2020 ஆம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு பிரிட்டன், அமெரிக்க விஞ்ஞானிகள் மூவருக்கு கூட்டாக இன்று அறிவிக்கப்பட்டது.
சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் உள்ள கரோனலின்ஸ்கா இன்ஸ்ட்டியூட்டில் உள்ள நோபல் பரிசுக் குழு இந்த விருதை அறிவித்தது.
உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பரவி பல்வேறு நாடுகளை உலுக்கி எடுத்து வரும் சூழலில், கரோனா வைரஸுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டாலும் மனிதகுலத்துக்கு முழுமையாக வந்து சேரும் தேதி தெரியாத நிலையில் மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது முக்கியத்துவத்தைப் பெறுகிறது.
ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயிலும் மற்ற பரிசுகள் ஸ்டாக்ஹோமிலும் அறிவிக்கப்படும்.
அந்த வகையில் இன்று முதல் நோபல் பரிசுகளுக்கான அறிவிப்புகள் தொடங்கியுள்ளன. முதல் கட்டமாக மருத்துவத்துக்கான 2020 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு பிரிட்டன், அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டது.
அமெரிக்க விஞ்ஞானி ஹார்வே ஜே.ஆல்டர் (வைராலஜிஸ்ட்), பிரிட்டன் விஞ்ஞானி மைக்கேல் ஹாட்டன், அமெரிக்க விஞ்ஞானி சார்லஸ் எம். ரைஸ் (பேராசிரியர் ராக்கர் ஃபெல்லர் பல்கலைக்கழகம்) ஆகியோருக்கு கூட்டாக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு சிரோசிஸ் எனப்படும் கல்லீரல் செல்களை அழித்தல் நோய் மற்றும் கல்லீரல் புற்றுநோயை ஏற்படுத்தும் ரத்தத்தில் பரவும் ஹெபாடைடிஸ் வைரஸுக்கு எதிராக கண்டுபிடிப்புகளைச் செய்தமைக்காக இந்த விருது வழங்கப்படுகிறது.
இந்த 3 விஞ்ஞானிகளும் ஏற்கெனவே ஹெபாடைடிஸ் ஏ, பி வைரஸ்களையும் கண்டுபிடித்திருந்தனர். இதுதான் ஹெபாடைடிஸ் சி வைரஸ் ஆய்வுக்கான முதல் படியாக அமைந்தது. இந்த ஹெபாடைடிஸ் சி வைரஸ் கண்டுபிடிப்பின் மூலம் நாள்பட்ட ஹெபாடைடிஸ் ஏற்படுவதற்கான காரணத்தை ரத்தப் பரிசோதனைகள் மூலம் கண்டறிய உதவின. கோடிக்கணக்கான மனித உயிர்களைக் காப்பாற்ற புதிய மருந்துகள் கண்டுபிடிப்பையும் சாத்தியமாக்கியது.
இதில் அமெரிக்க விஞ்ஞானி சார்லஸ் எம். ரைஸ் ஆய்வின்படி, கல்லீரலில் நோய் வருவதற்கு முக்கியக் காரணம் ஹெபாடைடிஸ் சி வைரஸ்தான் என்று உறுதியான கண்டுபிடிப்பை அளித்தார். அமெரிக்க விஞ்ஞானி ஹார்வே ஜே.ஆல்டர் (வைரலாஜிஸ்ட்), பிரி்ட்டன் விஞ்ஞானி மைக்கேல் ஹாட்டன் ஆகிய இருவரும் சேர்ந்து ஹெபாடைடிஸ் சி வைரஸின் மரபணுவைத் தனிமைப்படுத்திய உத்திக்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
வரலாற்றிலேய முதல் முறையாக, ஹெபாடைடிஸ் சி வைரஸை இப்போதுதான் குணப்படுத்த முடிகிறது. இவர்களின் கண்டுபிடிப்புகள் நாள்பட்ட ஹெபாடைடிஸ் ஏற்படுவதற்கான காரணத்தை ரத்தப் பரிசோதனைகள் மூலம் கண்டறிய உதவின. கோடிக்கணக்கான மனித உயிர்களைக் காப்பாற்ற புதிய மருந்துகள் கண்டுபிடிப்பையும் சாத்தியமாக்கியது.
மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட 3 விஞ்ஞானிகளுக்கும் தங்கப் பதக்கமும், 11 லட்சத்து 18 ஆயிரம் அமெரிக்க டாலர்களும் வழங்கப்படும். கடந்த ஆண்டு பிரிட்டன் விஞ்ஞானிகள் பீட்டர் ராட்கிளிப், அமெரிக்க விஞ்ஞானி வில்லியம் காலின், கிரேக் செமன்ஸா ஆகியோருக்கு வழங்கப்பட்டது. மனித உடலில் ஆக்ஸிஜன் அளவு குறைந்தால், உடலில் உள்ள செல்கள் எவ்வாறு உணர்கின்றன என்பதை இவர்கள் கண்டறிந்தனர்.