முக்கிய செய்திகள்

பொதுத்தேர்தலுக்காக மலேசிய நாடாளுமன்றம் கலைப்பு!

தென்கிழக்கு ஆசிய நாடான மலேசியா, பிரிட்டனிடம் இருந்து 1957 ஆகஸ்ட் 31-ம் தேதி விடுதலை பெற்றது. 1959-ல் முதல் பொதுத்தேர்தல் நடைபெற்றது. அப்போது முதல் இதுவரை பாரிசன் நேஷனல் கூட்டணி ஆட்சியில் உள்ளது. கடந்த 2013 தேர்தலில் தற்போதைய அதிபர் நஜீப் ரசாக் மீதான ஊழல் புகார் காரணமாக வரலாற்றில் முதல் முறையாக ஆளும் கூட்டணியின் செல்வாக்கு சரிந்தது. எனினும், பாரிசன் நேஷனல் கூட்டணியே ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது. இந்நிலையில், தற்போதைய நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் மே மாதத்துடன் முடிவடைகிறது.

இதனால் மலேசிய நாடாளுமன்றம் சனிக்கிழமை அதிகாரபூர்வமாக கலைக்கப்படும் என்று பிரதமர் நஜீப் ரசாக் கோலாலம்பூரில் நேற்று (6.4.2018) அறிவித்தார். அந்த நாட்டு சட்டத்தின்படி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு 60 நாட்களுக்குள் பொதுத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதன்படி அடுத்த சில நாட்களில் பொதுத்தேர்தல் தேதியை தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது.

தேர்தலில் பாரிசன் நேஷனல் கூட்டணிக்கும் முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது தலைமையிலான பாக்காத்தான் ஹாரப்பான் கூட்டணிக்கும் கடும் போட்டி நிலவுகிறது. மொத்தம் 222 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் 505 மாகாண தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.

மலேசிய மக்கள் தொகை 3.12 கோடி. இதில் மலாய் முஸ்லிம்கள் பெரும்பான்மையாகவும் இந்தியர்கள், சீனர்கள் சிறுபான்மையினராகவும் உள்ளனர். தேர்தலில் 1.49 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். மலேசியாவில் வசிக்கும் 20 லட்சம் இந்தியர்களில் 11 லட்சம் பேர் வாக்குரிமைப் பெற்றுள்ளனர். பெரும்பான்மை மலாய் முஸ்லிம்களின் வாக்குகளை குறிவைத்தே அரசியல் கட்சிகள் காய்களை நகர்த்தி வருகின்றன. எனினும் இந்தியர்களின் வாக்குகளும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

Malaysian Prime Minister Najib Razak announced the dissolution of parliament on Friday