முக்கிய செய்திகள்

அரக்கோணம் அருகே 11ஆம் வகுப்புப் படித்த 4 பள்ளி மாணவியர் தற்கொலை!

வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே ராமாபுரம் பகுதியில், அரசுமேல்நிலைப்பள்ளியில் படித்த 4 மாணவிகள் ஆசிரியர் திட்டியதால் மனமுடைந்து விவசாயக் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டனர். காணாமல் போன 4 மாணவிகளில், மூவரின் சடலங்கள் விவசாயக்கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.

பணப்பாக்கத்தைச் சேர்ந்த தீபா, சங்கரி, மனிஷா, ரேவதி உள்ளிட்ட 6 மாணவியர் ராமாபுரம் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் 11 ஆம் வகுப்புப்படித்து வந்தனர். பருவத்தேர்வில் மதிப்பெண் குறைவாக எடுத்ததால் தலைமை ஆசிரியர் இவர்கள திட்டியதாக கூறப்படுகிறது. மேலும் அடுத்த நாள் பள்ளிக்கு பெற்றோரை அழைத்து வருமாறு கூறியுள்ளார்.  மாணவியர் கூறியதை பெற்றோர் பொருட்படுத்தவில்லை எனத் தெரிகிறது. இதனால், அஞ்சியபடியே பள்ளிக்குச் சென்ற 6 மாணவியரையும் ஆசிரியர்கள் மீண்டும் திட்டியுள்ளனர். பள்ளிக்கு வெளியேயும் நிறுத்திவைத்து தண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த 6 மாணவியரும் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து பள்ளியில் இருந்து 3 கி.மீ மீட்டர் தொலைவில் உள்ள விவசாயக் கிணற்றிற்கு சென்றுள்ளனர். அங்கே முதலில் மனிஷா என்ற மாணவி கிணற்றில் குதித்துள்ளார். தீபா, சங்கரி, ரேவதி என்ற மூன்று மாணவியரும் அடுத்தடுத்து கிணற்றில் குதித்துள்ளனர். இதைப்பார்த்த மற்ற இரு மாணவியரும், தற்கொலை செய்து கொள்ள அஞ்சி அங்கிருந்து ஓடிப்போய், கிராமத்து மக்களிடம் நடந்ததைக் கூறியுள்ளனர். இதையடுத்து பொதுமக்கள் காவல்துறைக்கும், தீயணைப்புப்படையினருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புப் படையினர் கிணற்றில் குதித்த மாணவியரில் மனிஷாவின் உடலைத் தவிர மற்ற 3 பேரது உடல்களையும் மீட்டுள்ளனர். 65 அடி ஆழம் என்பதால் மனிஷாவின் உடல் மிகவும் ஆழத்தில் புதைந்து விட்டது. இதனிடையே, அரக்கோணத்தில் இருந்து வந்த தேசிய பேரிடர் மீட்புப்படையினர் 5 மணி நேரப்போராட்டத்திற்கு பின்னர் இரவு மாணவி மனிஷாவின் உடலையும் மீட்டனர். 4 பேரது உடல்களும் வேலூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டன. மாணவியரின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்க 4 குழுக்கள் அமைக்கப்பட்டிருப்பதாக வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பகலவன் தெரிவித்துள்ளார். 

4 woman school students suicide near Arakkonam