தமிழகத்தில் 7-வது நாளாக இன்றும் பேருந்து ஸ்டிரைக் நீடிக்கிறது. இதனால் பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகள் கடும் சிரமத்தை சந்திக்க வேண்டியிருக்கும்.
ஊதிய உயர்வு, ஓய்வூதிய நிலுவைத் தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் கடந்த 4-ம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட சில தொழிற்சங்க ஊழியர்களுடன், தற்காலிக டிரைவர், கண்டக்டர்கள் மூலம் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அப்போதும் குறைந்த அளவிலான பேருந்துகளே செல்வதால் போக்குவரத்து முடங்கி உள்ளது.
உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் தொழிலாளர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட மறுத்து இன்று 7-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் கோரிக்கையை அரசு ஏற்காததால், போக்குவரத்துதொழிலாளர்கள் குடும்பத்தினருடன் வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இன்றும் பெரும்பாலான பேருந்துகள் இயங்காததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பேருந்துகள் இல்லாததால் ஆட்டோ, ஷேர் ஆட்டோ என மாற்று போக்குவரத்தை நாடி வருகின்றனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 11 ஆயிரத்து 983 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. ஆனால், பஸ் ஸ்டிரைக் நீடிப்பதால் அந்த பஸ்களுக்கான முன்பதிவு ரத்து செய்யப்பட்டது. தற்போதைய சூழ்நிலையில் அந்த பஸ்களை இயக்க டிரைவர், கண்டக்டர்கள் கிடைக்கப்போவதில்லை.
பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால் சென்னை போன்ற நகரங்களில் இருந்து பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்படும்.
தொழிலாளர்களின் போராட்டத்திற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்ததுடன், போராடும் தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என கூறியுள்ளது. எனவே, தொழிலாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது. கும்பகோணம் கோட்டத்திற்கு உட்பட்ட சில தொழிலாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக சட்டசபையில் இந்த விவகாரம் நேற்று எதிரொலித்தது. முதல்வர் தலையிட்டு போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இன்றும் இப்பிரச்சினை குறித்து சட்டமன்றத்தில் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.