இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 161 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது.
இங்கிலாந்து – இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் டிரென்ட்ஜ் பிரிட்ஜ்-யில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இந்தியா விராட் கோலி (97), ரகானே (81) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் முதல் இன்னிங்சில் 329 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து அணி சார்பில் ஆண்டர்சன், கிறிஸ் வோக்ஸ், ஸ்டூவர்ட் பிராட் தலா மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கியது. அந்த அணி மதிய உணவு இடைவேளை வரை 9 ஓவரில் 46 ரன்கள் எடுத்து விக்கெட் ஏதும் இழக்கவில்லை. மதிய உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியதும் இந்திய பந்து வீச்சாளர்கள் அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்தினார்கள். இஷாந்த் ஷர்மா வீசிய 12-வது ஓவரின் கடைசி பந்தில் குக் 29 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரின் முதல் பந்தில் ஜென்னிங்ஸ் 20 ரன்கள் எடுத்த நிலையில் பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார். 54 ரன்னில் இங்கிலாந்து அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுக்களை இழந்தது.
அதன்பின் வந்த போப்பை 10 ரன்னில் வெளியேற்றினார் இசாந்த் ஷர்மா. அப்போது இங்கிலாந்து 75 ரன்கள் எடுத்திருந்தது. 25-வது ஓவரை ஹர்திக் பாண்டியா வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் ஜோ ரூட் 16 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். பந்து ஸ்விங் ஆனதை ஹர்திக் பாண்டியா சிறப்பாக பயன்படுத்தினார். இவரது பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் பேர்ஸ்டோவ் (15), பென் ஸ்டோக்ஸ் (10), கிறிஸ் வோக்ஸ் (8) அடில் ரஷித் (5), ஸ்டூவர்ட் பிராட் (0) ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறினார்கள்.
இதனால் இங்கிலாந்து 128 ரன்னுக்குள் 9 விக்கெட்டுக்களை இழந்தது. கடைசி விக்கெட்டுக்கு பட்லர் உடன் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஜோடி சேர்ந்தார். ஆண்டர்சனை வைத்துக் கொண்டு பட்லர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஷமி வீசிய 34-வது ஓவரில் இரண்டு பவுண்டரி, ஒரு சிக்ஸ் உடன் 16 ரன்கள் சேர்த்தார்.
ஹர்திக் பாண்டியா வீசிய அடுத்த ஓவரில் ஒரு பவுண்டரி அடித்தார். 36-வது ஓவரின் 3-வது பந்தில் பட்லர் இரண்டு ரன்கள் எடுத்தார். இதன்மூலம் இங்கிலாந்து 150 ரன்னைத் தொட்டது. இங்கிலாந்து 161 ரன்கள் எடுத்திருக்கும்போது இங்கிலாந்து பும்ரா பந்தில் பட்லர் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஹர்திக் பாண்டியா 6 ஓவரில் 28 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுக்கள் சாய்ந்தார். இஷாந்த் ஷர்மா, பும்ரா தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.
இந்தியா முதல் இன்னிங்சில் 168 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. 2-வது இன்னிங்சில் 200 ரன்கள் அடித்தால் இந்தியா வெற்றி பெற வாய்ப்புள்ளது.
3rd test day 2: England all out on 161 in their first inning, India takes the lead of 168 runs