வருமான வரித்துறை சசிகலா, டி.டி.வி.தினகரனின் உறவினர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்களின் வீடு, அலுவலகங்களில் 5வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் சென்னை, தஞ்சை, திருச்சி, நாமக்கல் கோவை, கோடநாடு உள்ளிட்ட இடங்கள் மற்றும் பெங்களூரு, ஐதராபாத், டெல்லி, புதுச்சேரியிலும் கடந்த 9ம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். இந்நிலையில் கோடநாடு கிரீன் டீ தொழிற்சாலை, படப்பை மிடாஸ் மதுபான ஆலை, சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள சசிகலாவின் அண்ணன் மகன் விவேக் வீடிகளில் 5வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
கடந்த 4 நாட்களாக நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது. போலி நிறுவனங்கள் தொடங்கி பல கோடி ரூபாய் முதலீடு செய்திருப்பது தெரியவந்துள்ள நிலையில், 9 பேர் கொண்ட குழுவினர் இன்று காலை முதல் விவேக் வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர். ஆவணங்கள் முழுமையாக சரி பார்க்கும் வரை விசாரணை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சென்னையில் உள்ள ஜெயா தொலைக்காட்சி அலுவலகம், கிருஷ்ணபிரியா வீடு, பூங்குன்றன் வீடு உள்ளி்ட்ட இடங்களில் வருமான வரி சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதேபோல் கோடநாடு கிரீன் டீ தொழிற்சாலையின் மேலாளர் நடராஜனிடம், நிறுவனம் சார்பாக புதிதாக வாங்கப்பட்டுள்ள சொத்துக்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கிரீன் டீ எஸ்டேட் தொழிற்சாலையில், அதிகாரிகள் நடத்திய சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனிடையே சசிகலாவின் உறவினர் டாக்டர் வெங்கேடஷின் வீட்டில் கடந்த 4 நாட்களாக நடைபெற்று வந்த வருமான வரி சோதனை நிறைவு பெற்றுள்ளது. சசிகலா மற்றும் தினகரனின் குடும்ப ஜோதிடர், என கூறப்படும் கடலூர் சந்திரசேகர், வரும் 20ம் தேதி புதுச்சேரி வருமான வரித்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அடுத்த சிறுமாத்தூர் பகுதியில் இயங்கி வரும் இளவரசியின் மருமகன் கார்த்திகேயன் நிர்வகித்து வரும் மிடாஸ் மதுபான ஆலையிலும் இன்று சோதனை நடைபெற்று வருகிறது. மேலும் புதுச்சேரி ஸ்ரீலட்சுமி ஜூவல்லரி நகைக்கடையிலும் 5வது நாளாக வருமான வரி சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.