’96’ படத்தை தீபாவளிக்கு தொலைக்காட்சியில் திரையிடுவது நியாயமல்ல என்று த்ரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
பிரேம்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘96’.
நந்தகோபால் தயாரிப்பில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இப்போதும் பல்வேறு திரையரங்குகளில் வெற்றிகரமாக திரையிடப்பட்டுக் கொண்டிருக்கிறது.
இப்படத்தின் தொலைக்காட்சி உரிமையைக் கைப்பற்றியுள்ள சன் தொலைக்காட்சி நிறுவனம், தீபாவளிக்கு படங்கள் ஒளிபரப்பு போட்டியில் ‘96’ படத்தைக் கையில் எடுத்திருக்கிறது.
தீபாவளி (நவம்பர் 6) அன்று மாலை 6:30 மணிக்கு ‘96’ ஒளிபரப்பப்படும் என்று விளம்பரப்படுத்தியது.
இதனால் ரசிகர்கள் மத்தியில் சந்தோஷம் ஏற்பட்டாலும், படக்குழுவினர் சிலர் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.
இது தொடர்பாக த்ரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
படம் வெளியாகி இது எங்களுக்கு 5வது வாரம். இன்னும் அனைத்து திரையரங்குகளிலும் 80 சதவீதம் நிரம்புகிறது.
இவ்வளவு சீக்கிரம் 96 படத்தை தொலைக்காட்சியில் திரையிடுவது நியாயமல்ல என்று நாங்கள் நினைக்கிறோம்.
தயவு செய்து இதை பொங்கலுக்கு தள்ளி வையுங்கள் என்பது எங்கள் கோரிக்கை. செய்தால் நன்றியுடன் இருப்பேன்.
இவ்வாறு த்ரிஷா தெரிவித்திருக்கிறார்.
படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருப்பதால், இன்னும் சில காலம் ஓடி வசூலை அள்ளலாமே என்று 96 படக்குழு நினைத்திருப்பதில் தவறேதும் இல்லை என்றே நெட்டிசன்கள் இந்த ட்வீட்டை பகிர்ந்து வருகின்றனர்.