4 ஆண்டுகளில் விலைவாசி உயர்வே மோடி ஆட்சியின் சாதனை : கொல்கத்தா கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு

கொல்கொத்தாவில் நடைபெறும் எதிர்க்கட்சிகளின் மாநாட்டில் கலந்துக்கொண்ட திமுக தலைவர் ஸ்டாலின் கூட்டத்தை கூட்டியதன் நோக்கம் குறித்து பேசினார். அனைவரின் ஒற்றுமை மூலம் பாஜகவை வீழ்த்தலாம் என்று தெரிவித்தார்.

அவரது பேச்சு வருமாறு:

வங்கத்துப் புலிகளே உங்களுக்கு தமிழ்நாட்டு ஸ்டாலினின் அன்பு வணக்கங்கள், பலநூறு மைல்கள் தாண்டி இங்கு வந்துள்ளேன். தூரம் அதிகம் இருந்தாலும் ஒரே நேர்க் கோட்டில்தான் இருக்கிறோம். கொல்கத்தா திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை நம்மை இணைத்திருக்கிறது.

தமிழுக்கு மிக நெருக்காமன ஒரு மொழி உண்டென்றால், தமிழில் அதிகம் மொழிப்பெயர்க்கப்பட்ட மொழி வங்கமொழி. வங்கத்து விவேகானந்தருக்கு எங்கள் குமரியில் நினைவுச் சின்னம் அமைத்துள்ளோம். மகாகவி ரவீந்திரநாத் தாகூர் தன்னுடைய சாந்தி நிகேதனை அமைக்க நிதி திரட்ட தமிழகம் வந்திருந்தார்.

எங்கள் தமிழ்க்கவி பாரதி தன்னுடைய குருவாக ஏற்றுக்கொண்டது வங்கத்தில் வாழ்ந்த சுவீடிஷ் பெண்மணி நிவேதிதாவைத்தான். வங்கத்து நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மீண்டும் பிறந்தால் தமிழனாக பிறக்கவேண்டும் என்றார். இப்படி அரசியல், இலக்கியம், ஆன்மிகம் அனைத்திலும் தமிழனும் வங்காளிகளும் சகோதர சகோதரிகள்.

இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்த வீரமிக்க இனங்களில் வங்கமும் தமிழகமும் முக்கியமானது. இதோ இரண்டாவது இந்தியாவின் இரண்டாவது சுதந்திர போராட்டத்தை முன்னெடுக்க வங்கத்து சகோதரி, இரும்புப்பெண்மணி மம்தாவின் அழைப்பை ஏற்று நான் இங்கு வந்துள்ளேன்.

வங்கத்து புலிகளே இந்தியாவின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம்தான் மே மாதம் நடக்க இருக்கிற ஜனநாயக  போர்க்களம். இந்தியாவின் ஒற்றுமையை குலைத்து மக்களிடையே மோதல்போக்கை உருவாக்கி மதவாதம் மூலம் நாட்டை பிரிக்க நினைக்கும் நச்சு சக்தியான பாஜகவிடமிருந்து நாட்டை மீட்பதுதான் சுதந்திரப் போராட்டம் என நான் சொல்கிறேன்.

இந்த மேடையில் நான் இந்தியாவைப்பார்க்கிறேன், வேற்று மொழிகளை, வேறு மாநிலங்களை, வெவ்வேறு கட்சிகளைச்சேர்ந்தவர்கள் உள்ளனர். அனைவரின் சிந்தனையும் ஒன்றுதான். பாஜகவை வீழ்த்தவேண்டும், நரேந்திரமோடியை வீட்டுக்கு அனுப்பவேண்டும்.

வேற்றுமையில் ஒற்றுமையை நம் முன்னோர்கள் தாரக மந்திரமாக சொன்னார்கள். ஆம் நாம் வேறுவேறாக இருந்தாலும் நம் சிந்தனை ஒன்றுதான். நாம் ஒற்றுமையாக இருந்தால் நமக்கு வெற்றித்தான், தோல்வி நரேந்திர மோடிக்கு.

சில ஆண்டுகளுக்கு முன் மோடி என்ன சொன்னார், தனக்கு எதிரிகளே இல்லை என சொல்லிவந்தார், எதிரிகளே இல்லாத இந்தியா, எதிர்க்கட்சிகள் இல்லாத இந்தியா என்று சொல்லிவந்தார். ஆனால் சமீப காலமாக எதிர்க்கட்சிகளை விமர்சித்து வருகிறார். எந்த கூட்டமாக இருந்தாலும் மைக்கை பிடித்ததும் எதிர்க்கட்சிகளை திட்டுகிறார்.

நாம் ஒன்று சேர்ந்தது அவருக்கு பிடிக்கவில்லை என்பதைவிட பயமாக இருக்கிறது. நாம் ஒன்று சேர்ந்தால் தாம் வீழ்ந்து விடுவோம் என்று அவருக்கு தெரிகிறது. அதனால்தான் தினமும் கோபத்தால் நம்மை திட்டுகிறார், பயத்தால் குழம்புகிறார்.

மேடையில் இருக்கும் தலைவர்களுக்கும், வர முடியாத தலைவர்களுக்கும், வர தயங்குகிற தலைவர்களுக்கும் நான் சொல்லிக்கொள்வது ஒன்றுத்தான். நம்முடைய ஒற்றுமை மோடியை பயங்கொள்ள வைத்துள்ளது. நம்முடைய ஒற்றுமையைக் காப்போம் அதன்மூலம் இந்தியாவை காப்போம் என்பதே.

நரேந்திர மோடி சிலரைப்பார்த்தால் பயப்படுவார். அப்படிப் பயப்படும் தலைவர்களில் ஒருவர் மம்தா பானர்ஜி. நரேந்திரமோடியும், அமீத்ஷாவும் மேற்கு வங்கத்திற்குள் வருவதற்கு பயப்படுவார்கள். அந்த அளவுக்கு இரும்புப் பெண்மணியாக இருப்பவர் மம்தா.

எங்கள் தலைவர் கருணாநிதி மீது மிகுந்த மரியாதை கொண்டவர் மம்தா. அவர் மறைந்தபோது உடனடியாக தமிழகம் வந்து அஞ்சலி செலுத்தியவர் மம்தா. அவரது அழைப்பை ஏற்று இங்கு வந்துள்ளேன். இன்னும் 5 மாத காலத்துக்கு நாம் அனைவரும் ஒன்றாக இருந்து மத்திய அரசுக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டவேண்டும்.

பாஜகவை தனிமைப்படுத்தவேண்டும். அனைவரும் ஒன்று சேர்ந்து இதைச் செய்யவேண்டும். தனியாக பாஜகவை வீழ்த்த முடியாது. இதை அனைவரும் உணர்ந்து ஒன்றுச் சேரவேண்டும்.

நமது ஒற்றுமை மோடியை வீழ்த்தும், நமது ஒற்றுமை நம்மை வெற்றிபெற வைக்கும், இந்தியாவை காப்பாற்றும்.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

தைப்பூசத்தை முன்னிட்டு பழனிக்கு சிறப்பு ரயில்கள்…

உயர்சாதி ஏழைகளுக்கு 10% இடஒதுக்கீட்டை ரத்து செய்யக்கோரி மே 17 இயக்கத்தினர் கண்டன ஆர்பாட்டம்

Recent Posts