நடப்பு.காம் இணைய இதழில் “அரசியல் பேசுவோம்” என்ற அரசியல் தொடர் வந்து கொண்டு இருக்கிறது. செம்பரிதி அவர்கள் எழுதுகிற அருமையான அரசியல் கட்டுரைகள், இன்றைய இளம் தலைமுறையினருக்கு எளிதாக புரியும் வகையில், முந்தைய தலைமுறை அரசியலையும், இன்றைய அரசியலையும் அறிமுகப்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டுள்ளது.
அரசியலுக்கும், நமக்கும் என்ன தொடர்பு? எதற்காக நாம் அரசியல் பேச வேண்டும்?அரசியலும் சமூகமும் வேறில்லை. இரண்டும் பின்னிப் பிணைந்து தான் இருக்கிறது. அரசியல் இல்லாமல் நம் வாழ்க்கை இல்லை.
நேரடியாகவோ, மறைமுகமாகவோ, நாம் தேர்ந்து எடுக்கும் அரசும், தலைவர்களும் நம்முடைய வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டே தான் இருப்பார்கள். எனக்கு அரசியல் தேவை இல்லை, நான் அரசு, தலைவர்களை நம்பி இல்லை, என்று நாம் சொல்லுவோமானால், நாம் நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டு இருக்கிறோம் என்று பொருள்.
நீங்கள் செல்லும் சாலையிலும், உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் தெரு விளக்கிலும், ஏன் உங்கள் வீட்டுக் குழாயில் வரும் தண்ணீரிலும் அரசியல் கலந்து இருக்கிறது.
அரசியல் இல்லாமல் உங்கள் வாழ்க்கை இல்லை. அப்படிப்பட்ட அரசியலைப் பேசாமல் போனதாலும், பேசத் தயங்கியதாலும், அல்லது பயந்து ஒதுங்கியதாலும் நமது வாக்கை மட்டும் செலுத்தி விட்டு, வளர்ச்சி எப்போது வரும் என்று ஏங்கிக் காத்துக் கொண்டே இருக்கிறோம்.
நாம் அரசியலைப் பேசாமல் போனதால், நம் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்காததால் தான் இன்றைய இளைய தலை முறையினர் முகநூல், கட்செவி போன்ற சமூக வலை தளங்களில் வரும் செய்திகளின் அடிப்படையிலேயே தங்கள் வாக்கை யாருக்கு செலுத்துவது என்று முடிவு செய்கிறார்கள்.
அரசியல் பேசாமல் போனதால் தான் ஊழல்வாதிகளும், கொள்ளை அடிப்பவர்களும், நம்முடைய பிரதிநிதிகளாக வருவதற்கு காரணமாக அமைந்து விட்டது. நல்லவர்கள் எல்லாம் அரசியல் பேச, ஈடுபட பயந்து ஒதுங்கியதால் வந்த விளைவைத் தான் இப்போது நாம் அனுபவித்துக் கொண்டு இருக்கிறோம். நல்லவர்கள் வர மாட்டார்கள் என்ற துணிச்சலில் தான், பணம் ஒன்றையே எண்ணமாக கொண்டவர்களும், அரசியலை ஒரு சேவையாக நினைக்காமல், ஒரு தொழிலாக மட்டுமே நினைப்பவர்களும் நம்மை ஆண்டு கொண்டு இருக்கிறார்கள்.
ஒரு தனியார் தொலைக்காட்சியில் அந்த நிகழ்ச்சி வருகிறது. சாதாரண பாமர மக்களிடம் நிகழ்ச்சித் தொகுப்பாளர் எளிய அரசியல் கேள்விகளை கேட்கிறார். மிகவும் எளிய கேள்விகள் தான். ஒருவரிடம் தமிழ்நாட்டின் தற்போதைய முதல்வர் யார் என்று கேட்கிறார். அவர் “எம் ஜி ஆர்” என்று சொல்கிறார். அதே கேள்வியை ஒரு பெண்மணியிடம் கேட்கிறார். அவர் சொன்ன பதில் என்ன தெரியுமா? “அந்த அளவுக்கு எல்லாம் எனக்கு தெரியாதுங்க” என்கிறார். இதற்கு மேல் எளிய கேள்வி கேட்க வேண்டும் என்றால் “காலையில உங்க வீட்டுல என்ன சாப்பாடு” என்று தான் கேட்க வேண்டும். இது தான் அரசியல் பேசாததின் மிகப் பெரிய விளைவு.
பல பொது இடங்களிலும், வணிக நிறுவனங்களிலும், கடைகளிலும் “இங்கே அரசியல் பேசாதீர்கள்” என்று எழுதி ஒட்டியிருப்பார்கள்.. அதற்கு அவர்கள் சொல்லக்கூடிய ஆகப் பெரிய விளக்கம் “மாற்றுக் கருத்து உள்ளவர்கள் விவாதிக்கும்போது சண்டை வரும் வாய்ப்பு உண்டு” என்பது தான். மாற்றுக் கருத்து உள்ளவர்கள் பேசிக்கொள்ளவோ, விவாதம் செய்யவோ கூடாது என்றால், எப்படி கருத்துப் பரிமாற்றம் நிகழும். மற்றக் கருத்து உள்ளவர்களை எப்படி சரியாக புரிந்துக் கொள்ள முடியும். இந்த நிலையில், இளம் தலைமுறை மக்களிடம் எப்படி ஜாதி, மத, இன சகிப்புத் தன்மையை எதிர்பார்க்க முடியும். அந்த சகிப்புத் தன்மை இல்லாதவர்கள் மத, இன, ஜாதி பாகுபாடு இல்லாமல் தங்களுக்கான சரியான தலைவரை, அரசை எப்படி தேர்ந்து எடுப்பார்கள்?
பரிமாற்றம், புரிதல் இல்லாமல் போனதால் தான் இன்றும் பெரும்பாலான குடும்பத்தில் தன்னுடைய தந்தை ஒரு கட்சிக்கு வாக்கு செலுத்தினார் என்ற ஒரே காரணத்தினால், மகனோ அல்லது மகளோ அதே கட்சிக்கு வாக்குப் போட்டும், தன் கணவர் ஒரு கட்சிக்கு வாக்கு செலுத்தினார் என்ற ஒரே காரணத்தினால் மனைவியும் அதே கட்சிக்கு வாக்கு செலுத்தும் நிலை உள்ளது.
திடீர் என்று IITயில் கட்டணத்தை இரு மடங்காக்கி விட்டார்கள், மின் கட்டணத்தை உயர்த்தி விட்டார்கள், பால் விலையை உயர்த்தி விட்டார்கள், பருப்பு விலை விண்ணைத் தொட்டு விட்டது என்றெல்லாம் புலம்பி ஒரு பயனும் இல்லை. இதில் எல்லாம் அரசியல் கலந்து இருக்கிறது, இதற்கெல்லாம் நாம் தேர்ந்து எடுத்த அரசும், தலைவர்களும் தான் காரணம் என்று புரிந்து கொண்டு, வெளிப்படையாக பேசும் வரையில் மாற்றம் வர வாய்ப்பில்லை.
தேர்தல் நாள் என்பது உங்களுக்கு பிடித்த திரைப் படத்தையோ, உங்கள் வீட்டு சோபாவில் உட்கார்ந்து பாப்கார்ன் கொரித்துக் கொண்டே IPLயையோ பார்ப்பதற்காக கொடுக்கப்படும் விடுமுறை அல்ல.
முடிந்த வரையில் உங்கள் வீட்டில், குடும்பத்திடம் அரசியல் பேசுங்கள். குறிப்பாக அடுத்த தலைமுறையான உங்கள் பிள்ளைகளிடம்!
அரசியல் ஒரு சாக்கடை இல்லை. தெளிந்த நீரோடையாக இருந்த அரசியலில், நாம் தேர்ந்து எடுத்த அழுக்கு மனிதர்கள் இறங்கிய பின்பு தான் அது சாக்கடையாக ஆனது. அதை சுத்தப்படுத்துவது சாத்தியம் தான். அதற்கு, நிறைய அரசியல் பேசுவோம்! நல்ல அரசைத் தேர்ந்தெடுப்போம்!