Thamizharivom – Patitru pathu 2
_____________________________________________________________________________________________________________
பழம்பெருமையும், சிறப்பும் பெற்ற திருவையாறு அரசர் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றவரும், தமிழ் அறிஞருமான புலவர் மெய்யாண்டவர், முதுபெரும் தமிழறிஞர் கோபாலய்யரிடமும், மேலும் பல தமிழ்ச்சான்றோர்களிடமும் தமிழ் பயின்றவர் என்பது குறிப்பிடத் தக்கது. மேலும் மதுரகவி எனப் போற்றப்பட்ட பெரும்புலவரும், சைவத்துறவியுமான தவத்திரு மதுரகவி ஆண்டவர் சுவாமிகளின் மகள் வயிற்றுப் பேரனுமாவார். மதுரை தமிழ்ச்சங்கத்தில் கற்றுத் தேர்ந்த வெள்ளாடைத் துறவி தவத்திரு நாராயணசுவாமியால் வளர்த்தெடுக்கப்பட்ட தமிழ் வாரிசுமாவார். சிவகங்கை மாவட்டம் வேப்பங்குளத்தில், மெய்யப்பன், சௌந்தரநாயகி (மதுரகவி ஆண்டவர் சுவாமி மகள்) தம்பதியருக்குப் பிறந்த புலவர் மெய்யாண்டவர் தமிழாசிரியராக, தலைமையாசிரியராக, பின்னர் கல்வித்துறை அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். தமிழில் தலைசிறந்த சொற்பொழிவாளரான இவர் செந்தமிழ் இலக்கியங்களைப் படிப்பதும், பரப்புவதுமாக தமது தமிழ்வாழ்வைத் தொடர்ந்து வருகிறார்.
______________________________________________________________________________________________________________
புறம் பற்றிக் கூறும் திணைகள் பன்னிரண்டு. அவை பற்றிக் காண்போம்.
வெட்சித்திணை
அரசன் ஒருவன் தன் பகைவனுடன் போர் தொடங்க அந்நாட்டின் போர்ப்பறை ஓசை கேட்டு எதிர் நாட்டில் உள்ள அந்தணர், மகளிர்,நோயுடையவர் மகப்பேறு இல்லாத பெற்றோர் இவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவர். அதாவது வெளியேற வேண்டும். அச்செய்தியை உணர முடியாத பசுக்கூட்டத்தைத் தாமே கவர்வர். அரச கட்டளைப்படி வெட்சிப் பூவையோ, மாலையையோ சூடுவர். பகைவரை வென்று கொன்று நிரை (ஆடு,மாடுகள்) கவர்வர். இது வெட்சி.
கரந்தைத் திணை
வெட்சிப்பூவை அணிந்து ஆநிரை (பசுக்கூட்டம்) கவரப்பட்டதை எதிரி நாட்டினர் உணர்வர். உணர்ந்து கரந்தைப் பூவைச் சூடி வெட்சி வீரர் கவர்ந்த பசுக்கூட்டத்தை மீட்பர்.
வஞ்சித்திணை
பகைநாட்டை விரும்பிய அரசன், அதன் மீது படை எடுப்பான். அதற்காக நாளும் முகூர்த்தமும் அறிந்து வஞ்சிப்பூச்சூடி பகைவருடன் போர்புரிவர்.
காஞ்சித்திணை
வஞ்சி மன்னனுக்குப் பகைவன் காஞ்சி மன்னனும், வீரர்களும் ஆவர். இவர்கள் காஞ்சிப் பூச்சூடி, வஞ்சி வஞ்சி நாட்டவரை எதிர்ப்பர்.
உழிஞைத்திணை
பகைவரின் மதிலை வளைத்து உழிஞைப் பூச்சூடிப் போர் புரிவர்.
நொச்சித்திணை
பகைவர் மதிலை கைப்பற்றாது காக்கும் வீரர் நொச்சிப் பூவைச் சூடிக் காப்பர்.
தும்பைத்திணை
இருதிறத்து வீரரும் பரந்த போர்க்களத்தில் எதிர் எதிர் நின்று போர் புரியும் போது இரு திறத்து வீரரும், தும்பைப் பூவைச் சூடுவர்.
வாகைத்திணை
பகைவரை வென்றவர் வெற்றிவிழாக் கொண்டாடுவர். இவர்கள் வாகைப் பூவைச் சூடுவர்.
பாடாண்திணை
வெற்றி பெற்ற அரசனுடைய புகழ், கல்வி, ஈகை, ஆளுமைத் திறன் முதலியவற்றைப் புகழ்ந்து, வீரர்களும், பொதுமக்களும் பாராட்டி மகிழ்வர். இதற்கு அடையாளப் பூ இல்லை.
பொதுவியல் திணை
மேற்கூறிய புறத்திணைகளுக்குப் பொதுவான செய்திகளைக் கூறுவது. இவை பத்தும் புறப் பொருளுக்கே உரியவை. ஆனால், இவை தவிர இரண்டு கைக்கிளை, பெருந்திணை என்பனவாகும். இது அகம் சார்ந்தது. ஆயினும் அன்பினால் வந்த காதலின்பம் அமையாதது. கட்டாயத் திருமணம் போன்றது. சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்படாத பலரும் வெளிப்படத் தூற்றும் தன்மையுடையதாகலின், இது அகத்தில் நிகழத் தகாத புறம் சார்ந்தது. புறம் என்பது வெளிப்படக் கருத்துக் கூறுவது. அனைவரும் அறியத் தக்கது. இந்தக் கைக்கிளை என்பது ஒருதலைக் காமம், ஒருவரைப் பற்றி ஒருத்தியோ, அல்லது ஒருத்தியைப் பற்றி ஒருவனோ சிந்திக்கும் கீழான காம உணர்வு, அல்லது தீய இச்சை.
இன்றையச் சூழலில் தன்னை ஒருத்தி விரும்பவில்லை என்பதற்காக இளைஞன் ஒருவன் அவளை வற்புறுத்தி அவள் உடன்படாமையால், முகத்தில் அமிலம் ஊற்றி, முகத்தையே சிதைக்கும் கொடுமையைச் செய்தி ஊடகங்களில் படிக்கிறோம். பார்க்கிறோம். இதுவே ஒருதலைக் காமம் கைக்கிளை ஆயிற்று.
கைக்கிளை – சிறிய ஒழுக்கம் எனப் பொருள்தரும் சொல். சிறுமி ஒருத்தியை வயதான முதியவனுக்குக் (கிழவனுக்கு) கட்டாயமாக மண முடிப்பது “இது பெருந்திணை என்றும் பொருந்தாக் காமம், அதாவது பொருந்தாத் திருமணம். இதுவும் சமூகத்தில் வெளிப்படையாகப் பழிக்கப்படுவதால் பொருந்தாக் காமம் ஆயிற்று. இனி இத்துறைகளுக்கு திணைகள் வகுக்கப்பட்டுள்ளன.
இயன்மொழி வாழ்த்து முதல், வேதியியல் முடிய 17 துறைகள் உண்டு. இதை விரிக்கின் பெருகும். பதிற்றுப் பத்து முழுதும் பாடாண்திணைப் பாடல்களே. துறைகள் மட்டும் வேறுபடும். இந்நூலின் பாடல்கள் ஐந்து அடிகள் முதல் ஐம்பத்தேழு அடிகள்வரை உள்ளன.
அடிகள் – பாடல் எண்கள்
5 – 87
8 – 47,56
9 – 83
10 – 35
12 – 18,33,34,60,77
13 – 25,37,85,86
14 – 17,26,28,36,46,75,78
15 – 29,57,76
16 – 27,38,72,82
17 – 32,39,49,54,65,69,73,80
18 – 48,61
19 – 58,59,62,79
20 – 11,14,64,66,68,89
21 – 53,55,63
22 – 14,45
23 – 42,44,67
24 – 84
25 – 12,23
26 – 50
27 – 19,20,41,70,71
28 – 13,74
30 – 24
31 – 40,52
37 – 31,43
38 – 21,22
40 – 15
42 – 88
44 – 30
57 – 90
இதில் துறைகள் பாடல் எண்கள் பற்றியும் அறிவோம்.
துறைகள் – பாடல் எண்கள்
இயன்மொழி வாழ்த்து – 18,20,24,43,48
உழிஞை அரவம் – 77
ஒள்வாள் அமலை – 56
களவழி – 36
காட்சி வாழ்த்து – 41,54,61,64,82,90
காவல் முல்லை – 89
குரவை நிலை – 52
செந்துறை பாடாண் பாட்டு -11,12,13,14,15,1617,21,27,31,32,37,38,42,44,45,46,47,53,55,58,59,62,63,66,68,70,71,72,73,74,75,76,79,85,86,88 (இத்துறையில் மிகக் கூடுதலாக 37 பாடல்கள் அமைந்துள்ளன. மற்ற துறைகளில் பாடல்கள் குறைவே)
வஞ்சித்துறை பாடாண் பாட்டு –
22,23,25,26,29,33,50,51,69,80
வாகை – 39,84
வாகைத்துறைப் பாடாண் பாட்டு – 35
விறலியாற்றுப்படை – 40,49,57,60,78,87
இவ்வாறு பாடல்களின் எண்ணிக்கை வரையறுக்கப்பட்டுள்ளது.
____________________________________________________________________________________________________________