7 பேரை விடுவிக்க கோரிக்கை: ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற வைகோ உள்ளிட்டோர் கைது

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுலை செய்யாமல் தாமதிப்பதைக் கண்டித்து ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற வைகோ, கி.வீரமணி, திருமாவளவன், இரா.முத்தரசன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய 7 பேரையும் முன் விடுதலை செய்ய வேண்டும் என கடந்த செப்டம்பர் 9-ம் தேதி தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு அனுப்பியது. ஆனால், 3 மாதங்களாகியும் இது குறித்து ஆளுநர் எந்த முடிவும் எடுக்க வில்லை.

இந்நிலையில் 7 பேரையும் விடுதலை செய்யாமல் தாமதித்து வருவதைக் கண்டித்து ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டப் போவதாக மதிமுக, திராவிடர் கழகம் அறிவித்திருந்தன. அதன்படி, நேற்று காலை 9 மணி யில் இருந்து ஆளுநர் மாளிகை அருகே உள்ள சைதாப்பேட்டை சின்ன மலை பகுதியில் நூற்றுக்கணக் கானோர் குவியத் தொடங்கினர். இதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தர சன், விசிக தலைவர் திருமா வளவன், திமுக உயர்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன் எம்பி, திமுக மாவட்டச் செயலாளர்கள் மா.சுப்பிர மணியன், பி.கே.சேகர்பாபு, தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல் முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது பிரதமர் மோடி, ஆளுநரைக் கண்டித்து கோஷமிட்டனர்.

வைகோ பேசும்போது, “தருமபுரி பேருந்து எரிப்பு குற்றவாளிகள் 3 பேரை விடுதலை செய்த ஆளுநர், தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி அனுப்பிய பிறகும், 7 பேரை விடுதலை செய்ய மறுப்பது அநீதியானது. தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு இருக்கும்போது போட்டி அரசாங்கம் நடத்தி வரும் ஆளுநர், தனது பதவிக்கான அதிகார எல்லையை மீறி நடந்து வருகிறார். எனவே, அவர் இனியும் பதவியில் நீடிக்கக் கூடாது. திமுக தலைவர் ஸ்டாலினுடன் கலந்துபேசி அடுத்தகட்ட போராட்டம் குறித்து முடிவு செய்வோம்” என்றார்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பேசும்போது, “உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மாநில அமைச்சரவை தீர்மானம் நிறை வேற்றி அனுப்பியும் 7 பேரையும் ஆளுநர் விடுதலை செய்யாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது. மத்தி யில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு சட்டப்பூர்வமாகவே ஆளுநர் வெளியேற்றப்படுவார். அதன்பிறகு 7 பேரும் விடுதலை செய்யப் படுவார்கள். மத்திய பாஜக அரசின் அநீதியை எதிர்த்து அனைவரும் போராட வேண்டும்” என்றார்.

பின்னர் ஆளுநர் மாளிகையை நோக்கி ஊர்வலமாகச் செல்ல முயன்ற தலைவர்கள் உட்பட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். மாலையில் அனைவரும் விடுவிக் கப்பட்டனர்.