சேலம் அருகே பயங்கர விபத்து: தனியார் பேருந்தில் பயணித்த 7 பேர் பலி

சேலம்  அருகே இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 7 பேர் பலியானார்கள்.

சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று இரவு, 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் தனியார் பேருந்து ஒன்று தர்மபுரி நோக்கி புறப்பட்டது.

இந்த பேருந்து மாமாங்கம் என்ற பகுதியில், ஓமலூர் தேசிய நெடுஞ்சாலையில் பஞ்சர் ஆகி நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியது. மோதிய வேகத்தில் சாலைத் தடுப்பை தாண்டி, எதிர்புறம் பெங்களூரில் இருந்து கேரளாவுக்கு சென்றுகொண்டிருந்த ஆம்னி பேருந்து மீது மோதியது.

இதில் ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்தில்  2 பெண்கள் உள்பட 7பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இரண்டு பேருந்துகளிலும் 25க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர். அவர்களுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நள்ளிரவில் நடந்த இந்த கோர விபத்தினால் ஓமலூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதித்தது.

சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகினி ,சேலம் மாநகர் காவல் ஆணையர் சங்கர் மற்றும் மாவட்ட வருவாய் அதிகாரி சுகுமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியை துரிதப்படுத்தினர்.

கிரேன் உதவியுடன் சாலையில் கவிழ்ந்த பேருந்துகள் இரண்டையும் தூக்கி நிறுத்தி அப்புறப்படுத்தினர். சம்பவ இடத்தில் குழந்தை ஒன்று மீட்கப்பட்டுள்ளது. அந்தக் குழந்தையின் பெற்றோர் யார் என்பது தெரியாத நிலையில், குழந்தையை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அழைத்துச் சென்றுள்ளனர். முதல்கட்ட விசாரணையில், தனியார் பேருந்து ஓட்டுனர் கவனக்குறைவாக இயக்கியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிய வருகிறது

7 Persons Dead in Accident near Selam