திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சிக்கும் 2: ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் ஸ்டாலின்

தி.மு.க. கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, அதற்கான ஒப்பந்தமும் கையெழுத்திடப்பட்டது.

தி.மு.க. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடையே கூட்டணி தொடர்பாக ஏற்கனவே பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற நிலையில் இன்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் சென்னை அண்ணா அறிவாலயத்தில் துரைமுருகன் தலைமையிலான கூட்டணிப் பேச்சுவார்த்தைக் குழுவினரைச் சந்தித்துப்பேசினர்.

அப்போது தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினும் அங்கிருந்தார். பேச்சுவார்த்தை முடிவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் என  தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் – மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இடையே உடன்பாடு கையெழுத்தானது.

சட்டமன்ற இடைத் தேர்தலில் 21 தொகுதிகளிலும் தி.மு.க.விற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு அளிக்க உள்ளதாக பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இந்நிலையில், திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு மட்டுமே தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட வேண்டி உள்ளது. இன்று மாலை அதுவும் அறிவிக்கப்பட்டு விடும் எனத் தெரிகிறது.