2ஜி முறைகேடு வழக்கில் தீர்ப்பு : ஆ.ராசா,கனிமொழி விடுவிப்பு..


2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் வழக்கில், முன்னாள் தொலைதொடர்பு அமைச்சர் ஆ.ராசா மற்றும் திமுக எம்.பி., கனிமொழி உள்ளிட்ட அனைவரையும் விடுவித்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்த வழக்கில் எவ்விதமான குற்றச்சாட்டுமே நிரூபிக்கப்படவில்லை, போதுமான ஆதாரங்கள் இல்லை என்ற அடிப்படையில் குற்றஞ்சாட்டப்பட்ட அனைவருமே வழக்கிலிருந்து விடுவிக்கப்படுவதாக நீதிபதி ஓ.பி.சைனி தெரிவித்துள்ளார். குற்றஞ்சாட்டப்பட்ட 16 பேரும் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தீர்ப்பு வெளியானதையடுத்து கனிமொழி, தனக்கு ஆதரவளித்த அனைவருக்குமே நன்றி எனத் தெரிவித்தார்.

வழக்கு பின்னணி:

காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக, திமுகவை சேர்ந்த ஆ.ராசா இருந்தபோது, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக, மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம் அறிக்கை தாக்கல் செய்தது.

இந்த முறைகேடு காரணமாக, அரசுக்கு, ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஏற்பட்ட சர்ச்சையால் ஆ.ராசா தனது பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் 2011 பிப்ரவரியில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கில் ஆ.ராசா, திமுக எம்.பி. கனிமொழி, தொலைத் தொடர்பு துறை முன்னாள் செயலாளர் சித்தார்த் பெஹுரா, ராசாவின் தனிச் செயலாளராக இருந்த ஆர்.கே.சந்தோலியா உள்ளிட்ட 14 பேர் மீதும் 3 தனியார் நிறுவனங்கள் மீதும் சிபிஐ வழக்கு தொடர்ந்தது. இது தொடர்பாக அமலாக்கத் துறையும் தனியே வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்குகளை, டெல்லி பாட்டியாலா ஹவுசில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி, ஓ.பி.சைனி வழக்கை விசாரித்து வந்தார். 6 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கின் விசாரணை, ஏப்ரல் 26-ம் தேதி முடிவுக்கு வந்தது. இன்று (வியாழன்) தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.

அதன் படி ஆ.ராசா மற்றும் கனிமொழி உள்ளிட்ட அனைவரையும் இந்த வழக்கில் இருந்து விடுவித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆட்சிப் பெருமிதம் காட்சிக்குத்தான் பயன்படும்!: தலையங்கன்(ம்)

அநீதி வீழும்; அறம்வெல்லும்: கருணாநிதி கருத்து…

Recent Posts