முக்கிய செய்திகள்

வீங்கும் தேசம்… விடைதேடும் கேள்விகள்…! (காணொலித் தொகுப்பு)

 

ஜிடிபி எனப்படும் நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சி 8.2 சதவீதத்தை எட்டிப்பிடித்து விட்டதாக கொண்டாடிக் குதூகலிக்கிறது ஆளும் பாஜக.

ஆனால். கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் 5.6 சதவீதம் என்ற மிகக் குறைந்த வளர்ச்சிக் குறியீட்டில் இருந்து மதிப்பிடப்படுவதாலேயே, நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டு வளர்ச்சி அபரிமித முன்னேற்றமாக காட்சியளிக்கிறது என புள்ளிவிவரப்பட்டியலுடன் எடுத்துக் காட்டியிருக்கிறார் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம். மோடி அரசின் ஒட்டுமொத்த ஆட்சிக் காலமும் முடிவடையும் தருணத்தில் முந்தைய காங்கிரஸ் தலைமையிலான வளர்ச்சியை ஒப்பிட்டுப் பார்ப்பதே சரியான மதிப்பீடாக இருக்கும் எனவும் ப.சிதம்பரம் ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். பாஜகவின் வளர்ச்சிக் கணக்கு படுதவறானது என்பதை முதன்மை பொருளாதார ஆலோசகர் சஞ்சீவ் சன்யாலே ஏற்றுக் கொண்டிருப்பதாகவும் கூறியிருக்கிறார் ப.சிதம்பரம். இது ஒருபுறமிருக்க பணமதிப்பிழப்பு குறித்த பாஜகவின் பெருமிதமும் பரிதாபத்திற்குரிய கருத்தாக விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. பணமதிப்பிழப்பு செய்யப்பட்டவற்றில் 99.3 சதவீத  ரூபாய்த் தாள்கள் வங்கிகளுக்கு திரும்பி விட்டதாக கூறியிருக்கிறது ரிசர்வ் வங்கி. அதாவது பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட 15 லட்சத்து 42 ஆயிரம் கோடி ரூபாயில், 15 லட்சத்து 31 ஆயிரம் கோடி ரூபாய் வங்கிகளுக்கு திரும்பி விட்டது. சுமார் 11 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே வங்கிகளுக்கு திரும்பவில்லை. அப்படி என்றால், 11 ஆயிரம் கோடி மட்டும்தான் கறுப்புப் பணமா? என்பது எதிர்க்கட்சிகளின் கேள்வி. அதுமட்டுமின்றி, பணமுதலைகளின் கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கிக் கொடுக்க வகுக்கப்பட்ட தந்திரம்தான் பணமதிப்பிழப்பு நடவடிக்கை எனவும் காங்கிரஸ் விமர்சித்திருக்கிறது.

உள்நாட்டு எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்ற வகையில் இந்தியாவைக் கூர்ந்து கவனித்து வரும் வெளிநாட்டு பொருளாதார ஆய்வாளர்களும் கூட, பணமதிப்பிழப்பு நடவடிக்கை தோல்வியடைந்து விட்டதாகவே கூறியுள்ளனர். இது குறித்து தலையங்கமே தீட்டியுள்ள தி கார்டியன் பத்திரிகை, மோடியின் பொருளாதார முடிவுகள் முற்றிலும் தவறானவை என்பது தெளிவாகி இருப்பதாகவே உரத்துக் கூறி இருக்கிறது. என்மீது தவறுகள் இருந்தால் அதற்கான தண்டனையை ஏற்கத் தயார் எனக் கூறிய மோடி, தற்போது விமர்சனங்களையே காது கொடுத்து கேட்க மறுக்கிறார் என்பதையும் தி கார்டியன் தலையங்கம் சுட்டிக்காட்டி இருக்கிறது. அரசுக்கு எதிராக கருத்துக் கூறுவோர் எத்தகைய விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்பதற்கான எச்சரிக்கையின் அடையாளமே, அண்மையில் அரங்கேற்றப்பட்ட சமூக ஆர்வலர்கள் கைது நடவடிக்கை என்பதையும் தி கார்டியன் தலையங்கம் தெளிவு படுத்தி இருக்கிறது. இந்த நிலையில், சட்டப்பேரவைகளுக்கும் நாடாளுமன்றத்திற்கும் ஏக காலத்தில் தேர்தலை நடத்த மோடி அரசு திட்டமிட்டு வருவதையும் கவனப்படுத்தி இருக்கிறது தி கார்டியன் ஏடு.  மோடியின் தவறுகளுக்காக வரும் தேர்தலில் அவரது கட்சி மக்களால் தண்டிக்கப்படக் கூடும் என்பதையும் முத்தாய்ப்பான கருத்தாக முன்வைத்துள்ளது தி கார்டியன் கட்டுரை.

தவறுகளைத் திருத்திக் கொள்ள முதலில் அதனை ஒப்புக் கொள்ள வேண்டும் என்பதுதானே அடிப்படை. ஆனால், மோடி அரசிடம் அதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை என்பதுதான் இன்றுவரை நாம் பார்த்துவரும் யதார்த்தம். இனி.. அதோ புன்னகைத்தபடி காத்திருக்கும் காலம்தான் தனது தீர்ப்பை எழுத வேண்டும்.

 

8.2% GDP: A  Real Benchmark?