முக்கிய செய்திகள்

2019 தேர்தலில் வென்று காங்கிரஸ் ஆட்சியமைக்கும் போது ‘தலைப்புச் செய்திகள்’ மாறிவிடும்: ராகுல் காந்தி

அஸாமில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி  பிரதமர் நரேந்திர மோடி காவலாளி அல்ல ஒரு கோழை என்று சாடியுள்ளார்.

“காவலாளி ஒரு திருடன் மட்டுமல்ல ஒரு கோழையும் கூட. அவர் ஊழல் பற்றி பேசுகிறார், என்னுடன் விவாதத்திற்கு அழைத்தால் அவருக்கு தைரியம் இல்லை ஓடிவிடுகிறார்.

ஏன் ஓடுகிறார் என்றால் அனில் அம்பானிக்கு ரபேல் ஒப்பந்தத்தில் கொடுத்த ரூ.30,000 கோடி  விவாதிக்கப்படும். ஏன் ரூ.526 கோடி பெறுமான போர் விமானம் ரூ.1600 கோடிக்கு வாங்கபப்டுகிறது என்று கேட்பேன்… அவ்வளவுதான் அவர் ஓடி விடுவார்.

நரேந்திர மோடி அரசு 5 ஆண்டுகளுக்கு ஆட்சி செய்து 15 பேருக்கு மட்டும்தான் பயனளித்துள்ளார்… இடையறாது பணக்காரர்களுக்கு கொடுத்துக் கொண்டே இருந்தார், 2019-ல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் செய்தித்தாள்களின் தலைப்புச் செய்திகள் ஏழை மக்கள் பணம் பெற்றதாக இருக்கும்.

காவலாளி உங்கள் பணத்தை பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜிஎஸ்டி மூலம் எடுத்து கொண்டு விட்டார், வங்கிகளின் சாவி அனில் அம்பானி போன்ற திருடர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் அனில் அம்பானியிடமிருந்து வங்கிகளின் சாவிகள் பிடுங்கப்படும், இளைஞர்கள் கையில் கொடுக்கப்படும்.

ஏழைகளுக்கு மாதம் ரூ. 6,000 வீதம் ஆண்டுக்கு ரூ.72,000 தொகை ஏழை விட்டுப் பெண்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக டெபாசிட் செய்யப்படும்.

ஆண்களுக்கு இது பிடிக்காது ஆனால் நாங்கள் முடிவெடுத்து விட்டோம். இது வறுமை மீதான துல்லியத் தாக்குதல், இது இந்தியப் பொருளாதாரத்தையே மாற்றிவிடும்.

இதில் நீங்கள் எந்த சாதி, எந்த மதம் என்ற பேதமெல்லாம் இல்லை. இந்தப் பணம் உங்களை வந்து சேரும்” என்றார் ராகுல் காந்தி.