ஈசலென வீழ்ந்ததேன்? -1 : செம்பரிதி (தேர்தல் முடிவு குறித்த அரசியல் பகுப்பாய்வு – குறுந்தொடர்)

 

Esalena Veeznthathen? – 1

_________________________________________________________________________________________________________

 

Vote art1984ம் ஆண்டுக்குப் பிறகு, அந்த வரலாறு திரும்பி உள்ளது. ஆட்சியில் இருந்த கட்சியே அடுத்த 5 ஆண்டுகளுக்கும் நீடிக்கின்ற வகையில் தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன. இந்த முடிவு ஜெயலலிதாவுக்கும், அவரது அடிப்பொடிகளுக்கும் மகிழ்ச்சியானதாக இருக்கலாம். அரசியல் மாற்றத்தையும், ஆட்சி மாற்றத்தையும் விரும்பியவர்களுக்கு இது அத்தனை உவப்பானதாக இருக்க முடியாது.

 

மாற்றம் என்ற உடன் அந்தச் சொல்லை முழக்கமாக முன்வைத்து பரப்புரை மேற்கொண்ட அரசியல் கட்சியைச் சொல்வதாக நினைத்து விட வேண்டாம். உண்மையான மாற்றத்தை விரும்பிய பலர், கட்சி அரசியல் எல்லைகளுக்கு அப்பாற்பட்டு, தீவிரமான கவலைகளோடு இந்தத் தேர்தல் கூத்துகளைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் பலர், கோபத்துடனும் கொந்தளிப்புடனும் பேசுவதைப் பார்க்க முடிகிறது.

 

“என்ன இந்த மக்கள் இத்தனை மோசமாக இருக்கிறார்கள்…. ஒரு செல்போனுக்கும் சில நூறு ரூபாய்களுக்குமா வாக்களிப்பார்கள்…” என வெதும்புகிறார்கள். நியாயமான ஆத்திரம்தான். எதிர்த்து நின்ற அத்தனை பேரும் இத்தனை மோசமாக ஈசல்களைப் போல விழுந்ததேன்? என்ற கேள்வி, அழுத்தமான அரசியல் மாற்றத்தை விரும்பும் அத்தனை பேரது மனதிலும் எழத்தான் செய்கிறது.

 

வைகோவின் கடும் உழைப்பால்(?) உருவாக்கப்பட்ட தேமுதிக அணிக்கு ஓர் இடம் கூட கிடைக்கவில்லை. விஜயகாந்தின் காமெடிப் பேச்சும், வைகோ, திருமாவளவன், இடதுசாரிகள், ஜி.கே.வாசன் ஆகியோர் நம்பி மிரண்ட அவரது திரைச் செல்வாக்கும் வெற்றிக்கு கிஞ்சித்தும் கை கொடுக்கவில்லை. வைகோவைப் பொறுத்தவரை தான் தொடங்கிய வேலையை, கோவில்பட்டி தேர்தல் களத்தில் இருந்து வெளியேறிய போதே முடித்துக் கொண்டார். திருமாவளவன் காட்டுமன்னார்குடியில் 87 வாக்குகளில் தோல்வியைத் தழுவினார். தமிழக வரலாற்றிலேயே இடதுசாரிகள் இல்லாத சட்டப்பேரவை இப்போதுதான் அமையப் போகிறது. இடதுசாரிகள் இந்தத் தேர்தலில் புரிந்த சாதனை அதுதான். நாம் தமிழர் சீமான் ஏதேதோ முழங்கினார். என்ன முழங்கினார் என்பதை அவரிடம்தான் கேட்டுப் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால், குறைந்தபட்ச அரசியல் அங்கீகாரத்தைக் கூட மக்களிடம் அவர் பெற முடியவில்லை. எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு திமுகவும், அதிமுகவும் மாறி, மாறித்தான் ஆட்சியில் அமர்வார்கள் என்ற எளிதான அரசியல் சூத்திரமும் இந்தத் தேர்தலில் காணாமல் போயிற்று. திமுக எதிர்க்கட்சி இடத்தில் அமர்வதற்கான இடங்களை மட்டுமே பெற முடிந்தது. வலிமையான எதிர்க்கட்சி என்ற வகையில் அக்கட்சிக்கு இந்தத் தேர்தல் ஆறுதல் பரிசைத் தந்திருக்கிறது எனலாம்.tn parties

 

ஆளும் அரசின் மீது ஏராளாமான புகார்கள் இருந்தன. அத்தனை இருந்தும் அக்கட்சிக்கே மக்கள் வாக்களித்திருக்கிறார்களே ஏன்? ஆளும் கட்சிக்கு எதிரான வாக்குகள் பிரிந்ததுதான் அதிமுக மீண்டும் ஆட்சியில் அமர்வதற்கு உதவியது என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். அந்த உண்மை தெரியாமல் தேமுதிக அணியை வைகோ உருவாக்கினார் என்று கூறிவிட முடியாது. எல்லாம் தெரிந்தே செய்த தவறுகள்தான். அந்த வகையில் அதிமுகவின் வெற்றிக்கு உதவுவதற்கான அணியாகவே தேமுதிக – மக்கள் கூட்டணி – தமாகா என்ற அணி செயல்பட்டது என்பதை இனியும் மறுத்துப் பயனில்லை.

 

ஆனால், அதையும் தாண்டி பல இடங்களில் திமுக வேட்பாளர்கள் மிகக்குறைந்த வாக்குவித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளனர். உதாரணமாக ராதாபுரம் தொகுதியில் திமுக வேட்பாளர் அப்பாவு 47 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளார். இவையெல்லாம் தேர்தல் களத்தில் திமுக சரியான வியூகத்தை வகுக்கத் தவறிவிட்டதை அப்பட்டமாகவே உணர்த்துகிறது. அதிமுகவுக்கு இப்படி ஒரு வெற்றி கிடைக்கும் என்பதை ஜெயலலிதாவே எதிர்பார்க்கவில்லை என்பதை, மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக அவர் பேட்டி அளித்த போது வெளிப்பட்ட பரவச உணர்வில் இருந்தே அறிந்து கொள்ளலாம்.

 

இந்தத் தேர்தலில் திருமாவளவன் அடைந்த தோல்விதான் வருத்தத்துக்குரியது. விஜயகாந்த், பாமக, நாம்தமிழர் போன்ற சக்திகள் அரசியலில் இருந்தே அப்புறப்படுத்தப்பட வேண்டியவை. அந்த வேலையை தமிழக மக்கள் மிகக் கச்சிதமாக இந்தத் தேர்தலில் செய்து முடித்திருக்கிறார்கள். இல்லாவிட்டால் கடந்த 90 களின் தொடக்கத்தில் இருந்து தற்போது வரை தமிழகம் அனுபவித்துவரும் அருவருக்கத் தக்க அரசியல் இம்சையை, இன்னும் பல ஆண்டுகள் பல்வேறு வடிவங்களில் சந்திக்க வேண்டிய அவல நிலை நீடிக்கும். இவையெல்லாம் இந்தத் தேர்தல் நமக்குச் சொல்லும் சில முக்கியமான செய்திகள். அதையும் தாண்டி, ஆளும் கட்சிக்கு எதிரான வாக்குகள் சிதறியதன் மூலம், கடந்த 5ஆண்டுகளாக நீடித்த “அதே” ஆட்சி மீண்டும் தொடர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

 

அதற்கு வாக்களித்த மக்கள் மட்டும்தான் பொறுப்பாளிகளா?

 

இந்தக் கேள்விக்கு ஒற்றை வரியிலோ, வாக்கியத்திலோ விடைதேடி விட முடியாது. ஒரு சமூகத்தின் அரசியல் வீழ்ச்சி என்பது, உடனடியாக ஏற்பட்டு விடக் கூடியது அல்ல. ஒரு சமூகம் அரசியல் தன்னுணர்வை இழக்கத் தொடங்கும் தருணத்திலேயே அத்தகைய வீழ்ச்சி தொடங்கி விடுகிறது.

 

அந்த வகையில் தமிழ்ச் சமூகத்தின் அரசியல் வீழ்ச்சி, ஏறத்தாழ எம்.ஜி.ஆரின் அரசியல் பிரவேசத்தில் இருந்தே தொடங்கி விட்டது.

 

ராஜாஜி இருந்த போது அவரது குலக்கல்வித் திட்டமும், பெரியார் மற்றும் அவர் வழிவந்த திராவிட இயக்கத்தின் சமூகநீதிக் கருத்துகளும் எதிரெதிர் முனையில் நிறுத்தப்பட்டன. மக்களை மேம்படுத்துவதற்கான அரசியல் தத்துவம் எது என்ற விவாதம் நடைபெறும் அறிவரங்கமாக அதற்கு முன்புவரை அரசியல் களம் இருந்தது. பின்னர் காமராஜர் – அண்ணா, கலைஞர் கருணாநிதி வரையில் அந்த நிலை தொடர்ந்தது. எம்.ஜி.ஆரின் அரசியல் என்பது, தமிழ்ச் சமூகம், திராவிட இயக்கத்தின் மூலமாக அதுவரை பெற்றிருந்த தத்துவார்த்த போதத்தைத் துடைத்தெறியும் கதம்பக் கூத்தாகவே இருந்தது. அவரது தொடர்ச்சியாக ஜெயலலிதா வந்தார். ஏற்கனவே, பார்ப்பனிய சக்திகளின் புண்ணியத்தில் தமிழகத்தில் மிக வேகமாக அரங்கேறி வந்த அரசியல் அகற்றம், ஜெயலலிதாவின் காலத்தில் அதைவிட வேகமாக நடந்தேறியது. பார்ப்பனியமும், அதன் அடிமையாக இருப்பதில் சுகம் கண்ட அறிவிலிக் கும்பலும், தங்களது அரசியல் அகற்றப் பெரும் பணியை அத்துடன் நிறுத்திவிடவில்லை. எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை விட இன்னும் மோசமானதொரு அரசியல் சீரழிவு சக்தியான விஜயகாந்தைக் கண்டெடுத்தார்கள். 2005ம் ஆண்டு விஜயகாந்த் கட்சி தொடங்கும் போதும் சரி, அதற்கு முன்னரும் சரி, “அண்ணன் வர்றார்… அண்ணன் வர்றார்…” என்று எந்த வெட்கமும் இன்றி, மக்களை மதிமயங்கச் செய்வதைத் தவிர வேறு எப்பணியையும் செய்யத்துணியாத நாளேடுகளும், ஊடகங்களும், வெட்க உணர்வோ, அற உணர்வோ சிறிதுமின்றி பெருங்குரலெடுத்து ஊதின. அண்ணனும் வந்தார். வழக்கம் போல அவரும் திமுகவையும், குறிப்பாக கருணாநிதியையும் வசைபாடி, வசைபாடி தன்னை வளர்த்துக் கொண்டார். அதிமுகவுடன் சேர்ந்து 2011ல் எதிர்க்கட்சி இடத்தில் அமர்ந்தார். முழுமையான அடிமையாக இருக்கும் சாமர்த்தியம் அவருக்குப் போதாமையினாலோ அல்லது, தனது திரைச்செல்வாக்கு கொடுத்த புகழ்வெளிச்சத் திமிரினாலோ, அந்த உறவை முறித்துக் கொண்டார். எந்த ஊடகங்கள் அவரை ஊதிப் பெரிதாக்கினவோ, அதே ஊடகங்கள் பின்னர் அவரது குறைகளை ஊதிப் பெரிதாக்கிக் காட்டி, தற்போதைய நிலைக்கு அவரைத் தள்ளி உள்ளன.

 

தமிழக ஊடகங்களைப் பொறுத்தவரை-

 

அவர்களுக்கு ஓர் பார்ப்பனத் தலைமை வேண்டும்,

 

மேலாதிக்க சாதிகளின் கை அனைத்து அதிகாரத் தளத்திலும் ஓங்கி இருக்க வேண்டும்,

 

மக்கள் மூடத் தனத்தில் இருந்து சிறிதளவும் விழித்துவிடக் கூடாது,

 

மனித உயிரின் அடிப்படைத் தேவை மற்றும் உரிமையாகக் கருதப்படும் குடி தண்ணீரில் இருந்து, கல்வி வரை, விருப்பத்துக்கு விற்று மில்லியன் டாலர் (பல லட்சம் கோடிகள்) கணக்கில் கல்லாக் கட்டும் கயவர்கள் வளம் கொழிக்க வேண்டும்,

 

அதன் வழியாக தங்களுக்கு விளம்பரம் என்ற பெயரில் வருவாய் குவிய வேண்டும்,

 

இவற்றைத் தவிர வேறு எந்த வேலைத் திட்டமும் இல்லை.

 

அவர்களது அந்த வேலைத் திட்டத்தில் இப்போது வெற்றியைப் பெற்றிருக்கிறார்கள்.

 

ஆனால் தமிழ்ச் சமூகம்?

 

தாம் எங்கிருக்கிறோம்… என்ன நடக்கிறது என்ற தன்னுணர்வையே இழந்து சரிந்து, புழுக்கள் நெழியும் சகதியாக சிதைந்து சீரழிந்து கிடக்கிறது.

 

இதற்கு யார் பொறுப்பு?

 

இன்று மாற்றம் தேவை எனப் பேசும் இடதுசாரிகளும், மக்கள் இப்படி மண்ணாய்ப் போனார்களே எனப் புலம்பும் திமுகவினரும், (உண்மையான) திராவிட இயக்கக் கருத்தியல்வாதிகளும், சமூக மாற்றம் குறித்துத் தீவிரமாகப் பேசி வரும் மேலும் பல இயக்கங்களும்தான் பொறுப்பு.

 

உண்மையான அரசியல் தன்னுணர்வை இந்தச் சமூகத்தின் நாடி நரம்புகளில் இருந்து உறிஞ்சி எடுத்துவிடத் துடிக்கும் பார்ப்பனிய சக்திகள் வழக்கமாக முன்வைக்கும், ஊழல் எதிர்ப்பு போன்ற நிர்வாக சீர்திருத்த முழக்கங்களுக்கு அரசியல் அங்கீகாரத்தை அளித்த பெருமை இடதுசாரிகளையே சேரும்.  (பிறப்பால் மட்டுமின்றி, உணர்வாலும் நோக்கத்தாலும் எளிய மக்களுக்கு எதிராகச் சிந்திக்கும் எவராயினும் அவர்கள் மனுவின் புத்திரர்களான பார்ப்பனர்களாகவே பார்க்கப்பட வேண்டியவர்கள் ஆவர். பிறப்பால் பார்ப்பனர்களாகவும், மேல்சாதியைச் சேர்ந்தவர்களாகவும் இருப்பினும், சமூகநீதி சார்ந்து சிந்திப்பின் அவர்கள் பார்ப்பனியத்துக்கு எதிரான, எளிய மக்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டவர்களாகவே மதிக்கப்பட வேண்டியவர்கள் ஆவர். பார்ப்பனியம் என்பது சிந்தனை சார்ந்ததே தவிர சாதி சார்ந்தது அல்ல) 

 

காரணம், அவர்களுக்கு எதிரி பார்ப்பனியமோ, சமூகநீதியை எதிர்ப்பவர்களோ, எளிய மக்களைச் சுரண்டும் சக்திகளோ அல்ல. கருணாநிதிதான். கருணாநிதி மட்டுமேதான்.

 

எப்படி என்பதை “ஈசலென விழுந்தது ஏன்?” என்ற கட்டுரைத் தொடரின் அடுத்த பகுதியில் பார்ப்போம்.

 

– விழுந்த கதை தொடரும்

____________________________________________________________________________________________________________

அரசியல் பேசுவோம் – 13 – எம்.ஜி.ஆர் தோற்றம் குறித்து அண்ணாவுக்கு எழுந்த சந்தேகம்! : செம்பரிதி (பேசப்படாதவற்றைப் பேசும் தொடர்)

திராவிட இயக்க சிந்தனையாளர் – மூத்த பத்திரிகையாளர் சின்னக்குத்தூசி ஆவணப்படம் : மே 22 சின்னக்குத்தூசி நினைவுநாள்

Recent Posts