Menaulaganathan’s old article on Seeman’s Namthamizhar
________________________________________________________________________________
(சில இயக்கங்கள் தொடங்கப்படும் போது நமக்குள் எழும் கேள்விகள் எத்தனை அர்த்தம் உள்ளவையாக உள்ளன?இயக்குநர் சீமான் “நாம் தமிழர்” இயக்கத்தைத் தொடங்கும் தருணத்தில் – மே-18, 2010- ஈஅரங்கம் என்ற இணைய இதழில் வெளியான இந்தக் கட்டுரையை அதற்கு ஓர் உதாரணம் எனலாம்..)
________________________________________________________________________________
நாம் தமிழர் இயக்கம் : மாறும் போர் வடிவம்?
(மே 18, 2010ல் வெளியானது)
வரும் 18ம் தேதி தமிழகத்தில் மேலும் ஒரு புதிய அரசியல் கட்சி உதயமாகிறது.
நாம் தமிழர் இயக்கத்தை அரசியல் கட்சியாக அறிவிப்பதன் மூலம், திரைப்பட இயக்குநராக இருந்த சீமான், தலைவராக பரிணாமம் அடைகிறார்.
எனினும், நடிகர் விஜயகாந்தின் தேமுதிகவைப் போல, உள்ளீடற்ற அரசியல் பதராக ‘நாம் தமிழர்’ இயக்கத்தை பார்க்க முடியாது.
கடந்த ஆண்டு, தமிழீழத்திற்கான ஆயுதப்போராட்டம் முடிவுக்கு வந்த அதே மே மாதம் 18ம் தேதியன்று, இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருப்பதன் மூலம், தமிழர்களின் அரசியல் போராட்டத்திற்கான பிரகடனமாகவே இதனைப் புரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது.
20 – 21ம் நூற்றாண்டுகளில், தமிழீழத்திற்காக நடத்தப்பட்ட ஆயுதப்போராட்டத்தை, மூன்றாம் உலகத்தின், மிகப்பெரிய தேசிய இனப்போராட்டங்களில் ஒன்றாகவே வரலாறு பதிவு செய்யும் என்பதில் அய்யமில்லை.
அத்தகைய ஆயுதப்போராட்டத்தின் முடிவுக்குப் பின்னர், அதன் தொப்புள் கொடி மண்ணான தமிழகத்தில் உதயமாவதாலேயே, நாம் தமிழர் இயக்கம், மிக முக்கியமான கவனத்தை பெறுகிறது.
எனினும் ‘நாம் தமிழர்’ என்ற பெயரும், இயக்கமும் தமிழகத் தமிழர்களுக்கு புதிய அறிமுகம் அல்ல.
காலம், சில வரலாற்று தொடர்ச்சிக்கான கன்னிகளை, கச்சிதமாகவே பின்னிவைக்கும் என்பதற்கு, இந்த நிகழ்வு ஓர் எடுத்துக்காட்டு.
தமிழர்களின் சுவாசமாக இருந்துவரும் தினத்தந்தி நாளேட்டின் நிறுவனரும், தமிழர்களின் சுய உரிமைகளுக்காக தொடர்ந்து போராடியவருமான சிவந்தி ஆதித்தனார் 1942ல் தொடங்கிய இயக்கத்தின் பெயர்தான் ‘நாம் தமிழர்’.
லண்டனில் பாரிஸ்டர் பட்டம்பெற்று, பின்னர் சிங்கப்பூரில் வழக்கறிஞராக பணியாற்றி வந்த ஆதித்தனார், 1942ம் ஆண்டு தமிழகத்திற்கு திரும்பினார். அப்போது தந்தி என்ற நாளேட்டையும், தமிழன் என்ற வார இதழையும் தொடங்கிய அவர், பெரியார், அண்ணா உள்ளிட்ட தலைவர்களைச் சந்தித்து, தமிழகத்தின் அரசியல் நிலை குறித்தும் ஆலோசனை நடத்தினார். இதன் தொடர்ச்சியாக தமிழ் ராஜ்ஜியக் கட்சி என்ற அமைப்பையும் தோற்றுவித்தார். தமிழர் நலன், தமிழர் உரிமை உள்ளிட்ட வேலைத் திட்டங்களை, கோட்பாடாக கொண்ட அரசியல் இயக்கமாக அதனை வளர்த்தெடுக்க விரும்பினார். இந்த தமிழ் ராஜ்ஜியக் கட்சிதான் பின்னாளில் நாம் தமிழர் இயக்கமாக மாறியது.
தமிழர்களின் அரசியல் வரலாற்றில், திராவிட இயக்கமும், நாம் தமிழர் இயக்கமும் சற்றே முன்பின்னாக முகிழ்த்தெழுந்த முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் கோட்பாடுகள் என்பதை மறுக்க முடியாது.
1957 முதல், சட்டப்பேரவை உறுப்பினராகவும், பின்னர் திமுக அமைச்சரவையில் (1971) அமைச்சராகவும் ஆதித்தனாரின் அரசியல் பயணம் தொடர்ந்ததற்கு, இரண்டு இயக்கங்களுக்கும் இருந்த கோட்பாட்டு நெருக்கமே அடிப்படையாக இருந்துள்ளது.
தற்போதைய நாம் தமிழர் இயக்கத்தின் எதிர்கால அரசியலைத் தீர்மானிப்பதற்கும், வளர்த்தெடுப்பதற்கும், இந்த பழைய வரலாற்றின் மீதான புரிதல் அவசியமானது.
தமிழர்களின் அரசியலை முன்னகர்த்திச் செல்லும் நோக்கத்துடன் தற்போது தொடங்கப்பட்டுள்ள இந்த இயக்கம், மூன்றாவது உலகம் என்ற தற்போதைய பின் நவீனத்துவ சூழலின் சவால்களை எதிர்கொள்ளும் அரசியல் லாவகங்களை பெற்றிருக்க வேண்டும் என்பதும் அதைவிட அவசியம்.
அதற்கு, 20ம் நூற்றாண்டில், இலங்கையிலும், இந்திய ஒன்றியத்திலும் ஏறத்தாழ ஒரே கலக்கட்டத்தில் தொடங்கிய தமிழர்களின் போராட்டம், வெவ்வேறு திசைகளில் பயணித்து, வேறுபட்ட புள்ளிகளில் முடிந்த வரலாற்று நிகழ்வுகளில் இருந்து சில பாடங்களை கற்றுக்கொள்ள வேண்டும்.
இலங்கையில், சுயநிர்ணய உரிமை கோரி, தமிழர்கள் தொடங்கிய அரசியல் அறப்போராட்டம், அது சாத்தியமாகாததுடன், மோசமான இனவெறித் தாக்குதலையும் எதிர்கொள்ள நேர்ந்த போது, தமிழீழ போரராக வடிவெடுத்தது.
அதேகாலக்கட்டத்தில், தமிழகத்தில் ஹிந்தி எதிர்ப்பு, சாதி ஒழிப்பு, தீண்டாமை, திராவிட நாடு என்ற கோரிக்கையின் அடிப்படையில் தீவிரமாக எழுச்சி பெற்ற தமிழர்களின் போராட்டம், பின்னர் அரசியல் வடிவம் பெற்று, அரியணையைக் கைப்பற்றும் ஜனநாயக எல்லையைத் தொட்டு நின்றது.
இரு வேறு நிலப்பரப்பில், ஒரே இனத்தைச் சேர்ந்த தமிழர்கள், தொடங்கிய இந்த போராட்டங்களில் ஏற்பட்ட அரசியல் வளர்சிதை மாற்றங்கள், பிரமிப்புக்கு உரியவை.
இலங்கையில், அறவழியில் தொடங்கி ஆயுதப்போராக முடிந்த போராட்டம், தமிழகத்தில் வன்முறையில் தொடங்கி, ஜனநாயக அரசியலாக வடிவம் பெற்றது.
இலங்கையில் தமிழர்கள் மீது போர் திணிக்கப்பட்டது என்ற வரலாற்று உண்மையை யாரும் மறுக்க முடியாது.
அதே நேரத்தில், தமிழகத்தில், இளைஞர்களின் நெஞ்சில் தீயாக பற்றியெரிந்து, வன்முறையாக வெடித்த ஹிந்தி எதிர்ப்பு போராட்டக் கனலை, ஜனநாயக பிளம்பாக மாற்றி, அரசியலாக வார்த்தெடுத்த சாகசத்தை, திராவிட இயக்கம் செய்து முடித்தது. பெரியாரின் கனல் வீச்சும், அண்ணாவின் கனிப்பேச்சும் அத்தகைய அரசியல் வேதிவினையை நிகழ்த்தின என்பதை நாம் புறந்தள்ளிவிட முடியாது.
திராவிட இயக்கத்தின் மீது, தமிழ்த்தேசியத் தலைவர்கள் பலரும் கடுமையான விமர்சனங்களைக் கொண்டிருப்பது உண்மைதான். ஆனாலும், ஒரு தேசிய இனத்தின் இருவேறு நிலப்பரப்பில் ஏற்பட்ட எழுச்சிகளின் பயணத்தில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை கவனத்தில் கொள்ளாமல், அடுத்த கட்டத்தை நோக்கி நகர முடியாது.
பாட்டாளிகளின் புரட்சியாக வெடித்த பொதுஉடைமைப் போருக்கு, மார்க்சியம் என்ற தத்துவ வடிவம் கிடைத்திரா விட்டால், உலகளாவிய அரசியல் இயக்கமாக இன்றுவரை அது நிலைத்திருக்க முடியாது.
அதே போலத்தான், தமிழகத்தில் தமிழர்களின் தன்னெழுச்சியாக கிளர்ந்தெழுந்த போராட்டம், திராவிட இயக்கம் என்ற அரசியல் வடிவத்தை பெற்றபோது, ஜனநாயக அமைப்புக்கான தகவமைப்புடன் அதன் பயணம் நீடித்தது.
பின்னாளில் எல்லா அரசியல் இயக்கத்திலும் ஏற்படக்கூடிய, பின்னடைவுகள், பிளவுகள், இழிவுகள் போன்றவை, திராவிட இயக்கத்திலும் ஏற்பட்டன.
திராவிடம் என்ற நிலப்பரப்பே இல்லாத போது, அதன் பெயரில் இயக்கங்களும், கட்சியும் எதற்கு என்ற கேள்வி மிகவும் எதார்த்தமானது.
ஆனால், அந்த இயக்கம் தோன்றிய காலத்தில், திராவிடம் என்பது நிலத்தின் அடையாளமாக இல்லாமல், ஓர் இனத்தின் குறியீடாகவே கொள்ளப்பட்டது என்ற உண்மையை, அதன் வரலாற்றில் இருந்து நாம் புரிந்து கொள்ள முடிகிறது.
ஆனால், இலங்கையில் ஏற்பட்ட இன எழுச்சி, ஆயுதத்தை மட்டுமே நம்ப வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது ஏன் என்ற கேள்வியை, இந்த தருணத்திலும் எழுப்பாவிட்டால், பின் எப்போதுமே அது முடியாமல் போய்விடும்.
உலகிலேயே, முப்படைகள் கொண்ட அமைப்புடன் உரிமைப்போரை நடத்திய ஒரே இனம் தமிழ் இனம்தான். அப்படி இருந்தும், இப்படி ஒரு முடிவை சந்திக்க வேண்டிய அவலம் ஏன் ஏற்பட்டது?
கேள்வி கசப்பானதுதான். ஆனாலும் வேறு வழியில்லை.
அரசியல் படுத்தப்படாத எந்த ஒரு போராட்டத்தின் முடிவும், இப்படித்தான் இருக்கும் என்ற எளிய உண்மையை, ஏனோ அந்த மாவீரர்கள், கடைசிவரை பொருட்படுத்தவே இல்லை.
தமிழர்களின் மறு எழுச்சியாக உருப்பெற்றிருக்கும் நாம் தமிழர் இயக்கமேனும், இந்த உண்மையை உள்வாங்கிக் கொண்ட உரம் மிக்க அரசியல் இயக்கமாக வளரவேண்டும் என்பதே நமது விருப்பம்.
வேர்களே இல்லாமல், விழுதுகளை மட்டுமே நம்பி, ஓர் ஆல மரம் நீண்ட நாட்களுக்கு நிலைத்து நிற்க முடியாது. அதைப் போலவே, தத்துவ பலம் இல்லாத அரசியல் இயக்கமும், வெற்று முழக்கங்களால் மட்டுமே வெற்றி பெற முடியாது என்பதும் அசைக்க முடியாத உண்மை.
நாம் தமிழர் இயக்கத்திற்கு தலைமை ஏற்றிருக்கும் சீமான் இதனைப் புரிந்து கொள்வார் என்றே நம்புவோம்.
– மேனா. உலகநாதன்
நன்றி: ஈ அரங்கம் இணைய இதழ் (மே 18, 2010)