முக்கிய செய்திகள்

உடல் நலமில்லை…. வசனங்கள் மறந்து போயின…: 2.0 ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் ரஜினி பேச்சு

 

சென்னையில் நடைபெற்ற விழாவில் 2.0 திரைப்படத்தின் ட்ரெய்லரை ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் அக்சய்குமார் இருவரும் இணைந்து வெளியிட்டனர். இந்த நிகழ்ச்சியில் படத்தின் இயக்குநர் ஷங்கர், தயாரிப்பாளர் சுபாஸ்கரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் ரஜினி பேசியதாவது:

என் தாய் தந்தை அண்ணாவாக இருக்க கூடிய சத்யநாராயணன் வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. 2.0 படம் சூப்பர் டூப்பர் ஹிட் வெற்றியைப் பெறும்.

இப்படத்திற்காக தயாரிப்பாளர் சுபாஸ்கரன் 600 கோடி செலவழித்துள்ளார் இயக்குநர் சங்கர் இந்தியாவின் பீல்ஸ்பெர்க், கேமரூன் ஆவார். திரில்லர், பொழுது போக்கு மற்றும் நல்ல செய்தி என அனைத்து அம்சங்களும் இந்தப் படத்தில் உள்ளது. இந்தப் படத்தை வெற்றிகரமாக இயக்கிய சங்கருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மனதில் என்ன நினைக்கிறாரோ அதைத் திரையில் கொண்டு வரும் திறமை படைத்தவர் சங்கர்.

இந்தப் படத்தை முதலில் 300 கோடிக்குள் எடுக்க  திட்டமிடப்பட்டனர். ஆனால் இறுதியில் அது இரு மடங்காகிவிட்டது. ஷூட்டிங்கின் போது உடல் நலமில்லாமல் போனது. வசனங்கள் நினைவில் நிற்கவில்லை. படத்தில் இருந்து விலகிக் கொள்கிறேன் என்றேன். படத்தில் செலவுகளை கொடுத்து விடுகிறேன் என்றேன். ஆனால் சங்கர் நம்பிக்கையளித்தார். 4 மாதங்கள் ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் சொன்னார்கள். ஆனால் சுபாஸ்கரன் 4 மாதங்கள் என்ன, 4 ஆண்டுகள் கூட ஆனாலும் பரவாயில்லை என்றார்.  லேட்டா வந்தாலும் சரியா அடிக்கணும். நான் இந்தப் படத்தைத்தான் சொல்கிறேன். இந்தப் படத்தில் அக்சய் குமாரின் கேரக்டர் மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்படும். 

இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.

நிகழ்ச்சியில் முன்னதாக இயக்குநர் ஷங்கர் பேசியதாவது:

இப்படி நடந்தால் எப்படி இருக்கும் என்பதே 2.0 படத்தின் கதை. ஆயிரத்திற்கும் மேற்பட்ட டெக்னீசியன்களுடன் உதவியுடன் எடுக்கப்பட்டுள்ளது. சுபாஸ்கரன் இல்லையென்றால் இந்தப் படமே இல்லை. அவ்வளவு பெரிய செலவு. இந்தப் படத்தின் பலமே ரஜினி சார்தான். எது செய்தாலும் ஸ்டைலாக மாஸாக உள்ளது.

 

இந்தப் படம் தொடங்கும் போது ரஜினிக்கு உடல் நலமில்லாமல் போனது. ஆயிரக்கணக்கான டெக்னீசியன்கள் உள்ள நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையிலும் வந்து நடித்துக் கொடுத்தார்.

 

சண்டைக் காட்சியின் போது ரஜினிக்கு காலில் அடிபட்டது. மருத்துமனைக்கு செல்லாமல் நடிக்கிறேன் என்றார். அந்த அர்பணிப்பு உணர்வுதான் அவரை இன்னும் கூட சூப்பர் ஸ்டாராக வைத்துள்ளது.

இவ்வாறு ஷங்கர் பேசினார்.