முக்கிய செய்திகள்

6-வது நாளாக தொடரும் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம்: பொதுமக்கள் பாதிப்பு..


6-வது நாளாக தொடரும் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம்: பொதுமக்கள் பாதிப்பு..

ஊதிய உயர்வு, ஓய்வூதிய நிலுவைத் தொகை உள்ளிட்ட கோரிக்கையை வலியுத்தி தமிழக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கடந்த 4-ந் தேதி வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினார்கள். தி.மு.க. உள்ளிட்ட 14 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

பெரும்பாலான அரசு டிரைவர்கள், கண்டக்டர்கள் பணிக்கு வராததால் குறைந்த அளவிலேயே பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் தமிழகம் முழுவதும் பஸ் போக்குவரத்து முடங்கி உள்ளது. இதன் காரணமாக அலுவலகங்களுக்கு செல்வோர், வெளியூர் செல்வோர், மாணவ- மாணவிகள் என அனைத்து தரப்பு மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் போக்குவரத்து தொழிலாளர்கள் பணிக்குத் திரும்பாமல் 6-வது நாளாக இன்றும் போராட்டத்தை தொடர்கின்றனர். இதனால், பொதுமக்கள் தொடர்ந்து பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், இது தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்த போது, போராட்டத்திற்கு விதித்த தடையை நீக்க நீதிபதிகள் மறுத்து விட்டனர். மேலும், தொழிலாளர்களின் நிலுவைத்தொகையை படிப்படியாக வழங்க வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டனர்.

ஆனால், முறையாக நோட்டீஸ் அனுப்பப்பட்ட பின்னர்தான் வேலை நிறுத்தம் செய்வதாக தொழிற்சங்கத்தின் சார்பில் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, இன்றைக்குள் தொழிலாளர்கள் பணிக்கு திரும்பி விட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என அமைச்சர் விஜய பாஸ்கர் கெடு விதித்துள்ளார்.

அரசும் – தொழிற்சங்கங்களுக்கும் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு எட்டப்பட வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்