2-வது டெஸ்ட் தொடர் : இந்திய அணி அபார வெற்றி..

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2வது டெஸ்டில் பேட்டிங், பவுலிங்கில் அசத்திய இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதனையடுத்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என முழுமையாக கைப்பற்றி கோப்பை வென்றது.

இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் போட்டியில் இந்திய அணி வென்றது.

இரண்டாவது டெஸ்ட் ஐதராபாத்தில் நடந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 311 ரன்கள் எடுத்தது.

இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 308 ரன்கள் எடுத்திருந்தது. ரகானே (75), ரிஷாப் (85) அவுட்டாகாமல் இருந்தனர்.

மூன்றாம் நாள் ஆட்டத்தில் கேப்டன் ஹோல்டர் ‘வேகத்தில்’ நெருக்கடி கொடுத்தார். இவரது 84வது ஓவரில் ரகானே (80), ஜடேஜா (0) ஆட்டமிழந்தனர்.

கேப்ரியல் பந்தில் சிக்கிய ரிஷாப் (92) மீண்டும் சத வாய்ப்பை இழந்தார். குல்தீப்பை (6) வெளியேற்றிய ஹோல்டர், 5வது விக்கெட்டை வீழ்த்தினார்.

உமேஷ் (2) ஒற்றை இலக்கில் திரும்பினார். கேப்ரியல் ‘வேகத்தில்’ அஷ்வின் (35) சிக்க, இந்திய அணி முதல் இன்னிங்சில் 367 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, 56 ரன்கள் முன்னிலை பெற்றது.

வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அதிகபட்சமாக ஹோல்டர் 5 விக்கெட் வீழ்த்தினார்.

பின், இரண்டாவது இன்னிங்சை துவக்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பிராத்வைட் (0) அதிர்ச்சி தந்தார். அஷ்வின் ‘சுழலில்’ பாவெல் (0) டக் அவுட்டானார். ஹெட்மயர் (17) விரைவில் திரும்பினார்.

ஜடேஜா பந்தில் ஹோப் (28) சிக்கினார். உமேஷ் யாதவ் ‘வேகத்தில்’ சேஸ் (6), டவ்ரிச் (0), கேப்ரியல் (1) போல்டாகினர். ஜடேஜா ‘சுழலில்’ அம்பிரிஸ் (38), கேப்டன் ஹோல்டர் (19) அவுட்டாகினர்.

இரண்டாவது இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் அணி 127 ரன்னுக்கு சுருண்டது. இந்தியா சார்பில் உமேஷ் யாதவ் 4, ஜடேஜா 3, அஷ்வின் 2, குல்தீப் ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

பின், 72 ரன் எடுத்தால் வெற்றி என்ற சுலப இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 2வது இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 75 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பிரித்வி ஷா (33), லோகேஷ் ராகுல் (33) அவுட்டாகாமல் இருந்தனர்.