மக்களவை 2ம் கட்ட தேர்தல் : மற்ற மாநிலங்களிலுமே வாக்குப்பதிவு சுமார்தான்

தமிழகத்தில் மட்டுமின்றி, வியாழக்கிழமை இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்ற 10 மாநிலங்களிலுமே வாக்குப்பதிவு சுமார்தான்.

தமிழ்நாடு, புதுச்சேரி தவிர, மேற்குவங்காளம், ஜம்மு-காஷ்மீர், மகாராஷ்டிரா உட்பட 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில், பெரியளவில் அசம்பாவிதங்கள் எதுவும் இன்றி, இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெற்றது.

நாடு முழுவதும், கடந்த 11ஆம் தேதி தொடங்கிய மக்களவைத் தேர்தல், அடுத்த மாதம் 19ஆம் தேதி வரை, 7 கட்டங்களாக நடைபெறுகிறது. கடந்த 11ஆம் தேதி முதற்கட்டமாக, 91 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.

வியாழக்கிழமை, இரண்டாம் கட்டமாக, 95 மக்களவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு முன்னெடுக்கப்பட்டது. இதன்படி, நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் 14 தொகுதிகளுக்கும், மகாராஷ்டிராவின் 10, உத்தரப்பிரதேசத்தின் 8, பீகார், அசாம், ஒடிசா ஆகிய மாநிலங்களில், தலா 5 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது.

மேற்குவங்கம் மற்றும் சத்தீஸ்கரின் 3 தொகுதிகள், காஷ்மீரின் 2 தொகுதிகள், மணிப்பூரில் ஒரு தொகுதிக்கும் தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

சுமார் ஆயிரத்து 600 வேட்பாளர்கள் களம் கண்ட இந்த தேர்தலில், மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், ஜூவல் ஓராம், சதானந்த கெளடா, முன்னாள் பிரதமர் தேவகெளடா, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் வீரப்ப மொய்லி, ராஜ் பப்பர், பாஜக எம்.பி ஹேமாமாலினி, தேசிய மாநாட்டு கட்சி தலைவர் ஃபரூக் அப்துல்லா உள்ளிட்ட முக்கியமான வேட்பாளர்கள் ஆவர்.

ஒடிசா மாநிலத்தில், மக்களவைத் தேர்தலுடன், சட்டப்பேரவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. முதலமைச்சர் நவீன் பட்நாயக் போட்டியிடும் கஞ்சாம், பிஜேப்பூர் ஆகிய தொகுதிகள் உட்பட 35 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. மேற்கு வங்கம், ஜம்மு காஷ்மீர் மாநிலங்களிலும் தேர்தல் நடைபெற்றது.

8 மணி அளவில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவலின் படி வியாழக்கிழமை இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்ற மாநிலங்களின் வாக்குப் பதிவு விவரங்கள் வருமாறு:

தமிழ்நாடு – 66.365

அஸ்ஸாம் – 76.2%

பீகார் – 62.38%

ஜம்மு காஷ்மீர் – 45.5%

கர்நாடகா – 67.67%

மகாராஷ்ட்ரா – 61.22%

மணிப்பூர் – 67.15%

ஒடிசா – 57.97%

உத்தரப்பிரதேசம் – 66.06%

மேற்கு வங்கம் – 76.42%

சத்தீஸ்கர் 71.40%

புதுச்சேரி – 76.19%