“2015-ல் நடந்த முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் படு தோல்விகளை, வண்ண மயமான தோரணங்களாகவும், ஆடம்பர வரவேற்பு வளைவுகளாகவும்,
மிகுந்த பணச்செலவிலான விளம்பரங்களாகவும் அமைத்து, கொலை-கொள்ளை புகார் கூறப்பட்டுள்ள நிலையில், இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி,
அதை அரசின் செலவில் அதிமுகவின் தேர்தல் பிரச்சார மாநாடாக மாற்றியிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
மூன்று லட்சத்து 431 கோடி ரூபாய் முதலீடுகளைப் பெறும் வகையில், பத்து லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க
304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளதாக தனது நிறைவுரையில் வரைமுறையின்றி அளந்துவிட்டிருக்கும் அவர், “2019-ம் ஆண்டிற்கான” முதல் பொய் வாக்குறுதியை அவிழ்த்து விட்டு-
கடைசி நேரத்திலும் தமிழக மக்களை தன்னால் இயன்ற அளவிற்கு ஏமாற்றி விடலாம் என்று பகல் கனவு கண்டு கொண்டிருக்கிறார்.
2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9 மற்றும் 10 தேதிகளில் நடைபெற்ற முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில்
“2.42 லட்சம் கோடி முதலீடுகள் மூலம் 4.69 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன” என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
இந்த அறிவிப்புகள் “விதி-110” அறிவிப்புகள் போலவே கடைசி வரை பொய்யாய் பழங்கதையாய் கானல் நீராகி மறைந்து போனது.
தமிழகத்தில் தொழில் தொடங்க முனைவோருக்கு அதிமுக அரசின் மீது தேவையான நம்பிக்கையில்லை என்பதே அதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.
ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு முதல்வர்களான ஓ.பன்னீர்செல்வமோ, தற்போது முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமியோ
மறைந்த ஜெயலலிதா போட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களை நிறைவேற்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அந்த ஒப்பந்தங்கள் போட்ட தொழில் முனைவோரைக் கூட அழைத்துப் பேச ஆர்வம் இல்லை.
அதிமுக ஆட்சியின் வரலாறு காணாத “கமிஷன், கலெக்ஷன், கரெப்ஷன்” ஆகியவற்றால் நம்பிக்கையிழந்த முதலீட்டாளர்கள் வேறு மாநிலத்திற்குச் சென்று விட்டார்கள்.
எத்தனையோ முறை சட்டமன்றத்தில் “முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்து ஒரு வெள்ளையறிக்கை தாக்கல் செய்யுங்கள்” என்று வலியுறுத்தினேன்.
ஆனால் அப்படியொரு வெள்ளையறிக்கை வெளியிட வக்கும் வழியும் இன்றி, வாய்ப்பும் இன்றி முடங்கிப் போனது
அதிமுக அரசு. என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் இரு முதல்வர்களும் சட்டமன்றத்தில் தவித்ததை நான் நேரில் பார்த்திருக்கிறேன்.
இந்நிலையில் இந்த வருடத்தின் துவக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆளுநர் உரையில், 62 ஆயிரம் கோடி முதலீடு வந்திருக்கிறது என்று மட்டும் கூறப்பட்டது.
ஆளுநர் உரையில் அளிக்கப்பட்டுள்ள இந்த ஒப்புதல் வாக்குமூலத்தின்படி, 1 லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை
தமிழகத்தில் செய்வதற்கு தயாராக இருந்த முதலீட்டாளர்கள் இந்த இரு முதல்வர்களின் ஆட்சியில் தமிழகத்தை விட்டுவெளியேறி விட்டார்கள்.
இதனால் அவர்கள் மூலம் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய 4 லட்சத்து 3 ஆயிரம் வேலை வாய்ப்பும் வேறு மாநிலங்களுக்கு சென்று விட்டது.
இதுதான் முதல் மாநாட்டில் போடப்பட்ட 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் கதி.
மூன்று முதல் ஏழு வருடங்களுக்குள் வர வேண்டிய முதலீடுகள் அவை என்று முதலமைச்சர் மிகுந்த சிரமப்பட்டு சப்பைக் கட்டு கட்டினாலும்,
முதல் மாநாடு முடிந்த பிறகு, நான்காவது வருடத்தில் கூட புரிந்துணர்வு போட்ட ஒப்பந்தங்களில் 25 சதவீதத்தைக் கூட நிறைவேற்ற முடியாத கையாலகாத அதிமுக அரசாக
எடப்பாடி பழனிச்சாமியின் அரசு நீடிக்கிறது என்பதுதான் அனைவரும் அறிந்த உண்மை.
உதாரணத்திற்கு சிலவற்றை குறிப்பிட வேண்டுமென்றால் தகவல் தொழில் நுட்பத் துறையில் போடப்பட்ட 10950 கோடி ரூபாய்க்கான 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில்,
3028 கோடி ரூபாய் மதிப்பில் 6 திட்டங்கள் மட்டுமே செயல்படுத்தப்பட்டுள்ளது. முதல் மாநாடு போட்டதிலிருந்து அந்நிய முதலீடுகள் ஒவ்வொரு வருடமும் குறைந்து கொண்டே வந்திருக்கிறது. 2015-ல் 19811 கோடி.
2016-ல் அதில் பாதி 6172 கோடி, 2017-ல் அதிலும் பாதியாக 3131 கோடி ரூபாய் என்று மளமளவென அந்நிய முதலீடுகள் சரிந்து,
நாட்டில் உள்ள மாநிலங்களில் முதல் பத்து இடங்களுக்குள் தமிழகம் வர முடியவில்லை. தென் மாநிலங்களிலும் முதலிடத்தை எட்ட முடியவில்லை.
நாட்டிற்குள் வந்த அந்நிய முதலீடுகளில் தமிழகம் பெற்றது 0.79 சதவீதம் என்பதன் மூலமே, இந்த ஆட்சியின் மீதான நம்பிக்கை காய்ந்து வெளுத்து விட்டது.
ஆகவே முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாடு முற்றிலும் தோல்வியடைந்து, கொலை, கொள்ளை குற்றச்சாட்டிற்கும்,
பலரும் பல்வேறு வகையான ஊழல் குற்றச்சாட்டிற்கும் உள்ளாகியுள்ள எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சி நம்பகத்தன்மை,
தார்மீக உரிமை என எல்லாவற்றையும் இழந்து உடுக்கை இழந்தவன் கை போல் தத்தளித்து நிற்கிறது.
ஊழல் ஆட்சியின் கீழ் போடப்பட்டுள்ள இந்த 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் முழு விவரங்களும் வெளி வந்த பிறகுதான்
அவை செயல்வடிவம் பெறுவதற்காக போடப்பட்ட ஒப்பந்தங்களா அல்லது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நடத்திய மாநாட்டை விட அதிகமாக
நான் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டிருக்கிறேன் என்ற ஒரு அலங்கார புளுகுக் கணக்கு காட்ட போடப்பட்ட ஒப்பந்தங்களா என்பது தெரிய வரும்.
ஏனெனில் கல்லூரிகள் வைத்திருப்போரையும்,தொழில் நிறுவனங்கள் நடத்துவோரையும் அதிகார துஷ்பிரயோகத்தின் மூலம் மிரட்டி போட வைக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக வரும் முதலீடுகள் பல இந்த ஒப்பந்தங்களில் உள்ளது. சாலைகளின் பல சந்திப்புகளில் வைக்கப்பட்ட ஒலிபெருக்கிகளில் “முதலீடு செய்யுங்கள்” என்று விளம்பரம் செய்வதற்குப் பதில் தி.மு.க.வை திட்டும் ஜெயலலிதாவின் பேச்சுக்கள்தான் ஒலிபரப்பப் பட்டன.
அது மட்டுமின்றி இரு நாட்கள் நடைபெற்ற இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்காக உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளுக்கு அமைச்சர்கள் உல்லாசப் பயணம் மேற்கொள்ள அனுமதித்து
ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள முயற்சி செய்ததும், சென்னையில் உள்ள முச்சந்திகளிலும், சாலை சந்திப்புகளிலும் எடப்பாடி பழனிச்சாமியின் படத்தை வைத்து விளம்பரம் செய்து- அரசின் பணத்தை வீணடித்ததும்தான் இந்த மாநாட்டின் முக்கிய சாதனை.
டாவோஸில் 2019-ம் ஆண்டின் உலகப் பொருளாதார அமைப்பின் கூட்டம் நடைபெறுகின்ற நேரத்தில் சர்வதேச முதலீட்டாளர்கள் வர மாட்டார்கள் என்று தெரிந்தும் நடத்தப்பட்ட இந்த இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு, ஒரு “மாயமான் காட்சி” என்பது மட்டுமே உண்மை.”
இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.