5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்பது, மீண்டும் வெள்ளைக்கார மெக்காலேவின் அடிமை ஆட்சி காலத்திற்குத் திரும்புவதைப் போன்று உள்ளது என, அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக டிடிவி தினகரன் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “மத்திய அரசின் நெருக்குதலுக்குப் பணிந்து
5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு இந்தாண்டு முதலே பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு திடீரென அறிவித்திருப்பது கிராமப்புற ஏழை மாணவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கிவிடும்.
எனவே உடனடியாக இந்த முடிவினை அரசு கைவிட வேண்டும்.
கிராமங்களில் ஒரு வகுப்பில் தோல்வியடைந்தாலே அதோடு பள்ளிக்குச் செல்வதை நிறுத்திவிடும் வழக்கம் இருந்தது. அதிலும் குறிப்பாக பெண் குழந்தைகளின் கல்வி இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதன் வலியை உணர்ந்த மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர், 5 ஆம் வகுப்பு வரை எந்தவொரு மாணவரையும் தோல்வியடையச் செய்யக்கூடாது என்ற முறையைக் கொண்டு வந்தார்.
பின்னர் அது எட்டாம் வகுப்பு வரை நீட்டிக்கப்பட்டது. இதனால் பள்ளிக்கூடங்களில் படிப்பைப் பாதியிலேயே நிறுத்திவிடும் இடைநிற்றல் நிகழ்வு பெருமளவு குறைந்தது.
இந்த முறையை ரத்து செய்து, 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு வைக்க வேண்டும் என்று 2016 ஆம் ஆண்டில் மத்திய கல்வி ஆலோசனைக் குழுமம் சொன்னது.
அப்போது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அதனை நிராகரித்துவிட்டார். அவர்கள் சொன்னபடி செய்தால், இடைநிற்றல் அதிகமாகி ஏழைக் குழந்தைகளுக்கு கல்வி எட்டாக்கனியாகிவிடும் என்பதால்
தமிழ்நாடு அரசு இதனை ஒருபோதும் ஏற்காது என்று ஜெயலலிதா திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.
எம்ஜிஆர் கொண்டு வந்து, ஜெயலலிதாவால் தொடர்ந்து செயல்படுத்தப்பட்ட திட்டத்தைத் துரோக ஆட்சியாளர்கள் இப்போது ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளனர்.
‘நீட்’ எனும் ஆயுதத்தால் அனிதா மரணித்ததற்கும், ஆயிரமாயிரம் தமிழ்நாட்டு மாணவ – மாணவிகளின் மருத்துவ கனவில் மண்ணள்ளிப் போடுவதற்கும் உறுதுணையாக நின்ற தமிழக அரசு, இப்போது இந்த பாதகத்தையும் செய்யத் துணிந்திருக்கிறது.
மூச்சுக்கு முந்நூறு முறை, ‘இது அம்மாவின் ஆட்சி’ என்று சொல்லிக்கொண்டே ஏழை, எளிய மக்களின் நலன் கருதி ஜெயலலிதா எதிர்த்த அத்தனை திட்டங்களையும் செயல்படுத்தி தமிழ்நாட்டைச் சீரழிக்கிறார்கள்.
அந்த வழியில், கல்வி ஆண்டு முடியப்போகிற நேரத்தில் திடுதிப்பென்று 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு நடத்தப்போவதாக அறிவித்திருக்கிறார்கள்.
கல்வியின் தரம் குறைவதாக சொல்லி மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கையின் மூலம் கிராமங்களில் இடைநிற்றலும், குழந்தைத் தொழிலாளர் முறையும் அதிகரிக்கத் தொடங்கிவிடும்.
கற்றோரின் எண்ணிக்கை மீண்டும் குறையத் தொடங்கும். இதனால் ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் எழுத்தறிவிலும் வீழ்ச்சி ஏற்படும்.
கல்வித்தரத்தை உயர்த்துவதில் உண்மையிலேயே அக்கறை இருக்குமானால், கட்டிடங்கள், கழிப்பறை உள்ளிட்ட வசதிகளை பள்ளிகளில் முறையாக செய்து கொடுத்து மாணவர்கள் படிப்பதற்கு ஏற்ற சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
கல்விப்பணியை முழுமையாக கவனிக்க விடாமல் கணக்கெடுப்பு போன்ற அரசின் மற்ற வேலைகளுக்கும், பள்ளிக்கூட நிர்வாகப் பணிகளுக்கும் ஆசிரியப் பெருமக்களைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்.
நவீன யுகத்தின் தேவைகளுக்கு ஏற்ப ஆசிரியர்களுக்குச் சிறப்புப் பயிற்சிகளை வழங்கி, மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்துவதற்கான ஆக்கப்பூர்வமான திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்.
இதை எல்லாம் விட்டு, இந்திய அரசியல் சாசனம் வழங்கி இருக்கும் அடிப்படை உரிமையை ஏழைக் குழந்தைகளிடம் இருந்து வலுக்கட்டாயமாக பறிக்கும் வகையிலான தமிழக அரசின் இந்த முடிவை அமமுக வன்மையாக கண்டிக்கிறது.
மீண்டும் வெள்ளைக்கார மெக்காலேவின் அடிமை ஆட்சி காலத்திற்குத் திரும்புவதைப் போன்று செயல்படும் இவர்களைக் காலமும் மன்னிக்காது; தமிழக மக்களும் மன்னிக்க மாட்டார்கள்” என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.