Election special article
______________________________________________________________________________________________________
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டாகி விட்டது. மே 16ம் தேதி வழக்கம் போல ஒரே நாளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அரசியல் கட்சிகளைப் போலவே மக்களும் கூட மனரீதியாக தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி விட்டனர்.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது காணப்படாத தற்போதைய கூடுதல் அம்சம் என்று பார்த்தால், அது மக்கள்நலக் கூட்டணி ஒன்றுதான். கடந்த தேர்தலின் போது வெவ்வேறு கூட்டணிகளில் இணைந்து தேர்தலைச் சந்தித்த இடதுசாரியினரும், திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகளும், தேர்தலைப் புறக்கணித்த வைகோவும் இந்தத் தேர்தலில் மக்கள்நலக் கூட்டணியாக இணைந்து களம் காண்கின்றனர். இந்தக் கூட்டணி நிலைக்குமா, நிலைக்காதா என்ற சந்தேகம், சமூகவலைத் தளங்கள் உட்பட பல பொதுவெளிகளில் எழுப்பப்படுகிறது. அதில் கேலி உணர்ச்சி சற்று தூக்கலாகவே இருப்பதையும் பார்க்க முடிகிறது.
மாற்று அரசியல் என்பது எப்போதுமே வெகுசனத் திரட்சியாக உருவெடுக்காது. அங்கொன்றும், இங்கொன்றுமாகவோ அல்லது சிறுபான்மை சக்தியாகவோ தான் அது உருக்கொள்ளும். பல்வேறு அரசியல் மேடு பள்ளங்களும், சமூக முரண்பாடுகளும் முட்டி மோதும் ஜனநாயகத்தில் மாற்று அரசியல் என்பது அந்த அளவில்தான் சாத்தியமாகும். எனவே, ஆரோக்கியமான அரசியலை முன்னெடுக்க விரும்புவோர், மக்கள்நலக் கூட்டணி போன்ற முயற்சிகளைக் கேலி செய்வதை விட்டு விட்டு, அதை ஆதரிக்க முடியாவிட்டாலும் அங்கீகரிக்கத் தயாராக வேண்டும். அரசியல் ரீதியான மாற்றை எதிர்காலத்திலேனும் உருவாக்க அதுவே உதவும். இன்றைய பெரிய கட்சிகளும் கூட, இந்த மாற்றத்தில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளவும் அது வாய்ப்பாக அமையும். அந்த வகையில் அதிமுக, திமுகவைப் புறக்கணிக்க விரும்புவோரின் வாக்குகளை ஈர்க்க மக்கள்நலக் கூட்டணி முயற்சிப்பது ஆரோக்கியமான அரசியலுக்கான அடையாளமாகவே தெரிகிறது.
இது ஒருபுறம் இருக்க, ஆளும் கட்சியான அதிமுக கடும் அதிருப்தியைச் சம்பாதித்திருக்கும் நிலையில், வழக்கம் போல அதற்கு மாற்றாக திமுகவை முன்னிறுத்தவே தமிழக மக்கள் விரும்புவார்கள். ஆளும் கட்சி மீது பெரிய அளவில் அதிருப்தி இல்லை எனக் கூறிக் கொண்டிருந்தவர்களைக் கூட, அதிமுக அரசு காட்டிய கடைசிநேரப் பதற்றம் சிந்திக்க வைத்து விட்டது. அதுவும் கடைசி இரண்டு நாட்கள், அதாவது மார்ச் 3, 4 தேதிகளில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தாலிக்குத் தங்கம் தருவதாக பெரும் கூட்டத்தை வரவழைத்து விட்டு, அரையும் குறையுமாக அவற்றை வழங்கி, பெரும் பகுதியினர் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனர். தாலிக்குத் தங்கம் திட்டம், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வசீகரமான வாக்குறுதிகளில் ஒன்று. அதைக்கூட கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்ற அவர்களுக்கு விருப்பமில்லாமல் போனதுதான் வேதனை. மேலோட்டமான இந்தத் திட்டத்தின் கதியே இதுவென்றால், மற்ற திட்டங்கள் குறித்தும், நடைமுறைகள் குறித்தும் கேட்கவே வேண்டாம். தலைமைக்கு “தடால்” என விழுந்து வணக்கம் போட்டுவிட்டு, சுரண்டல், கூட்டுக்கொள்ளை இவற்றில்தான் கட்சியின் முன்னணி பிரமுகர்களும், அமைச்சர்களும் கவனம் செலுத்தினர். ஆட்சி நிர்வாகம் என்பது சிலர் கையில் முடங்கிப் போய்க் கிடந்தது. அது இயங்கியதற்கான எந்த அடையாளமும் தெரியவில்லை. அரசியல் என்பது கூட்டுக் கொள்ளைக்கான சூட்சுமமாக மாறிப்போனது.
சரி… இப்போது திமுக இந்த்த தேர்தலை எந்த அளவுக்கு வெற்றிகரமாக எதிர்கொள்ளப் போகிறது?
பலரும் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் ஆட்சி அதிகாரத்தை நெருங்கும் அரசியல் திராணியுடன் அடுத்த இடத்தில் களத்தில் நிற்பது திமுகதான். எனவே அந்தக் கட்சியின் செயல்பாடு குறித்த கவனம் அனைவருக்கும் ஏற்படுவது இயல்பானதே. கட்சியின் தலைவர் கலைஞர் கருணாநிதிதான் முதலமைச்சர் வேட்பாளர் என இப்போதுவரை கூறப்படுகிறது. அவரைப் பொறுத்தவரை ஆரவாரமான ஆதரவு அரசியலில் திளைத்து வளர்ந்தவரல்ல. எதிர்ப்பு அரசியலில் எழுந்து வந்தவர்தான். திராவிட இயக்கத்தின் குறைந்த பட்சக் கொள்கை எச்சமாக, குறியீடாக நிலைத்து நிற்பதுதான் அவரது தனித்த அடையாளம். ஆனால், கலைஞரின் அடுத்த வாரிசாக அடையாளம் காட்டப்படும் மு.க.ஸ்டாலினிடம் திராவிட இயக்கத்திற்கான அரசியல் திண்மையும், செறிவும் முழுமையாக இருக்கிறதா என்பது முக்கியமான கேள்வி. எம்.ஜி.ஆரின் நட்சத்திர வசீகர அரசியலையும் தாண்டி, 13 ஆண்டுகள் எதிர்க்கட்சியாகவும், அதற்குப் பிறகு ஆளும் கட்சியாகவும் திமுகவால் நீடிக்க முடிந்தது என்றால், அதற்கு கலைஞர் கருணாநிதியிடமும், அவரை ஆதரித்தவர்களிடமும் இருந்த திராவிட இயக்கம் சார்ந்த அரசியல் திண்மையும், வீரியமும் மட்டுமே காரணம். “இதையே சொல்லி எத்தனை காலத்துக்கு ஓட்ட முடியும்” எனச் சிலர் எள்ளலுடன் பார்ப்பது புரிகிறது. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் திராவிட இயக்கத்துக்கான தேவை நீடிக்கத்தானே செய்கிறது? எனினும், தேவைகளில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்திற்கு ஏற்ப, திராவிட இயக்கமான திமுக தனது அணுகுமுறைகளைக் கூர்மைப்படுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருப்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், அந்த மாற்றம் என்பது கார்ப்பரேட் அணுமுறையில் பரப்புரையை மேற்கொள்வதும், அதற்கான தோற்ற நேர்த்தியை மெருகூட்டிக் கொள்வதும் மட்டுமாக இருக்க முடியாது. அண்ணா மறைந்த போது உலகில் யாருடைய இறுதிச் சடங்கிலும் பங்கேற்காத அளவு கூட்டம் கூடியதே, அது அவருடைய அழகிற்காக கூடிய கூட்டமா என்ன? மக்களின் தலைவராக ஒருவர் எழுச்சி அடைவது, அவரது கருத்துகளாலும், செயலாலுமே தவிர வெறும் தோற்றத்தினால் மட்டும் அது சாத்தியமாகாது. பேச்சு என்பதும் கூட அதற்கு உதவியாக இருக்குமே தவிர, அதுவே தகுதியாகி விடாது. அண்ணா வெறும் பேச்சாளராக இருந்திருந்தால், அத்தனை பெரிய மக்கள் கூட்டத்தை ஈர்த்திருக்க முடியாது. ஆக, சமகால அரசியல், சமூக சவால்களை எதிர் கொள்ளுமளவுக்கு திமுகவும், அதன் அடுத்த தலைமையும் தன்னைத் தகவமைத்துக் கொள்வதன் மூலமாக மட்டுமே மக்களை வெற்றி கொள்ள முடியும். அதற்கு சமூகநீதி இயக்கமான திராவிட இயக்கத்தின் வரலாற்றில் இருந்து அதன் திண்மைகளை உள்வாங்கிக் கொண்டு, தற்போதைய அரசியல் எதிரிகளை எதிர் கொள்ளும் லாவகத்துடன் களமாடுவதற்கு மு.க.ஸ்டாலின் தயாராக வேண்டும். எனினும், இவற்றையெல்லாம் தாண்டி கடந்த காலங்களில் சென்னை மாநகரின் மேயராக இருந்த போதும் சரி, உள்ளாட்சி அமைச்சராக, துணை முதலமைச்சராக பதவி வகித்த போதும் சரி, ஆட்சி நிர்வாகத் திறன் அடிப்படையில் ஸ்டாலினின் செயல்பாடு சிறப்பாகவே இருந்தது எனலாம். குறிப்பாக உள்கட்டமைப்புப் பணிகளில் அவர் காட்டிய அக்கறையும், வேகமும் கவனத்துக்குரியவை. நிச்சயமாக தற்போதுள்ள மற்ற தலைவர்கள் எவரையும் விட, கடுமையான உழைப்பையும் கொடுக்கக் கூடியவர் என்பதிலும் மாற்றமில்லை. இத்தனை சிறப்புகள் இருந்தாலும், கருணாநிதியை விட இவர் நமக்கு வசதியானவர் என “சுப்பிரமணிய சாமி” போன்றவர்கள் எண்ணும் வகையில் ஸ்டாலின் இருப்பது, திராவிட இயக்கத்தின் எதிர்காலத்துக்கு நல்லதல்ல. கருணாநிதியிடம் இருக்கும் தத்துவார்த்தத் திண்மை ஸ்டாலினிடம் இல்லை என்பதாகக் கருதவே இது இடமளிக்கிறது. இந்துத்துவ வாதிகளுக்கும், வர்ணாசிரம வாதிகளுக்கும் எரிச்சலூட்டுபவராக இன்றுவரை இருப்பதுதான் கலைஞர் கருணாநிதி அரசியல் பலமும், அடையாளமுமாகும். அத்தகைய இடத்தில் ஸ்டாலினும் இருக்க வேண்டும் என்பதே திராவிட இயக்கம் சார்ந்து சிந்திப்பவர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
மற்றபடி வாக்குவங்கியின் கூட்டல் கழித்தல் கணக்குகள்தான் வழக்கம்போல வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கப் போகின்றன. அந்த வகையில்தான் விஜயகாந்த்தும், அவரது தேமுதிகவும் கவன ஈர்ப்பு மையமாக மாறியிருக்கின்றனர். விஜயகாந்தைப் போன்றவர்கள் தேர்தல் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுப்பது, ஆரோக்கியமான அரசியலுக்கான அறிகுறியல்ல. எனினும், எப்போதும் போல அரசியலகற்ற சக்திகளை உற்சாகமாகக் கொண்டாடும் நமது ஊடகங்கள், விஜயகாந்தை உன்மத்த வெறியுடன் தூக்கிவைத்துக் கொண்டாடி, கூத்தாடி ஜனநாயக மண்பாண்டத்தை எந்தச் சங்கடமும் இல்லாமல் போட்டுடைத்து வருகின்றன.
21 வது நூற்றாண்டின் கால்பகுதியைக் கடக்கப் போகிறோம். இப்போதும் கூட, அர்த்தமற்ற உளறல் அரசியலை அடையாளம் கண்டு ஒதுக்கிட மக்கள் அறிவு ரீதியாக தயாராகவில்லை என்பது அவர்களது குற்றம் மட்டுமல்ல. அவர்களுக்குக் கற்பிக்க வேண்டிய கடமை ஜனநாயகத்தை “நேர்மையாக” நேசிக்கும் சிந்தனையாளர்கள் அனைவருக்கும் இருக்கிறது. கொள்கை வழிப்பட்ட அரசியல் களமாக தமிழக அரசியல் வெளியை மேம்படுத்துவதற்கான தருணம் இது.
____________________________________________________________________________________________________________