Thirumavalavan speech
_____________________________________________________________________________________________________________
காலச்சுவடு பதிப்பகத்தில், அருந்ததி ராய் எழுதி, அதை பிரேமா ரேவதி மொழிபெயர்த்த “சாதியை அழித்தொழித்தல்” (அருந்ததி ராயின் நீண்ட முன்னுரை, ஆய்வுக் குறிப்புகளுடன்) புத்தகத்தை திருமாவளவன் வெளியிட்டு பேசினார். அந்த பேச்சின் கட்டுரை வடிவம் இங்கே…
இந்தியாவில் எத்தனையோ ஞானிகள், அறிவு ஜீவிகள் தோன்றியிருகிறார்கள். ஒருவருடைய சிந்தனையிலும் சாதியை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றவில்லை. ஆனால், சாதியை ஒழிக்க வேண்டும் என்ற உணர்வு புரட்சியாளர் அம்பேத்கர் மூளையில் இருந்து மட்டும்தான் உதித்திருக்கிறது.
காந்தி பெரிய ஞானிதான். ஆனால் அவர் அதை சிந்திக்கவில்லை. ஜவஹர்லால் நேரு பெரிய சிந்தனையாளர்தான். ஆனால் அவருக்கும் ஜாதியை ஒழிக்க வேண்டும் என்று சிந்திக்க முடியவில்லை.
சாதி ஒழிப்பு என்கிற அந்த சொல்லாடல், அந்த சிந்தனை, இந்த ஒரு தலைவருக்கு மட்டும் ஏன் வந்தது? சாதியின் கொடுமை, சாதி இந்துக்களுக்குத் தெரியாது. வலியை உணர்ந்தவர்களுக்கு மட்டும்தான் வலியின் கொடுமை தெரியும்.
இந்தியாவில் பெரும்பான்மையாக இருக்கிற, சாதி இந்து தலைவர்கள் யாரும் சாதி ஒழிப்பை பற்றி ஒருநாளும் சிந்தித்துமில்லை. எழுதியதுமில்லை. பேசியதுமில்லை. ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாக, பெரியாரை போல rarest in rare cases.
புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் சாதியை ஒழிக்க வேண்டும் என்று சிந்திக்கிற போதே அதற்கு தீர்வும் தருகிறார். அதிலே ஒன்றுதான் மதமாற்றம். மதமாற்றமே முழுமையான தீர்வல்ல. அதுவே இறுதியான தீர்வல்ல. நிறைவான தீர்வல்ல. மதமாற்றம் என்பது ஒரு தேவை. மதமாற்றம் என்பது பண்பாட்டு தளத்தில் நிகழ கூடிய ஒரு புரட்சி.
நான் மதமாற்றத்திற்கு எதிரானவன் அல்ல. மதமாற்றம் கூடாது என்று சொன்னதே கிடையாது. சாதி மட்டுமல்ல மதமும் மனிதர்களை கூறுபோடுகிறது. அந்த கவலையைத்தான் நான் பகிர்கிறேன்.
ஒரு தலித் காலனி. அங்கு நூறு குடும்பம். அதில் இருபது பேர் இஸ்லாமியார்களாகவும், இருபது பேர் கிறிஸ்துவர்களாகவும், பத்து பேர் புத்திஸ்ட்களாகவும், மாறி விட்டால், புத்திஸ்ட் மைனாரிட்டி, இருபது பேராக இருக்கிற இஸ்லாமிய, கிறிஸ்துவர்கள் மைனாரிட்டி ஆகிறார்கள். அது மட்டுமல்லாமல், ஐம்பது பேராக இருக்கிற தலித் இந்துவும் மைனாரிட்டி ஆகி விடுகிறார்கள்.
இந்தியா முழுக்கவும் இருக்கிற தலித் இந்து காலனி எல்லாமே ஏன் சிறு சிறு கிராமமாக இருக்கிறது? இன்னும் சொல்லப்போனால், வேறு எந்த சமூகத்தை விடவும், பத்து, பதினைந்து குழந்தை பெற்று கொள்வது தலித் தாய்தான். அம்பேத்கரே பதினான்காவது குழந்தை. இப்படி இவ்வளவு குழந்தைகளை பெற்ற தலித் சமூகம் எப்படி மெஜாரிட்டியாக இல்லாமல், சிறுபான்மையாக மாறியது?
இந்துவாக இருக்கிறவரை இந்த சாதி கொடுமைகளில் இருந்து விடுபடவே முடியாது. அதற்க்கு வாய்ப்பே இல்லை.
ஆனால், இந்துவாக இருக்கிற நாம், வேறு மதத்திற்கு மாறும்போது ஆங்காங்கே சிறுபான்மையினராக மாறி விடுகிறோம். இஸ்லாமிய சிறுபான்மையினராக, கிறிஸ்துவ சிறுபான்மையினராக, புத்த சிறுபான்மையினராக, இந்து தலித் சிறுபான்மையினராக.
தலித் இந்து சிறுபான்மையினராக மாறுவது, அவர்களை மேலும் மேலும் ஒடுக்குவதற்கு எளிதாகி விடுகிறது. உலகம் முழுவதும் இப்படிதான். பெரும்பான்மையாக இருப்பவர்கள் சிறுபான்மையினரை ஒடுக்குகிறார்கள். தங்களது ஆதிக்கத்தை தக்கவைத்து கொள்ள துடிக்கிறார்கள்.
சிறுபான்மையாக்கப்படுகிற நிலையில் உள்ள மிச்சமிருக்கிற தலித் இந்துக்களின் நிலைதான் என்னை கவலைக்குள்ளாக்குக்கிறது. அதனால்தான் மதமாற்றம் பற்றி கருத்துக்கள் கூறினேன்.
உடனே, நான் என்ன பொருளில் கூறினேன் என்பதை கூட புரிந்து கொள்ளாமல், என்னிடம் கேட்காமல், “திருமாவளவனிடம் இருக்கிற தீவிர தமிழ் தேசியம்தான், மதமாற்றத்திற்கு எதிராக அவரை இயக்குகிறது ” என்று ஒரு ஸ்டேடஸ். கமன்ட்.
Opinion Makers எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். எங்கோ ஒரு third source, secondary source-ல் கிடைக்கிற தகவலை வைத்து கொண்டு ஒரு கமன்ட் எழுதும்போது அதை எத்தனை ஆபத்தையும், வீழ்ச்சியையும் உருவாக்குகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
யார் அம்பலப்படுத்தப்பட வேண்டியவர், யார் வீழ்த்தப்பட வேண்டியவர்கள் என்ற தெளிவு Opinion Makers, அதாவது கருத்துருவாக்கம் செய்யக் கூடியவர்களுக்கு இருக்க வேண்டும்.
உதாரணத்திற்கு மக்கள் நல கூட்டணி – அதிமுகவின் பி டீம் என்று கூறினார்கள். இது கருத்துருவாக்கத் தளத்தில் இருந்துதான் வெடித்து கிளம்பியது.
அதிமுகவின் எதிர்ப்பு வாக்குகளை சிதறடிக்க கூடிய வேலையை விடுதலைச் சிறுத்தைகள் அங்கம் வகிக்க கூடிய மக்கள் நல கூட்டணி மட்டும்தான் செய்ததா? அதற்கு முன்னதாக பாட்டாளி மக்கள் கட்சி செய்ய வில்லையா?
“திமுகவிற்கும் அதிமுகவிற்கும் மாற்று நாங்கள்தான்; நாங்கள்தான் தமிழ்நாட்டை மீட்க போகிறோம்; தமிழை மீட்க போகிறோம்; நாங்கள்தான் அடுத்த முதல்வர்; நாங்கள்தான் முதல் கையெழுத்தை போட போகிறோம்” என்றெல்லாம் கூறி கோடிக்கணக்கான பணத்தை இறைத்து இரண்டு ஆண்டுகளாக மிகப்பெரிய வேலையை யார் செய்தார்கள்.
யாராவது ஒருவர் ஒரு இடத்தில் “பாட்டாளி மக்கள் கட்சி அதிமுக எதிர்ப்பு வாக்குகளை சிதறிடிக்கிறது. அது பி டீம் என்று கூறினார்களா? பாட்டாளி மக்கள் கட்சியை யாராவது பினாமி டீம் என்று எழுதினார்களா?
சட்டமன்றத் தேர்தலின்போது திருவாரூர், கொளத்தூர், ஆர்கே நகரில் மட்டும் நூறு கோடி ரூபாய் செலவாகி இருக்கிறது. இந்த நூறு கோடியை பற்றி, கருத்துருவாக்கத் தளமான சோஷியல் மீடியாவில் ஏன் பேசப்படவில்லை?
இந்த இரு கட்சிகளுக்கு இணையாக, கடந்த இரு ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி ஆயிரம் கோடி ரூபாய் செலவழித்துள்ளது. அந்த ஆயிரம் கோடி ரூபாய் எங்கிருந்து வந்தது என்று எங்கேயாவது கேள்வி எழுப்பப்பட்டதா??? யார் எழுப்புவது? ஏன் பேசப்படவில்லை?
ஆனால், கருத்துருவாக்கத் தளத்தில் நடந்தது என்ன? மாறுபட்ட அரசியலை முன்வைத்த மக்கள் நல கூட்டணி மீது அத்தனை தாக்குதல் நடத்தப்பட்டது. விஜயகாந்த் – வைகோ என்ற இரண்டு ஐகான்களையும் காமடியாக சித்தரித்து தாக்குதல் நடத்தினார்கள்.
மக்கள் நல கூட்டணி வெற்றி பெற்று கூட்டணி ஆட்சி அமைந்தால், அந்த ஆட்சியில் விடுதலைச் சிறுத்தைகள் அணியும் இடம்பெறும் என்ற முக்கிய Criteria-வும், இந்த தாக்குதலுக்கு முக்கிய காரணம்.
சாதி எல்லாவற்றிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. “நீ எந்த திசை வேண்டுமானாலும் திரும்பு. அங்கு சாதீய பூதம் குறுக்கிடும். அச்சுறுத்தும்” என்று அம்பேத்கர் சொல்லி இருக்கிறார்.
நான் போட்டியிட்ட காட்டுமன்னார்கோவிலில் என்னை எதிர்த்து, அதிமுக சார்பில் ஒரு வேட்பாளரும், காங்கிரஸ் சார்பில் ஒரு வேட்பாளரும் நிறுத்தப்பட்டிருந்தனர். அவர்கள் இருவரும் தலித்துகள்தான். ஆனால், ஊரில் இருக்கிற சாதி இந்துக்கள், இந்த இரண்டு வேட்பாளர்களையும் வரவேற்று, தங்கள் இல்லங்களில் அமர வைத்து குளிர்பானமும் அளித்தார்கள். ஆனால், என்னுடைய வாகனம் அந்த பகுதிக்குள் சென்றாலே, அடிக்கிறார்கள். கல் வீசுகிறார்கள்.
அவர்கள் இருவரையும் வரவேற்கும் சாதி இந்துக்கள், திருமாவளவன் மீது கல் எறிவது ஏன்?
ஒடுக்கப்பட்டவர்கள், காலங்காலமாக நசுக்கப்பட்டவர்கள், ஒரு அரசியல் சக்தியாக உருவாகுவதை இந்த சமூகம் ஏற்கவில்லை. இதையே ஏற்று கொள்ளாதவர்கள் திருமாவளவனின் கட்சியினர் அமைச்சர்களாக அமருவதை எப்படி ஏற்று கொள்வார்கள்??? தலித் முதலமைச்சர் என்ற விவாதத்தை எப்படி அவர்களால் ஏற்று கொள்ள முடியும்? அவன் அதிகாரத்தை கையில் எடுக்கக்கூடாது. அவ்வளவு இறுக்கமாக, அவ்வளவு இறுக்கமான சாதி கட்டமைப்பு கொண்ட சமூகமாக இது இருக்கிறது.
எல்லா திட்டங்களும் அதிகாரத்தை மையமாக வைத்துதான். கணவன் – மனைவி சண்டையில் இருந்து போர் வரை அனைத்து சிக்கல்களும் அதிகாரத்தோடு தொடர்புடையவை.
அதனால்தான் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் பவுத்தத்தை தழுவினாலும் கூட, “ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதுதான் உனக்கு விடுதலையை தரும்” என்று குறிப்பிடுகிறார்.
அனைத்து பூட்டுகளுக்கும் ஒரே சாவி. அரசியல் அதிகாரம்.
சாதி இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். தலித் இந்துக்கள் சிறுபான்மையாக இருக்கிறார்கள். தலித் இந்துக்கள் மதம் மாறும்போது, அவர்களும் சிறுபான்மையினராக ஆகி விடுகிறார்கள்.
ஒவ்வொரு சமூகமும் சிறு சிறு குழுக்களாக மாறுவது கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். விவாதிக்கப்பட வேண்டும்.
புரட்சியாளர் அம்பேத்கர் சாதி ஒழிய மதமாற்றத்தை ஒரு தீர்வாக வைக்கிறார். பிறமண முறையை ஒரு தீர்வாக வைக்கிறார். சமூகநீதியையும் ஒரு தீர்வாக வைக்கிறார்.
கல்வி, வேலை வாய்ப்பினால் மட்டுமே சமூக நீதியை பெற முடியும். இதை எல்லாவற்றையும் தாண்டி, மைய நீரோட்ட பாலிடிக்ஸ் வேண்டும். தலித் அல்லாத ஜனநாயக சக்திகளோட உறவாடுவது. அவர்களை அடையாளம் காணுவது என்ற நிலையில்தான், ஒரு மைய நீரோட்ட அரசியலில் ஈடுபடுவது என்ற அளவில்தான் கூட்டணிக்கு செல்கிறோம். வெறும் பதவிக்காக அல்ல.
காட்டுமன்னார்கோவிலில் நான், 48 ஆயிரத்து 363 வாக்குகள் வாங்கி இருக்கிறேன். இதில் ஆயிரம் வாக்குகள் மட்டும்தான் தலித் அல்லாதோர் வாக்குகளாக இருக்கும், மீதி அனைத்தும் தலித் மக்களின் வாக்குகள் மட்டுமே.
நூற்றுக்கு நூறு சதவிகிதம் முழுக்க தலித் வாக்காளர்களால் ஆதரிக்கப்பட்ட தலித் வேட்பாளரான நான் வெளியில் நிற்கிறேன். ஆனால், நூற்றுக்கு நூறு சதவிகிதம் சாதி இந்துக்களால் ஆதரிக்கப்பட்டவர் உள்ளே இருக்கிறார். வெற்றி பெற்றிருக்கிறார். இந்த எலக்டோரல் சிஸ்டம் எப்படி இருக்கிறது பாருங்கள்?. ஒரு தலித் பிரதிநிதியை யார் தேர்ந்தெடுக்க முடிகிறது பாருங்கள்.
காட்டுமன்னார்கோவிலில் தலித் அல்லாதோர் தெருவில் நான் வாக்கு கேட்டு போகிறேன். 15, 16 வயது சிறுவர்கள் கல் எடுத்து அடிக்கிறார்கள். அந்த சிறுவர்களுக்கு சாதி நஞ்சை ஊட்டியது யார்? ஒன்லி ஃபார் பவர். ஏற்கனவே சமூகத்தில் இருக்கிற வெறுப்பை, திருமாவளவனை வைத்து பயன்படுத்துகிறார்கள்.
“தலித் அல்லாதோர் சமூகத்தை சேர்ந்த பெண்களில் வயிற்றில் தலித்துகளின் கரு வளர வேண்டும்” என்று நான் பேசியதாக, ஒரு தவறான கருத்தை ராமதாஸ் தொடர்ந்து பரப்பி கொண்டிருக்கிறார். என்னிடம் யாரும் இதை பற்றி கேட்கவில்லை.
அதனால்தான் பட்டுகோட்டையில் என்னை இளைஞர்கள் கொல்ல முயன்றார்கள். பதினாறு இடங்களில் என்னை கல்லால் அடித்திருக்கிறார்கள். ஆனால், நான் அதை பெரிதுபடுத்தியதில்லை. ஏனென்றால், அந்த இளைஞர்களுக்கு wrong feeding. அந்த சமூகத்தை பற்றி நான் எங்கும் தவறாக பேசியதில்லை.
அடித்தொண்டையால் தலித் கத்துகிறான் “டாக்டர்.கலைஞர் வாழ்க” என்று. அதை ரசிக்கிறார்கள். அடித்தொண்டையால் தலித் கத்துகிறான் “புரட்சி தலைவி அம்மா வாழ்க” என்று. அதை ரசிக்கிறார்கள். இப்போது அதே அடித்தொண்டையால் “திருமாவளவன் ” என்று அவன் கத்துகிறபோது, அவர்களால் அதை ரசிக்க முடிவதில்லை.
அன்று திமுக கொடி பிடித்து தெருவில் நின்று கோஷமிட்டபோது ரசிக்க முடிந்தது. அதிமுக கொடி பிடித்து அடிவாங்குகிறவனாக இருந்த போது அதை ரசிக்க முடிந்தது.
ஆனால், அதே அவன் இன்று “எனக்கொரு கொடி, எனக்கொரு தலைமை, எனக்கொரு இயக்கம்” என்று அதே ஆவேசத்தோடு முழங்கும்போது “கட்டுப்பாடில்லாத சாதிங்க… இது. இது ஒரு கும்பல்ங்க. திருமாவளவன் பின்னாடி இருக்கிறது கும்பல்” என்கிறார்கள் .
அவர்களின் கட்சிகளை வாழ்க என்று சொல்லியபோது , அவன் ஒரு இயக்கம். அரசியல்படுத்தப்பட்டவன். ஆனால், திருமாவளவனின் தலைமையை ஏற்று கொண்டபின், அவனுக்கு பெயர் கும்பல்.
ஸ்டார் ஹோட்டலில் ரூம் போட்டு பஞ்சாயத்து பேசுகிறவர்கள்தான், அனைத்து கட்சி தலைவர்களும். ஆனால், ஒரு பாதிக்கப்பட்டவன் வந்து பிரச்னையை சொல்லும்போது, இவன் அதற்காக பேசபோகிறபோது உடனே “இவர்கள் கட்டப்பஞ்சாயத்து செய்கிறார்கள். திருமாவளவன் பின்னாலிருப்பது கும்பல். எங்க பாத்தாலும் கட்டப்பஞ்சாயத்து” என்கிறார்கள். இதை இந்த Opinion Makers அப்படியே எழுதுகிறார்கள்.
இவர்கள் எந்த சக்தியை எக்ஸ்போஸ் செய்கிறார்கள்? என்ன நோக்கத்தில் செய்கிறார்கள்.
திவ்யா இளவரசன் கொல்லப்பட்டான். அப்போது இளவரசனுக்கு எனக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது. அவன் இறந்தபின்புதான் அவன் தலித் என்பதே எனக்கு தெரியும். கோகுல்ராஜை மிரட்டி பேச வைத்து , ஐ.எஸ் தீவிரவாதிகளை போல, வாட்ஸ்-அப்பில் வீடியோ வெளியிடுகிறார்கள். அடுத்து அவன் தலையை துண்டித்து கொண்டு போய் தண்டவாளத்தில் போடுகிறார்கள்.
கோகுல்ராஜ் உடல் கிடந்த இடத்தில் நின்று நான் பேசுகிறேன். இவர்களை போல “கையை வெட்டு காலை வெட்டு , நீயும் நாலு பேரை போட்டு தள்ளிட்டு வாடா” என்று பேசவில்லை. எந்த சமூகத்தையும் குறிப்பிட்டு பேசவில்லை. என்ன பேசினேன் என்றால்…
“தமிழ்நாட்டில் சிலர் என்ன அரசியல் பேசுகிறார்கள். அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் பொம்பள சமாச்சாரம்தான். அங்க இடிச்சுட்டான். இங்க இடிச்சுட்டான். காதலிச்சுட்டான்” இதைதான் பேசுறான். இவங்க பெரிய மானஸ்தன் வேற சொல்லிக்கிரானுங்க. உனக்கு கீழ் சாதி புடிக்கல. அவனோட ஓடி போயிட்டா. நீ மான்ஸ்தனா இருந்தா விட்டுட்டு போயிருக்கணும். தலித் சமூகத்தில் காதலித்து திருமணம் செய்பவர்கள் இருக்கிறார்கள். திரும்ப வரசொல்லி பெற்றோர்கள் கேட்பார்கள்தான். ஆனால் அவர்கள் உறுதியாக இருந்தால், ஆற்றில் தலைமுழுகி விட்டு போவார்கள். ஆள் வைத்து கொலை செய்ய மாட்டார்கள். நீ ஏன் அதை செய்யுற. முப்பது நாள் ஒரு பறையனோட, பள்ளனோட படுத்துருக்கா. அப்புறம் அவள ஏன் அழைச்சுட்டு வந்து குடும்பம் நடத்துற? அது என்ன மானம்? இதை கூட நான் கேக்க கூடாதா? இந்த வலியை கூட நான் வெளிப்படுத்த கூடாதா அவனை வெட்டு இவனை வெட்டு என்று தூண்டி விட்டேனா? ஏன் பெத்த புள்ளைய வெட்டுற? ஏன் இன்னொருத்தன் புள்ளையை வெட்டுற? இத கூட நான் பேச கூடாதா?
எலெக்க்ஷன் நேரத்தில், என்னடைய இந்த பேச்சு வாட்ஸ்-அப்பில் அப்படி பரப்பப்பட்டது.
இந்த கொலைகளை யார் கண்டித்தார்கள். தெருவில் இறங்கி போராடினார்களா?? ஆத்திரப்பட்டார்களா?
லேசாக உரசியதற்கே மூன்று ஊரை கொளுத்தியவர்கள். அந்த மூன்று ஊரை கொளுத்திய போது யார் என்ன எதிர்வினை ஆற்றினார்கள்.? இதை பற்றி கருத்துருவாக்க தளத்தில் என்ன எழுதினார்கள்?
கோகுல்ராஜ் என்ன செய்தான்? அந்த பெண் அவனை காதலிக்கவே இல்லை என்கிறாள். பின் எதற்காக இந்த கொலை??? “நாங்க கவுரவமுள்ள சாதி. நாங்கல்லாம் அப்படிதான். நாங்க ஆதிக்கம் செய்பவர்கள் என்று நிறுவுவதற்காக ஒரு கொலை”.
இதை கண்டிக்க துணிச்சலில்லாமல், நீங்கள் அம்பேத்கரை பற்றி என்ன எழுதினாலும் அது குப்பைதான்.
விடுதலைச் சிறுத்தைகள் என்பது ஒரு அரசியல் இயக்கம். ஒரு அரசியல் இயக்கத்தை, சமூக இயக்கம் செய்ய வேண்டிய கடமைகளை எல்லாம் செய்ய வேண்டும் என்று ஏன் எதிர்பார்க்கிறார்கள்.
“ஏன் ஜெய் பீம் சொல்லல ? ஏன் திக்க்ஷா பூமிக்கு வரல? இவங்க தலித் பிரச்னையை விட்டுட்டாங்க” என்றெல்லாம் ஏன் விமர்சிக்கிறீர்கள் ?
சொன்னாலும் சொல்லாட்டாலும் நான் தலித்தான். நான் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், தலித்தாக மட்டுமே என்னால் சிந்திக்க முடியும்.
நம்மை நாமே தனிமைப்படுத்துவது என்பது, மிக மோசமான விஷயம். தலித்துகளின் போராட்டம் என்ன? ஒன்று சேர்வதுதானே?
கோவில் நுழைவு போராட்டம் என்றால் என்ன? நீ நுழையும் கோவிலில் நானும் நுழைய வேண்டும். நீ குளிக்கும் குளத்தில் நானும் குளிக்க வேண்டும். உன்னோடு நான் கலக்க வேண்டும் என்பதுதான். எல்லோரும் Merge ஆக வேண்டும் என்பதுதான். அதுதானே போராட்டம்.
தனிமைப்படுத்துவதுதான் சாதி. அதுதான் சாதியின் பண்பு. சாதி ஒழிப்பு என்பது மைய நீரோட்டத்தில் கலப்பது. அது ஒரு போராட்டம். அதுவே ஒரு போராட்டம்தான்.
ஒரு இடத்தில் இருந்து, ஒரு கிலோமீட்டர் தாண்டி மற்றொரு இடத்திற்கு நான் கொடி ஏற்ற போகிறேன் என்றால், அது எனக்கொரு போராட்டம். விஜயகாந்துக்கு அது போராட்டம் இல்லை. சீமானுக்கு அது போராட்டம் இல்லை.
எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்று தெரியாது. ஒவ்வொரு இடத்திலும் நான் கொடியேற்ற போகும்போது கல்வீச்சு நடக்கிறது. அதிமுக, திமுக கொடிக் கம்பங்கள் எங்காவது உடைக்கப்பட்டிருக்கிறதா?
ஆனால், இந்த இரு கட்சிகளின் கொடிக்கம்பத்தின் அருகில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கொடி நாட்டுகிற போதே அதற்கு எதிர்ப்பு வருகிறது. இது எத்தனை பேருக்கு தெரியும். இந்த போராட்டம் எத்தனை பேருக்கு தெரியும்.
“உன் தெருவிலே போய் கொடியேற்று” என்று போலீசே சொல்கிறான். கொடியேற்றுவதே எங்களுக்கு போராட்டம்தான்.
இதை ஜனநாயக சக்திகள் உள்வாங்குகிற போதுதான், பொதுத்தளத்தில் உள்ளவர்கள் உள்வாங்குகிற போதுதான் மாற்றம் உருவாகும்.
அயோத்திதாசர் என்றாலே ஸ்டாலின் ராஜங்கம்தான் எழுத வேண்டும்; திருமாவளவன்தான் பேச வேண்டும் என்கிற அணுகுமுறை இருந்தால் எந்த மாற்றத்தையும் உருவாக்க முடியாது.
நான் அதற்காகத்தான் போராடுகிறேன்.
“எழுச்சித்தமிழருக்கு” முன்னால், “சேரிப்புயல்” என்ற அடைமொழி எனக்கிருந்தது. உசிலம்பட்டியில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசும்போது ‘சேரிப்புயல்” பேசுவார் என்றவுடன் வரிசையாக கல் எறியத் தொடங்கி விட்டார்கள். பின், அண்ணன் அறிவுமதி கூறி, ஷார்ஜாவில் நடந்த ஒரு கூட்டத்தில் இஸ்லாமிய தோழர்களும், தாய்மண் தோழர்களும் இணைந்து “எழுச்சித்தமிழர்” என்ற அடைமொழியை அளித்தனர்.
அதையும் கூட, இவர் ஏன் தமிழர் என்று அடையாளம் காட்டுகிறார். ஏன் தலித் என்று கூறவில்லை? என்று கருத்துருவாக்க தளத்தில் எழுதுகிறார்கள்.
நான் தலித்தான். அதை நான் சொல்லித்தான் தெரியவேண்டும் என்பதில்லை. கருத்துருவாக்கத் தளத்தில் இருப்பவர்களின் இது போன்ற செயல்கள், புதிய முயற்சிகளை கருக வைக்கிறது.
ஒன்றை நுகர்வதற்கு கூட தலித்துகள் ஆசைப்படக் கூடாது என்ற நிலைதான் தமிழகத்திலும், இந்தியாவிலும் இருக்கிறது. “வேணும்னா நீ பெரிய கட்சிகளோட இணைந்து மூன்று தொகுதிகள், நான்கு தொகுதிகள் வாங்கிக்கோ”அவ்வளவுதான். தலித்துகள் தனியொரு கட்சியாக வருவதை யாரும் விரும்பவில்லை.
ஆணவ கொலைகளை தடுப்போம் என்று கூறியதனாலயே, கொங்கு வட்டத்தில், மக்கள் நல கூட்டணி தோற்கடிக்கப்பட வேண்டும் என்று முடிவெடுத்து வாக்களித்திருப்பதாக அந்த பகுதியை சேர்ந்த, கொங்கு சமூகத்தை சேர்ந்த தம்பி ஒருவர் கூறினார். அதனால்தான், அங்கு பெரும்பகுதியில் அதிமுக வெற்றி பெற்றிருக்கிறது போல.
சாதி ஒழிப்பு என்பது, தலித் சமூகத்தில் அம்பேத்கர்கள் உருவாவதால் அல்ல. தலித் அல்லாத சமூகத்தில் அம்பேத்கர்கள் உருவாவதால் மட்டுமே சாத்தியம்.
____________________________________________________________________________________________________________