முக்கிய செய்திகள்

‘3 டயர்கள் பஞ்சரான காரைப் போன்று இந்திய பொருளாதாரம்’: ப.சிதம்பரம் சாடல்..


3 டயர்களும் பஞ்சரான காரைப் போன்று இந்தியப் பொருளாதாரத்தின் நிலை இப்போது இருக்கிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் மத்திய அரசுமீது கடுமையாகச் சாடியுள்ளார்.

மஹாராஷ்டிர காங்கிரஸ் கட்சி சார்பில் தானே நகரில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குத் தனியார் முதலீடு, தனியார் நிறுவனங்கள் நுகர்வு, ஏற்றுமதி மற்றும் அரசின் செலவினங்கள் ஆகியவை 4 இயந்திரங்களும் முக்கியமானது. இவை நான்கும் ஒரு காரின் 4 டயர்களைப் போன்றது. இதில் ஒரு டயர் அல்லது இரு டயர்கள் பஞ்சரானால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைந்து சரிந்துவிடும். இப்போது, பாஜக ஆட்சியில் நாட்டின் பொருளாதாரத்தின் 3 டயர்களும் பஞ்சரான நிலையில் இருக்கிறது.

மக்களுக்கான சுகாதாரத்திட்டத்தில் மட்டுமே அரசின் செலவினங்கள் இருந்து வருகின்றன. இந்தச் செலவுகள் தொடர்ந்து கொண்டிருக்கையில், மற்றொரு புறம் பெட்ரோல், டீசல், சமையல் சிலிண்டருக்கு வரி விதித்து வருகிறது மத்திய அரசு. மக்களை கசக்கிப் பிழிந்து அவர்களிடம் வரியை வசூலிக்கும் மத்திய அரசு, அவர்களின்பணத்தையே சுகாதாரத்துக்காகச் செலவிடுகிறது.

எரிசக்தி துறையில் சமீபத்தில் எந்தவிதமான முதலீடுகளும் வந்துள்ளதா எனப் பார்த்தீர்களா?. உதாரணமாக நாட்டில் உள்ள மிகப்பெரிய 10 நிறுவனங்கள் திவால்சட்டத்தின் கீழ் மனுச் செய்துள்ளன. அதில் 5 நிறுவனங்கள் உருக்கு நிறுவனங்கள். இப்படிப்பட்ட சூழலில் முதலீடு எப்படி நாட்டுக்குள் வரும்?

ஜிஎஸ்டி வரி சிறப்பான வரிதான். ஆனால், அதை நடைமுறைப்படுத்தத் தெரியாமல் மத்திய அரசு செயல்படுகிறது. 5 அடுக்குகள் கொண்டதாக ஜிஎஸ்டி வரியை அறிமுகப்படுத்தினார்கள்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை நடந்து முடிந்து சில மாதங்களுக்குள் ஜிஎஸ்டி வரியைப் புகுத்தி மக்களைத் துன்பத்துக்கு ஆளாக்கினார்கள். ஜிஎஸ்டி வரி என்பது ஒற்றை வரி கொண்டமுறையாகும். ஆனால், நம் நாட்டில் 2 வரி முறைகள் இருந்தன. ஆனால், இப்போது, 5 வகையான வரிகள் இருக்கின்றன. அப்படியென்றால், ஜிஎஸ்டி கொண்டு வந்து என்ன பயன்.

நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைகளை எப்படித் தீர்ப்பது எனத் தெரியாமல், மத்திய அரசு திணறுகிறது. இப்போதுள்ள நிலையில் நிலைமை மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் ஏற்றுமதி 31500 கோடி டாலராக இருந்தது. ஆனால், ஆனால், கடந்த ஏற்றுமதி 30300 கோடியாக மட்டுமே இருக்கிறது. இதன் மூலம் ஏற்றுமதியும் குறைந்து வருகிறது, வருவாயும் சரிந்து வருகிறது என்பதைக் காட்டுகிறது.

பிரதமர் முத்ரா திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் வரை கடன் கொடுத்திருப்பதாக மத்திய அரசு கூறுகிறது. ஆனால், கடன் கொடுக்கப்பட்ட பணத்தின் மதிப்பும், பெற்றவர்களையும் கணக்கிட்டால், சராசரியாக ஒருநபருக்கு ரூ. 43 ஆயிரம் மட்டுமே கடன் கொடுக்கப்பட்டுள்ளது. இது மிககுறைவான தொகையாகும். இந்த பணத்தை வைத்து ஒருவர் பக்கோடா கடை மட்டுமே தொடங்க முடியும்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு செய்துள்ள பொருளாதார தவறுகள் அனைத்தும் சரி செய்யக்கூடியவைதான்.

நாட்டு மக்களிடையேயும் மத்தியில் ஆளும் மோடி அரசு ஒருவிதமான ஒற்றுமையில்லாத சூழலை உருவாக்குகிறது. மக்களில் குறிப்பிட்ட பிரிவினரை 2-ம் தரக் குடிமகன்களாக நடத்துகிறது. அவர்களின் உணவு முறையை, சமூக பழக்கவழக்கத்தை மாற்ற முயல்வது, ஆன்ட்டி ரோமியோ திட்டம் போன்றவை கொந்தளிப்பை ஏற்படுத்துகிறது

இவ்வாறு ப.சிதம்பரம் பேசினார்.