மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு மற்றும் பொதுத்துறை வங்கிகளில் பெற்ற 5 சவரன் வரையிலான விவசாய நகைக்கடன்களை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார்.
திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சுப்பராயனுக்கு ஆதரவாக திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
துரைமுருகன் வீட்டில் முதலில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்ற போது எதுவும் சிக்கவில்லை என்று அவர் தெரிவித்தார்.
சோதனைக்கு பிறகு ஒரு நாள் இடைவெளி விட்டு யாரோ ஒருவரின் வீட்டில் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும்,
அதிகாரிகளே பணத்தை வைத்து பறிமுதல் செய்வது போல் துரைமுருகன் மீது புகார் கூறப்படுவதாக சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
பணம் பறிமுதலை காரணம் காட்டி ஆம்பூர், குடியாத்தம் இடைத்தேர்தல்களை நிறுத்த முயற்சி என தகவல் வருவதாகக் கூறிய அவர்,
18 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்றால் அ.தி.மு.க. பெரும்பான்மையை இழக்க நேரிடும் என்றார். தேர்தல் ஆணையம் மோடிக்கு துணை போனால் நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவர் எச்சரித்தார்.
முன்னதாக காலையில் திருப்பூரில் நடைப் பயிற்சி மேற்கொண்ட மு.க.ஸ்டாலின் உழவர் சந்தையில் வியாபாரிகளிடமும் மக்களிடமும் வாக்குச் சேகரித்தார்.
பலர் ஸ்டாலினுடன் செல்ஃபி எடுத்துக்கொள்ள ஆர்வம் காட்டினர்.
உணவகம் ஒன்றில் தேநீர் அருந்தியபடியே அங்கு அவர் வாக்குச் சேகரித்தார்.