முக்கிய செய்திகள்

ஓடும் ரயிலில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: பாஜக பிரமுகர் கைது

ஓடும் ரயிலில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்து பாஜக பிரமுகரும், வழக்கறிஞருமான கே.பி.பிரேம் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருவனந்தபுரத்திலிருந்து சென்னை வந்த ரயிலில் குடும்பத்துடன் பயணம் செய்த 9 வயது சிறுமிக்கு பாஜக பிரமுகர் பிரேம்  பாலியல் தொல்லைகொடுத்துள்ளார்.

கோவைக்கும், ஈரோட்டுக்குக்கும் இடையே இந்தச் சம்பவம் நடந்துள்ளது. சிறுமியின் தந்தை மேல் பெர்த்திலும், தாயார் கீழ் பெர்த்திலும் படுத்திருந்துள்ளனர். நடு பெர்த்தில் சிறுமி படுத்திருந்துள்ளாள். இரவு 1 மணி அளவில் ரயிலில் ஏறிய பிரேம் என்ற நபர், எதிர் வரிசையில் இருந்த பெர்த்தில் படுத்துள்ளார். சிறிது நேரத்தில் சிறுமியை தவறான இடங்களில் பிரேம் தொட்டதாக தெரிகிறது. அலறிஅடித்து விழித்தெழுந்த சிறுமி, அந்த மனிதர் தனது மார்பகத்தைப் பிடித்து அழுத்தியதாக கூறி அழுதுள்ளார். இரண்டு முறை அந்த நபர் இந்த முயற்சியில் இறங்கியதாக தெரிகிறது. இதனை அடுத்து, டிடிஆரிடம் பெற்றோர் புகார் செய்ததை அடுத்து, ஈரோடு ரயில்வே போலீசார் அவரை கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பிரேம் என்ற இந்த நபர் 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. 12 வயதுக்கும் குறைவான சிறுமிக்கு பாலியல் கொடுமை இழைத்தால் மரணதண்டனை விதிக்க வகை செய்யும் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு 24 மணி நேரத்தில், பாஜகவைச் சேர்ந்த நபரே பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.