மும்பையை சேர்ந்த சர்வதேச மக்கள் அறிவியல் அமைப்பை சேர்ந்த நிபுணர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது நாடு முழுவதும் புற்றுநோயால் பாதித்தவர்கள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
தமிழ்நாட்டில் நகர பகுதிகளில் புற்றுநோய் பாதிப்பு அதிகமாக உள்ளது. இது 2025-ம் ஆண்டிலும் தொடரும். இதேநிலை அனைத்து மாநிலங்களிலும் இருக்கும்.
மேலும் தற்போது நிலவரப்படி நாட்டின் கிராமப் புறங்களில் 9 லட்சத்து 45 ஆயிரத்து 6 பேரை புற்று நோய் தாக்கியுள்ளது. அது படிப்படியாக அதிகரித்து 2025-ம் ஆண்டில் 11 லட்சத்து 58 ஆயிரத்து 213 ஆக உயரும் என அஞ்சப்படுகிறது.
அதே நேரத்தில் கிராமம் மற்றும் நகர்ப்புறம் என அனைத்து பகுதிகளிலும் தற்போது 13 லட்சத்து 72 ஆயிரத்து 885 பேருக்கு புற்று நோய் பாதிப்பு உள்ளது. 2025-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 17 லட்சத்து 96 ஆயிரத்து 975 ஆக அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
பல மாநிலங்களில் நகரப் பகுதிகளை விட கிராமப் புறங்களில் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது உத்தரபிரதேசத்தில் கிராமப்புறங்களில்தான் மிக அதிக அளவில் புற்று நோயாளிகள் உள்ளனர்.
இதற்கு அடுத்தப்படியாக பீகார் மற்றும் மேற்கு வங்காளத்தின் கிராமங்களில் அதிக புற்று நோயாளிகள் உள்ளனர். 2025-ம் ஆண்டில் இதேநிலையில் புற்று நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
உத்தரபிரதேசத்தில் நகர பகுதிகளில் பெண்களை விட ஆண்களிடம் அதிக அளவில் புற்றுநோய் பாதிப்பு உள்ளது. லட்சத்தீவு, டாமன், டையூ மற்றும் சிக்கிம் மாநிலங்களில் ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலருக்கும் புற்றுநோய் பாதிப்பு குறைந்த அளவில் உள்ளது.
மொத்தத்தில் நாடு முழுவதும் வருகிற 2020-ம் ஆண்டில் புற்றுநோயால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 16 லட்சமாக இருக்கும். 2025-ம் ஆண்டில் 18 லட்சமாக உயரும் என்றும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.