எட்டாம் வகுப்பு மாணவர்கள் கூட போதையில் தடுமாறுகின்றனர்: ராமதாஸ் வேதனை..


கொடிய போதை மருந்துகளின் பிடியிலிருந்து தமிழ்நாட்டு இளைஞர்களை மீட்க வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக ராமதாஸ் இன்று (புதன்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டின் எதிர்காலத் தூண்கள் என்று நம்பப்பட்டு வரும் இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் பெரும்பான்மையினரால் தூண்களை பிடிக்காமல் நிற்க முடியாது என்ற அளவுக்கு அவர்கள் போதைக்கு அடிமையாகியுள்ளனர் என்ற உண்மை இதயத்தைச் சுடுகிறது. சென்னையிலும், தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளிலும் போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனைக் கட்டமைப்பு ஆலமரம் போல பரந்து விரிந்துள்ள நிலையில், அதைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கதாகும்.
தமிழகத்தின் தலைநகரான சென்னை போதைப் பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனை தலைநகராகவும் திகழ்கிறது. சென்னையில் போதைபொருட்கள் கிடைக்காத பகுதிகளும் இல்லை; சென்னையில் கிடைக்காத போதைப் பொருட்களும் இல்லை என்று கூறும் அளவுக்கு சென்னையின் அனைத்துப் பகுதிகளிலும் அனைத்து வகையான போதைப் பொருட்களும் கிடைக்கின்றன. குறிப்பாக சென்னையில் புகழ்பெற்ற தனியார் மருத்துவக் கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களிலும், அவை சார்ந்த விடுதிகளிலும் போதைப் பொருட்கள் தாராளமாகக் கிடைக்கின்றன.

கஞ்சா, அபின், ஹெராயின், கோகைன் உள்ளிட்ட போதை மருந்துகள் மட்டுமே சென்னையில் கிடைத்து வந்த நிலை மாறி, எல்எஸ்டி எனப்படும் ஒரு வகை போதை மருந்தும் சந்தையில் தாராளமாகக் கிடைக்கத் தொடங்கியிருக்கிறது. ஒருவகையான காளானிலிருந்து தயாரிக்கப்படும் இப்போதை மருந்து குறைந்தபட்சம் 12 மணிநேரம், மனிதர்களை சுயநினைவின்றி மாயை உலகில் மிதக்க வைத்திருக்கும் தன்மை கொண்டது என்று கூறப்படுகிறது.

ஒருகாலத்தில் கஞ்சா புகைப்பதே பெருங்குற்றமாக பார்க்கப்பட்ட நிலையில் இப்போது அது சிறுவர்களுக்கான போதை மருந்தாக வர்ணிக்கப்படுகிறது. சென்னை சூளைமேட்டில் கடந்த பொங்கல் திருநாளன்று 15 வயது சிறுவனை கத்தியால் குத்திக் கொன்றதாக, அவனது வயதையொத்த 4 நண்பர்கள் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர்.

இதற்குக் காரணம் அவர்களுக்கிடையே கஞ்சா புகைப்பதற்கு ஆன செலவை பகிர்ந்து கொள்வதில் ஏற்பட்ட தகராறு தான் என்று கூறப்படுகிறது. பஞ்சர் ஒட்ட பயன்படும் பசை, ஒயிட்னர், வார்னிஷ் உள்ளிட்ட அன்றாடப் பயன்பாட்டு பொருட்களும் போதைப் பொருட்களாக பயன்படுத்தப்படுகின்றன. இவை உடல் உறுப்புகளை விரைவாக செயலிழக்கச் செய்யக்கூடியவை.

சென்னைக்கு வெளியில் வேலூர், சேலம், கோவை, சிதம்பரம் ஆகிய நகரங்களும் போதை அரக்கனின் பிடியில் சிக்கிக் தவிக்கின்றன. குறிப்பாக வேலூர், சிதம்பரம் ஆகிய நகரங்களில் படிப்பதற்காக வந்துள்ள ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் விதவிதமான போதைப்பொருள் பழக்கத்திற்கு மாணவர்களை அடிமையாக்குவதாகவும், அதனால் மாணவர்கள் தங்களின் எதிர்காலத்தை மட்டுமின்றி உயிரையும் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருப்பதாகவும் அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் சிலர் அண்மையில் என்னிடம் எச்சரித்த போது அதிர்ச்சியில் ஆடிப்போனேன் என்பது தான் உண்மை.

கோவையில் உருவாகி வரும் புதிய போதைப் பொருள் கலாச்சாரம் இன்னும் கொடுமையானது. மகப்பேற்றின் போது வலி நிவாரணியாக பெண்களுக்கு செலுத்தப்படும் போர்ட்வின் எனப்படும் போதைப் பொருட்களை மாணவர்களும் இளைஞர்களும் மருத்துவமனையிலிருந்து திருடிச் செல்கின்றனர். அதேபோல், அறுவை சிகிச்சைகளின் போது மயக்க மருந்தாக பயன்படுத்தப்படும் ரூ.5 மதிப்புள்ள மருந்தைத் திருடி, 500 மிலி குளுக்கோஸில் கலந்து போதைப் பொருளாக இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் 2 மிலி ரூ.1,000 என்ற விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த போதை மருந்து மிகவும் உக்கிரமானது; இதனால் மலட்டுத் தன்மை முதல் உயிரிழப்பு வரை ஏற்படக்கூடும். ஆனால், இம்மருந்தின் விலை ரூ.5 மட்டுமே என்பதால் இதுபற்றி மருத்துவமனைகள் புகார் தருவதில்லை. இதனால் இந்த விஷயம் வெளியில் தெரியவில்லை என்றாலும், போதை சீரழிவுகள் தொடருகின்றன.

கல்லூரி மாணவர்களும், மேல்நிலைப்பள்ளி மாணவர்களும் தான் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வந்தனர் என்ற நிலை மாறி, எட்டாம் வகுப்பு மாணவர்கள் கூட போதையில் தடுமாறுவதை பார்க்க முடிகிறது. ஒவ்வொரு வயதுப் பிரிவினருக்கும் ஒரு வகையான போதை மருந்தை தொடக்கத்தில் இலவசமாக கொடுத்து போதைக்கு அடிமையாக்கும் போதை கும்பல், அவர்கள் போதைக்கு அடிமையான பின்னர் அவர்களுக்கு போதை மருந்து வழங்க பெரும் பணம் வசூலிக்கின்றன. இதற்காக போதை அடிமைகள் குற்றச்செயல்களில் ஈடுபட்டு பணம் ஈட்டுகின்றனர். இதனால் தமிழகத்தில் குற்றங்கள் அதிகரிக்கின்றன.

இன்றைய நாகரிக உலகில் இளைஞர்களும், சிறுவர்களும் போதைப் பழக்கத்திற்கு ஆளாவதற்கு ஏராளமான தூண்டல்களும், சூழல்களும், வாய்ப்புகளும் உள்ளன. அவற்றால் திசைமாறி போதைக்கு அடிமையானவர்களை அதிலிருந்து மீட்டு நல்வழிப்படுத்தும் கடமையும், பொறுப்பும் அரசுக்கும், காவல்துறைக்கும் மட்டுமின்றி ஒட்டுமொத்த சமுதாயத்துக்கும் உள்ளது. இதற்கான நடவடிக்கைகளின் முதல் கட்டமாக போதைப் பொருட்கள் தாராளமாக கிடைப்பதை தடுக்க வேண்டும். இதற்காக சென்னையிலும், மாவட்டங்களிலும் துடிப்பான இளம் காவல் உதவி ஆணையர்கள்/ துணை கண்காணிப்பாளர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு போதைப் பொருள் விற்பனை ஒழிக்கப்பட வேண்டும்.

போதைப் பொருள் விற்பனை குறித்து காவல்துறைக்கு தகவல் தருவோரின் விவரங்களை ரகசியமாக பாதுகாப்பதுடன் அவர்களுக்கு ரூ.10,0000-க்கும் குறையாமல் ஊக்கப்பரிசுகள் வழங்கப்பட வேண்டும். பள்ளி நிர்வாகங்களும், கல்லூரி நிர்வாகங்களும் மாணவர்களின் பெற்றோர்கள், காவல்துறை அதிகாரிகள் கூட்டத்தைக் கூட்டி போதைப் பழக்கத்திலிருந்து மீட்டெடுத்தல்/ சிக்காமல் இருத்தல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஆலோசனைகளை வழங்க வேண்டும்.

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் போதை மருந்துப் பழக்க மீட்பு மையங்கள் அமைக்கப்பட வேண்டும். இவை அனைத்துக்கும் மேலாக தனிமையுணர்வு, விரக்தி, மன அழுத்தம் ஆகியவை தான் மாணவர்களையும், இளைஞர்களையும் போதைப் பழக்கத்துக்கு அடிமையாக்குகின்றன என்பதால் குழந்தைகளுடன் பெற்றோர்கள் மனம் விட்டு பேச வேண்டும். நல்ல புத்தகங்களை வாசித்தல், நல்ல இசையை கேட்டு ரசித்தல், யோகா மற்றும் உடற்பயிற்சி போன்ற விஷயங்களை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். இவ்வாறாக போதையில்லா தமிழகத்தை உருவாக்க அரசு, காவல்துறை, கல்வி நிறுவனங்கள், பெற்றோர் என அனைவரும் பாடுபட வேண்டும்” என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

காஷ்மீர் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்..

டெல்லி தேர்தல் ஆணையத்தில் கமல்..

Recent Posts