700 மருத்துவப் படிப்பு இடங்கள் நிரப்பப்படவில்லை : ராமதாஸ் குற்றச்சாட்டு..


தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் நிரப்பப்படாத 700 இடங்களை மாநில அரசுக்கு ஒதுக்க வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக ராமதாஸ் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் மத்திய அரசின் சார்பில் நடத்தப்படும் மூன்று கட்ட கலந்தாய்வுகளிலும் நிரப்பப்படாத சுமார் 700 மருத்துவ, பல் மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை இடங்களை ஏலத்தில் விடாத குறையாக விலை பேசி விற்பனை செய்ய முயற்சிகள் தொடங்கியுள்ளன. இதற்கு மத்திய அரசும் தொடர்ந்து ஒத்துழைத்து வருவது கண்டிக்கத்தக்கதாகும்.

தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான மருத்துவம் மற்றும் பல் மருத்துவ இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வை மத்திய அரசின் மருத்துவ சேவைகளுக்கான தலைமை இயக்குநர் அலுவலகம் இணையதளம் வழியாக நடத்தி வருகிறது.

முதல் இரு கட்ட கலந்தாய்வுகள் முடிவடைந்து விட்ட நிலையில், விடுபட்ட இடங்களை நிரப்புவதற்கான மூன்றாம் கட்ட கலந்தாய்வு சனிக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறுகிறது. இதில் யார், யாருக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது என்பது குறித்த அறிவிப்பு திங்கள்கிழமை வெளியிடப்படும். இந்த மூன்றாம் கட்ட கலந்தாய்விலும் நிரப்பப்படாத இடங்கள் வரும் 26 ஆம் தேதிக்குப் பிறகு தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களிடமே ஒப்படைக்கப்பட்டு, சில வரையறைக்கு உட்பட்டு, அவற்றின் விருப்பப்படி நிரப்பிக்கொள்ள அனுமதிக்கப்படும். இதைப் பயன்படுத்தி தான் மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்களை விற்பனை செய்யும் முயற்சியில் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் ஈடுபட்டிருக்கின்றன. இரண்டாம் கட்ட கலந்தாய்வின் இறுதியில் நாடு முழுவதும் 3 ஆயிரத்து 42 இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன.

தமிழகத்தில் உள்ள 9 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் 461 மருத்துவப் படிப்பு இடங்களும், 8 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் 360 இடங்களும் நிரப்பப்படாமல் காலியாகக் கிடக்கின்றன. சென்னையில் உள்ள ஒரு தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 153 இடங்களும், மற்றொரு தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 102 இடங்களும் நிரப்பப்படாமல் உள்ளன.

சென்னை புறநகரில் உள்ள மேலும் இரு நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் முறையே 45 இடங்களும், 40 இடங்களும் காலியாக உள்ளன. மூன்றாம் கட்டக் கலந்தாய்வில் மருத்துவம், பல் மருத்துவம் ஆகிய இரு படிப்புகளுக்கும் சேர்த்து 100 இடங்கள் நிரப்பப்பட்டால் அதுவே சாதனையாக இருக்கும். அதைத் தவிர மீதமுள்ள 721 மருத்துவம், பல் மருத்துவ இடங்கள் காலியாக இருக்கக்கூடும்.

அதேபோல், புதுச்சேரியில் உள்ள 4 தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் முறையே 69, 68, 65, 47 இடங்கள் என மொத்தம் 249 இடங்கள் காலியாக உள்ளன. ஒரு நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 67 பல் மருத்துவ இடங்கள் காலியாக உள்ளன. இவற்றிலும் 90% இடங்கள் நிரப்பப்படாது என்பது தான் உண்மை. அவ்வாறு நிரப்பப்படாத இடங்களை நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களிடமே ஒப்படைப்பது தான் சமூக நீதிக்கு வேட்டு வைக்கும் செயலாகும்.

முதல் மூன்று கட்ட கலந்தாய்வுகளை தகுதி அடிப்படையில் மட்டுமே மத்திய சுகாதார சேவைகள் தலைமை இயக்குநர் அலுவலகம் நடத்திய நிலையில், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை தகுதிகளைப் பார்க்காமல் பணத்தின் அடிப்படையில் மட்டும் தான் விற்பனை செய்யும். இது மருத்துவக் கல்வியின் தரத்தைச் சிதைக்கும்.

மருத்துவப் படிப்புக்குச் சேரும் அளவுக்கு நீட் தேர்வில் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் கூட நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் சேரத் தயங்குவதற்கு காரணம் அளவுக்கு அதிகமான கட்டணம் தான். அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஆண்டுக்கு 11 ஆயிரத்து 600 ரூபாயும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு அதிகபட்சமாக ரூ. 4 லட்சமும் மட்டும் கட்டணமாக வசூலிக்கப்படும் நிலையில் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் ஆண்டுக்கு ரூ.25 லட்சம் வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

அதனால் தகுதியிருந்தும் பணம் இல்லாதவர்களால் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் சேர முடிவதில்லை. அவ்வாறு யாரும் சேராத இடங்களை நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் விற்று லாபம் ஈட்ட வேண்டும் என்பதற்காகவே அவை அவற்றிடம் ஒப்படைக்கப்படுகின்றன. அதற்கு வசதியாகவே, ஒரு பல்கலைக்கழகத்தில் 100 இடங்கள் காலியாக இருந்தால், அதை விட 10 மடங்கு, அதாவது ஆயிரம் பேரை கலந்தாய்வுக்கு அழைக்க அனுமதிக்கப்படுகிறது. இதன்மூலம் நீட் தேர்வில் 300-க்கும் கூடுதலான மதிப்பெண் எடுத்த மாணவர்கள் பணம் இல்லாததால் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் சேர முடியாமல் வெளியேறும் நிலையில், 100 மதிப்பெண் எடுத்தவர்கள் தங்களிடமுள்ள பணத்தைக் கொண்டு அப்படிப்பில் சேருவார்கள். இதற்காக தரகர்கள் மூலம் மாணவர்களைச் சந்தித்து பேரம் பேசும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மருத்துவக் கல்வியின் தரத்தை அதிகரிக்கவும், மருத்துவக் கல்வி வணிகமயமாக்கப்படுவதைத் தடுக்கவும் தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டதாக கூறிக் கொள்ளும் மத்திய அரசு, மற்றொரு புறம் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் கொல்லைப்புற வழியாக மருத்துவப் படிப்பு இடங்களை விற்க அனுமதிப்பது எந்த வகையில் நியாயம்? இது நீட் தேர்வு கொண்டு வரப்பட்டதன் நோக்கத்தைச் சிதைப்பது மட்டுமின்றி மருத்துவக் கல்வியின் தரத்தையும் குறைத்து விடும். இது சமூக நீதிக்கும், நாட்டு நலனுக்கும் நல்லதல்ல.

மாறாக, நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் நிரப்பப்படாத இடங்களை மாநில அரசு ஒதுக்கீட்டு இடங்களாக அறிவித்து அந்தந்த மாநில அரசுகளிடம் ஒப்படைப்பது தான் சரியானதாக இருக்கும். அவ்வாறு செய்தால் அந்த இடங்களை தகுதி மற்றும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மாநில அரசுகள் நிரப்பும். அத்துடன் ஆண்டு கல்விக் கட்டணமும் ரூ. 4 லட்சத்துக்கும் குறைவாக இருக்கும்.

எனவே, தமிழகத்தில் நிரப்பப்படாமல் போகும் 700-க்கும் மேற்பட்ட மருத்துவ, பல் மருத்துவ இடங்களை அரசு ஒதுக்கீட்டு இடங்களாக அறிவித்து தமிழக அரசிடம் மத்திய அரசு ஒப்படைக்க வேண்டும். இதை தமிழக அரசும் வலியுறுத்த வேண்டும்” என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.