்று. அதையும்  நாடகமாகவே நடத்தி முடிப்போம் என்று தொடர்வார்களேயானால்… காலம் தான் அதற்குரிய பதிலைக் கூற வேண்டும்.

  • செம்பரிதி