ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 01 ஆகிய இரு நாள்களும் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்போவதாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
நவம்பர் 1, 2017 முதலான ஊதிய திருத்தக் கோரிக்கையை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 01 ஆகிய இரு நாள்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளதாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் மார்ச் 11, 12 மற்றும் 13 ஆகிய நாள்களிலும் வேலைநிறுத்தம் நடைபெறும் மற்றும் ஏப்ரல் 01-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு ஊதியத்தை அடிப்படை ஊதியத்துடன் இணைத்தல், ஓய்வூதியத்தைப் புதுப்பித்தல், குடும்ப ஓய்வூதிய முறையை மேம்படுத்துதல்,
ஐந்து நாள் வங்கிச் சேவை, லாபத்தின் அடிப்படையில் பணியாளர் நல நிதியை ஒதுக்குதல், ஓய்வூதியர்களுக்கு வருமான வரியிலிருந்து விலக்கு, முறைப்படுத்தப்பட்ட ஒரே பணி நேரம், மதிய உணவு இடைவேளை,
வங்கி விடுப்பு முறை, அதிகாரிகளுக்கு வரையறுக்கப்பட்ட வேலை நேரம் மற்றும் ஒப்பந்த ஊழியருக்கு வேலைக்கு ஏற்ற ஊதியம், 20 சதவீத ஊதிய உயர்வு மற்றும் புதிய ஓய்வூதிய திட்டத்தை அகற்றுவது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி
இந்த நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலர் சஞ்சய் தாஸ் தெரிவித்தார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது இரண்டாவது மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 01-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளது குறிப்பிடத்தக்கது.