திருச்சி அருகே பண்டைத் தமிழர்களின் பண்பாட்டு அடையாளமான துலாக்கிணறு கண்டுபிடிப்பு: கீழடியின் நிலைஏற்பட்டுவிடாமல் பாதுகாக்க தமிழ் ஆர்வலர்கள் கோரிக்கை

சோழங்க நல்லூரில் கண்டுபிடிக்கப்பட்ட துலாக்கிணறு
சோழங்க நல்லூரில் கண்டுபிடிக்கப்பட்ட துலாக்கிணறு

திருச்சி மணச்சநல்லூர் அருகே தமிழர்களின் தொன்ம அடையாளமான 800 ஆண்டுகள் பழமையான துலாக்கிணறு இருப்பது தெரிய வந்துள்ளது.

சோழங்கநல்லூர் கிராமத்தில், இருபுறமும் உயரமான கல் தூண்களும், அதில் கட்டி கிணற்றில் இருந்து தண்ணீர் இரைப்பதற்காக கல்லால் செய்யப்பட்ட பெரிய வாளி போன்ற கருவியும் சிதைந்த நிலையில் உள்ளன. தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சி மாணவர் பாபு என்பவர் இதனைக் கண்டறிந்து தகவலை வெளியிட்டுள்ளார்.

துலாக்கிணறு என்பது தமிழர்களின் மிகப் பழமையான தண்ணீர்ப்பாசனத் தொழில்நுட்பங்களில் ஒன்றாகும். சோழங்கநல்லூரில் கண்டறியப்பட்டுள்ள துலாக்கிணறு பிற்காலச் சோழர்கள் காலத்தில் உருவாக்கப்பட்டதாக இருக்கக் கூடும் என கருதப்படுகிறது. கிணறு மற்றும் கால்வாய்களில் இருந்து தண்ணீரை இரைத்து பயன்படுத்த பண்டைக்காலத் தமிழர்கள் கல்லால் செய்யப்பட்ட இந்த துலாக்கிணறுகளைப் பயன்படுத்தி வந்துள்ளனர்.

இதேபோன்ற துலாக்கிணறுகள் இலங்கை ஜாப்னாவில் தற்போதும் காணக்கிடைப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அரசின் தொல்லியல் ஆய்வுத்துறை, இந்த துலாக்கிணறின் சரியான காலத்தைக் கண்டறிவதுடன், பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என துலாக்கிணறைக் கண்டறிந்த ஆய்வாளர் பாபு தலைமையிலான குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர். கீழடியைப் போல், துலாக்கிணறும் தமிழர்களின் மிகப் பழமையான அடையாளம் என்பதால், மத்திய அரசை நம்பாமல் மாநில அரசே அதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும் என தமிழ் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழர்களின் அடையாளங்களை அழிக்க முயலும் மத்திய அரசு இதைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமா என்பதை நம்ப முடியாது என்பதால், தமிழக அரசே அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

800 year old Tamil Shadoof found near Trichy