2 கோடி வேலைவாய்ப்பு எங்கே : மோடியை சாடிய மன்மோகன் சிங்..


2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது, 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவேன் என்று மோடி வாக்குறுதி அளித்தார், ஆனால், நாங்கள் இதுவரை 2 லட்சம் வேலைவாய்ப்புகளைக் கூட பார்க்கவில்லை என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடுமையாகச் சாடியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் 84-வது தேசிய அளவிலான மாநாடு டெல்லியில் நடந்து வருகிறது. இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, மூத்த தலைவர்கள் ப.சிதம்பரம், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், குலாம்நபி ஆசாத்,கபில் சிபல் உள்ளிட்டோரும், மாநில முதல்வர்கள், மாநிலத் தலைவர்கள் என 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இந்த மாநாட்டில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இன்று பேசினார். மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசை கடுமையாகச்சாடினார். அவர் பேசியதாவது:

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 2014-ம் ஆண்டு பொதுத் தேர்தலின்போது மிகப்பெரிய வாக்குறுதிகள் ஏராளமாகஅளித்தது. ஆனால் அந்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. அந்த வாக்குறுதிகள் அனைத்தும் மாயஜால வார்த்தைகளாகவே இருக்கின்றன.

பிரதமர் மோடி 2014-ம் ஆண்டு தேர்தலில் பிரசாரம் செய்யும்போது, ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகளை இளைஞர்களுக்கு உருவாக்குவேன் என்று மக்களிடம் வாக்குறுதி அளித்தார். ஆனால், ஆண்டுக்கு 2 லட்சம் வேலைவாய்ப்புகளைக் கூட நாங்கள் பார்க்கவில்லை.. அதை ஒருபோதும் நிறைவேற்ற முடியாது.

விவசாயிகள் வருமானம் 6 ஆண்டுகளில் 2 மடங்கு உயரும் என்று மோடி தெரிவிக்கிறார். இதுபோன்ற மயக்கும் வார்த்தைக்கள் ஒருபோதும் செயல்பாட்டுக்கு வராது, அடையவும் முடியாது.

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை காங்கிரஸ் அரசு மிகவும் எளிதாகவும், உணர்வுப்பூர்வமாகக் கையாண்டது. ஆனால், பாஜக அரசு பொறுப்பேற்றபின் அதை தவறாக கையாண்டுவிட்டது. இதனால், ஜம்முகாஷ்மீர் மாநிலத்தின் சூழல் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. நம்முடைய எல்லைகள் பாதுகாப்பற்றதாகிவருகின்றன. எல்லை மீறிய தாக்குதல்கள், தீவிரவாதிகள் ஊடுறுவுல்கள் அதிகரித்துவிட்டன.

பிரதமர் மோடி தன்னிச்சையாக அறிவித்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை மக்கள் மத்தியிலும், பொருளாதாரத்திலும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தியது. அதேபோல ஜிஎஸ்டி வரியும் அவசரமாக நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்திய பொருளாதாரத்தையே பாஜக சிக்கல் நிறைந்ததாக மாற்றிவிட்டது.

சீரழிவை உண்டாக்கிய பணமதிப்பிழப்பு நடவடிக்கையும், அவசரமாக நடைமுறைப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி வரியும் சேர்ந்து நாட்டில் உள்ள சிறுதொழில்களை எல்லாம் நசுக்கிவிட்டது.

நம்மிடம் ஏராளமான வாய்ப்புகள் கையில் இருக்கின்றன அதேசமயம், நம்முன் சவால்களும் இருக்கின்றன. ஆதலால், இந்தியா தற்போது முக்கியமான முடிவுகள் எடுக்க வேண்டிய கட்டத்தில் இருக்கிறது. இந்த நேரத்தில் காங்கிரஸ் கட்சி நாட்டின் எதிர்காலத்துக்கு புதிய வழியைக் காட்டும்

நாட்டின் சுதந்திரப்போராட்டத்தில் இருந்து இன்று இந்தியாவை வளர்ச்சிப்பாதை வரை காங்கிரஸ் கட்சியை வழிநடத்திச் சென்றுள்ளது. அதேபோன்று சமூக நீதியையும், வளர்ச்சியையும் கொண்டு செல்லவேண்டிய சவால்களை நாம் எதிர்நோக்கி இருக்கிறோம்.

இவ்வாறு மன்மோகன் சிங் பேசினார்.

இலங்கையில் அவசர நிலை வாபஸ்

சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

Recent Posts