விஜய் சேதுபதி நடித்துள்ள 96 படக் கதை தனது உதவியாளரிடம் இருந்து திருடப்பட்டது என இயக்குனர் பாரதிராஜா கூறி இருக்கும் விவகாரம் பெரிதாகியுள்ளது.
ஆதாரம் இருந்தால் தன் மீது பாரதிராஜா சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்று அப்படத்தின் இயக்குனர் பிரேம்குமார் சவால் விடுத்துள்ளார்.
நடிகர் விஜய் சேதுபதி, நடிகை த்ரிஷா ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் 96. இப்படம் அண்மையில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் 96 படத்தின் கதை தன்னுடையது என பாரதிராஜாவின் உதவியாளர் சுரேஷ் என்பவர் தெரிவித்துள்ளார்.
இந்தக் கதையை 92 என்ற பெயரில் தாம் எழுதியதாகவும், பாரதிராஜா இயக்குவதாகவும் இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது, அசுரவதம் ஆகிய படங்களை இயக்கிய மருதுபாண்டியனிடம் 92 கதையைக் கூறியதாகவும், அதை அவர் பிரேம் குமாரிடம் கூறி 96 என்ற பெயரில் தனது கதையை படமாக எடுத்து வெளியிட்டுள்ளதாகவும் சுரேஷ் குற்றம்சாட்டி இருந்தார்.
இதுதொடர்பாக இயக்குனர்கள் பிரேம் குமார், பாலாஜி மோகன், தியாகராஜன் குமாராஜா, மருதுபாண்டியன் ஆகியோர் கூட்டாக சென்னை வடபழனியில் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது 96 கதை தன்னுடையது தான் என்பதற்கான ஆதாரங்களை பிரேம் குமார் செய்தியாளர்களிடம் காட்டினார்.
ஆனால் தனது 96 பட கதைக்கு சம்பந்தமே இல்லாமல் சுரேஷ் சொந்தம் கொண்டாடுவதாகவும், அதற்கு பாரதிராஜா ஆதரவளிப்பதாகவும் பிரேம் குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் இயக்குனர் பாரதிராஜா தன்னை ஆபாசமாக பேசியதாகவும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார் .
விஜயின் சர்காரைத் தொடர்ந்து விஜய் சேதுபதியின் 96 படத்தின் கதை மீதும் திருட்டுப் புகார் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.