அரசியல் பேசுவோம் -12 – தமிழகத்தை அதிரவைத்த பகுத்தறிவுத் திரைவசனம்! : செம்பரிதி (பேசப்படாதவற்றைப் பேசும் தொடர்)

 

Arasiyal pesuvom – 12

_______________________________________________________________________________________________________________

 

periyar anna 14.5.161949ம் ஆண்டு, செப்டம்பர் 17ம் தேதி மாலை சென்னை ராபின்சன் பூங்காவில் நடைபெற்ற, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொடக்கவிழா பொதுக்கூட்டத்துக்கு பெத்தாம்பாளையம் பழனிச்சாமி தலைமை தாங்கினார். தலைவரின் முன்னுரைக்குப் பிறகு, ஏ.சித்தையன், என்.வி.நடராஜன், ஏ.வி.பி.ஆசைத்தம்பி, இரா.நெடுஞ்செழியன், மதுரை முத்து, கே.கே.நீலமேகம், சத்தியவாணி முத்து ஆகியோர் உரையாற்றினர். கே.கே.நீலமேகம் உரையாற்றிக் கொண்டிருந்த போது மழை தூறத் தொடங்கி உள்ளது. அண்ணா உரையாற்றத் தொடங்கிய போது, மழை கொட்டத் தொடங்கியது. ஆனாலும், அண்ணா பொழிந்த சொல்மழையில் லயித்திருந்த மக்கள் கூட்டம் சற்றும் கலையவில்லை.

 

திராவிடர் கழகம் என்ற மரத்தின் ஒட்டுமாஞ்செடியாக முளைத்திருப்பதுதான் திராவிட முன்னேற்றக் கழகம் என்று அப்போது கூறிய அண்ணா, அது வேறு, இது வேறு மரமல்ல, இரண்டில் இருந்தும் பூத்துக், காய்த்துக் கனியப் போவது ஓரே கனிதான் என்று உறுதிபடக் கூறினார்.

 

தந்தையுடன் பிணக்கு ஏற்பட்டுப் பிரிந்தாலும், அவருக்குப் பிடித்த தனயனாகவே தனது அரசியல் தனிக்குடித்தனம் தொடரும் என்பதை எந்தக் குழப்பமும் இல்லாமல், திமுகவின் தொடக்கவிழாப் பொதுக்கூட்டத்திலேயே தெளிவு படுத்தி விட்டார்.

 

அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு, அண்ணா, பாரதிதாசன் போன்றோர் எழுதிய புத்தகங்களுக்கு தடைவிதிப்பதும், அவற்றைப் பறிமுதல் செய்வதுமாக அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டிருந்தது. அதுகுறித்துத் தமது ராபின்சன் பூங்கா உரையின் நிறைவில் குறிப்பிட்ட அண்ணா, எழுத்துரிமை, பேச்சுரிமையை அடக்கும் காங்கிரஸ் சர்க்காரின் அடக்குமுறையை எதிர்த்துப் போரிட திமுக தயாராக வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். அதற்கு சமதர்மத் தோழர்களும், கம்யூனிஸ்டுகளும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொள்ளத் தவறவில்லை.

 

துடிப்புடன் தொடங்கிய திமுகவின் அரசியல் பயணம், அடுத்தடுத்து வெற்றியை நோக்கியே நகரத் தொடங்கியது.

 

1950ம் ஆண்டு இடஒதுக்கீடுக்கு எதிராக உயர்நீதிமன்றம் பிறப்பித்த ஓர் உத்தரவு, பெரியாரையும், அண்ணாவையும் போராட்டக் களத்தில் மீண்டும் ஒன்றிணைய வைத்தது. கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படுவதால், தங்களுக்கு இடம் கிடைக்கவில்லை எனக் கூறி இரு பிராமண மாணவர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அதே ஆண்டு நடைமுறைக்கு வந்திருந்த அரசியல் சாசனத்தின் 29 வது பிரிவின் 2வது சரத்தைச் சுட்டிக்காட்டி, இடஒதுக்கீடு மற்றவர்களின் அடிப்படை உரிமையை மீறக்கூடிய வகையில் இருப்பதாக அவர்கள் தங்களது மனுவில் கூறி இருந்தனர். இதனை விசாரித்த உயர்நீதிமன்றமோ இடஒதுக்கீடு என்பது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என தீர்ப்பு வழங்கியது. உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவு மாணவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பெரியாருடன் இருந்த பிணக்குகளையெல்லாம் தள்ளி வைத்துவிட்டு, அண்ணா தலைமையிலான திமுக, அவருடன் கைகோர்த்து போராட்டக் களத்தில் குதித்தது. ஆகஸ்ட் 14ம் தேதி முழு அடைப்புப் போராட்டத்துடன் பேரணி, ஊர்வலங்களும் நடைபெற்றன. இந்தப் போராட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினரும் திரளாகப் பங்கேற்றுள்ளனர். போராட்டம் வலுத்ததை அடுத்து, சென்னை மாகாண அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. உச்சநீதிமன்றமும் இடஒதுக்கீட்டுக்கு எதிரான உத்தரவைப் பிறப்பிக்கவே, மத்தியில் இருந்த நேரு தலைமையிலான அரசு 1951ம் ஆண்டு பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டைப் பாதுகாக்கும் வகையில் அரசியல் சாசனச் சட்டத்தில் திருத்தம் செய்தது.

 

கட்சி தொடங்கப்பட்டு ஒரே ஆண்டில் வெடித்த தீவிரமான போராட்டத்தில் பங்கேற்றதும், அதற்குக் கிடைத்த வெற்றியும் திமுகவுக்கு வெகுமக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கைப் பெற உதவியது.

 

anna karuna1951ம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னையில் நடைபெற்ற மாநில மாநாட்டில், கட்சியின் கருப்பு சிவப்பு kudiarasuவண்ணக் கொடியை அண்ணா ஏற்றிவைத்தார். திராவிட நாடு திராவிடருக்கே என்ற முழக்கம் இந்த மாநாட்டில் உரத்து ஒலித்தது. 21 வயதை அடைந்த அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்ட நிலையில், 1952ம் ஆண்டு முதல் தேர்தல் நடைபெற்றது. சுதந்திரத்திற்குப் பின் நாடாளுமன்றத்துக்கும், மாகாணங்களுக்கும் நடைபெற்ற முதல் தேர்தல் அது. இந்தத் தேர்தலில் மத்தியில் காங்கிரஸ் பெரும் வெற்றியைப் பெற்றது. சென்னை மாகாணத்துக்கு அப்போது நடைபெற்ற தேர்தலில் திமுக போட்டியிடவில்லை. திராவிட நாடு கொள்கையை ஆதரிப்பதாக கையெழுத்திட்டுத் தரும் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரிப்பதாக அறிவித்தது. கம்யூனிஸ்டுகள் அந்த நிபந்தனையை ஏற்கவில்லை. ராமசாமி படையாச்சியாரின் உழைப்பாளர் கட்சியும், மாணிக்கவேலரின் காமன் வீல் கட்சியும் திமுகவின் நிபந்தனையை ஏற்று, அக்கட்சியின் ஆதரவுடன் தேர்தலில் போட்டியிட்டன.

 

தேர்தல் அரசியல் மீதுள்ள வேட்கை காரணமாகவே அண்ணா தி.கவில் இருந்து பிரிந்து சென்றார் என்ற பெரியார் தொண்டர்களின் விமர்சனச் சூடு குறையாத காலம் அது. மேலும் பெரியாரின் விமர்சனம் உண்மையாகிவிடும் என்றும் அண்ணா கருதியிருக்கக் கூடும். இதனால், 1952ம் ஆண்டு நடைபெறும் முதல் பொதுத்தேர்தலில் திமுக நேரடியாகப் போட்டியிடுவதில்லை என, 1951ம் ஆண்டு நடைபெற்ற திமுக மாநில மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது. பெரியாரின் திராவிடர் கழகமோ, காங்கிரசைத் தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவாகப் பரப்புரை மேற்கொண்டது. அதற்கு ஓரளவு பலனும் கிடைத்தது. அந்தத் தேர்தலில், மொத்தமிருந்த 375 இடங்களில் 152 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி அடைந்தது. கம்யூனிஸ்ட் கட்சிக்கு 63 இடங்கள் கிடைத்தன. மீதமுள்ள இடங்களில் மற்ற கட்சிகள் வெற்றி பெற்றன. அப்போது அமைந்த காங்கிரஸ் அரசில், ராஜாஜி மாகாணத்தின் மேலவை உறுப்பினராக்கப்பட்டு முதலமைச்சராக பதவியேற்றார். ராஜாஜி, பக்தவச்சலம் போன்ற தலைவர்கள் ஒருபோதும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவிகளைப் பெற்றதில்லை.

 

1952ம் ஆண்டு, தமிழகத்தில் உள்ள ரயில்நிலையங்களின் பெயர்ப்பலகைகளில் முதலில் இந்தி எழுத்தே இடம்பெறும் நிலையை மத்திய அரசு ஏற்படுத்தியது. இதற்கு எதிராக, 1952ம் ஆண்டு ஆகஸ்ட் 1ம் தேதி, இந்தி எழுத்துக்களைத் தார்பூசி அளிக்கும் போராட்டத்துக்கு பெரியார் அழைப்பு விடுத்தார். அதே நாளில் இந்தி ஆதிக்கத்துக்கு எதிரான போராட்டத்தை திமுகவும் அறிவித்தது. இந்தப் போராட்டத்தை அறிவித்த அண்ணா, “திகவும், திமுகவும் இரட்டைக்குழல் துப்பாக்கிகளாக வடநாட்டு ஆதிக்கத்தைத் தாக்கப் போகிறது” எனக் குறிப்பிட்டார்.

 

karuna nedu annaகோவை ரயில்நிலையத்தில் அண்ணா, ஈ.வெ.கி சம்பத், நடிகர் கே.ஆர்.ராமசாமி உள்ளிட்டோர் இந்தி எழுத்துக்களை அழிக்கும் போராட்டத்தில் ஈடுபட, திருச்சி ரயில்நிலையத்தில் கலைஞர் கருணாநிதி அதே போராட்டத்தை நடத்தினார். அப்போது ஊர்வலமாகச் சென்ற திமுகவினரை, எதிரே காரில் வந்த பெரியார், இறங்கி நின்று வாழ்த்தி வழியனுப்பியதாக கருணாநிதி பின்னாளில் குறிப்பிட்டுள்ளார். 1952ல் நடைபெற்ற இந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம் திமுகவுக்கு புதிய அரசியல் உத்வேகத்தைக் கொடுத்தது.

 

அப்போதுதான், “அம்பாள் எப்போதடா பேசினாள் அறிவு கெட்டவனே” என்ற கலைஞர் மு. கருணாநிதியின் அதிரவைக்கும் பகுத்தறிவு வசனத்துடன், பராசக்தி திரைப்படம் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியது. எம்.ஜி.ஆரும் திமுகசார்ந்த முன்னணி நடிகராக இருந்த காலம் அது என்பதால், திமுகவின் வசீகரம் மேலும் மெருகேறியது. தினமணி கதிர் ஏடு “பராசக்தி” படத்தைக் கிண்டலடிக்கும் வகையில் “பரப்பிரம்மம்” என்ற கேலிச்சித்திரத்தை வெளியிட்டு எள்ளி நகையாடி இருந்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக “பரப்பிரம்மம்” என்ற தலைப்பிலேயே கட்சிக்கான பிரச்சார நாடகங்களை எழுதி நடத்தத் தொடங்கினார் கருணாநிதி.

 

_______________________________________________________________________________________________________________

 

அதிமுக திராவிட இயக்கத்தின் அங்கமல்ல : நக்கீரன் இதழுக்கு கலைஞர் அளித்த சிறப்புப் பேட்டி (Kalaingar Karunanidhi Special Interview)

தமிழறிவோம் – பதிற்றுப்பத்து 4 : புலவர் ஆறு.மெ.மெய்யாண்டவர்

Recent Posts