முக்கிய செய்திகள்

3 அரசியல் தலைவர்கள் இன்று விடுதலை: காஷ்மீர் அரசு முடிவு…

ஜம்மு காஷ்மீரில் அமைதி திரும்பி வரும் நிலையில், மூன்று முக்கிய அரசியல் தலைவர்களை இன்று விடுதலை செய்ய அம்மாநில அரசு நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு, அரசியலமைப்பு 370-வது பிரிவை கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி திரும்பப்பெற்றது மத்திய அரசு. இதையடுத்து,

முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, எம்.பி. பரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

தொலைத்தொடர்பு இணைப்புகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டது. மேலும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை திரும்பியதும் கொஞ்சம் கொஞ்சமாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.

அமைதி நிலவ தொடங்கியதால் காவலில் வைக்கப்பட்டுள்ள தலைவர்களை படிப்படியாக விடுவிக்கும் நடவடிக்கையை காஷ்மீர் அரசு நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

இந்தநிலையில் மூன்று முக்கிய அரசியல் தலைவர்களை இன்று விடுதலை செய்ய காஷ்மீர் அரசு முடிவு செய்துள்ளது.

மக்கள் ஜனநாயக கட்சியின் முன்னாள் எம்எல்ஏ யாவர் மீர், காஷ்மீர் மாநில காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்து பின்னர் அக்கட்சியில் இருந்து விலகிய நூர் முகமது,

மக்கள் மாநாட்டுக் கட்சித் தலைவர் சஜத் லோனுக்கு நெருக்கமாக விளங்கும் முக்கிய தலைவரான சோஹிப் லோன் ஆகிய மூன்று பேரும் இன்று வீட்டுக்காவலில் இருந்து விடுதலை செய்யப்படுகின்றனர்.

காஷ்மீர் அரசு முன்வைத்த நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில் அவர்கள் விடுவிக்கப்படுகின்றனர்.