21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
சந்தனப்பேழை மெல்ல பூமிக்குள் இறக்கப்பட்டது. குடும்பத்தினர் கண்ணீரை அடக்க முடியாமல் கதறி அழ தொண்டர்கள் ‘கலைஞர் வாழ்க’ என்று கோஷம் எழுப்பினர். ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இங்கு ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறான்.
நிகழ் பதிவு நிறைவுற்றது
6.50PM: கருணாநிதி உடல் சந்தனப்பேழையில் வைக்கப்பட்டுள்ளது, கனிமொழி தந்தையின் உடலருகே வந்து அவர் முகத்தைக் கையால் தொட்டுப் பார்த்தார். குடும்ப உறுப்பினர்கள் கடைசியாக ஒருமுறை தங்கள் பாசமிகு தந்தையைத் தலைவரை கண்ணீருடன் பார்த்தனர். அழகிரி, ஸ்டாலின் கண்ணீரை அடக்க முடியாமல் வாய்விட்டு அழுகின்றனர். சந்தனப்பேழை மூடப்படுகிறது. ஸ்டாலின், செல்வி அழுகின்றனர்.
6.45 PM: திமுக நிர்வாகிகள் அஞ்சலி, திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் இறுதி அஞ்சலி.
6.40PM: முதலில் ஸ்டாலின் மலராஞ்சலி செய்கிறார். பிறகு மு.க. அழகிரி, கருணாநிதி மனைவி ராஜாத்தி அம்மாள், அஞ்சலி செலுத்தினர். கனிமொழி கணவர் அஞ்சலி செலுத்தினர், மறைந்த முரசொலி மாறன் மனைவி மல்லிகா மாறன் பிறகு மாறன் சகோதரர்கள் அஞ்சலி செலுத்தினர்.
6:30 PM: ஆளுநர் பன்வாரிலால் முப்படை வாத்தியம் ஒலிக்கிறது. உடன் ஒரு அமைதி. மூவர்ணக்கொடி ஸ்டாலினிடம் ஒப்படைக்கபட்டது.
06:15 PM: கருணாநிதியின் இறுதி ஊர்வலம் அவரது உடல் அடக்கம் செய்யப்படும் அண்ணா சமாதி பகுதிக்கு வந்து சேர்ந்தது.
நல்லடக்கத்துக்கு ஏற்பாடுகள் தயார்
06:10 PM: கருணாநிதியின் இறுதி ஊர்வலம் அடக்கம் செய்யப்படவுள்ள அண்ணா சமாதியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. கருணாநிதியின் உடலை நல்லடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் தேவகவுடா, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், தமிழக அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வந்துள்ளனர்.
05:50 PM: கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ள இடத்திற்கு கருணாநிதியின் குடும்பத்தினர், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் வந்துள்ளனர்.