தமிழறிவோம் – பதிற்றுப்பத்து 5 – புலவர் ஆறு.மெ. மெய்யாண்டவர்

Thamizharivom – Patitru pathu 5

____________________________________________________________________________________________

பழம்பெருமையும்சிறப்பும் பெற்ற திருவையாறு அரசர் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றவரும்,  தமிழ் அறிஞருமான புலவர் மெய்யாண்டவர்,  முதுபெரும் தமிழறிஞர் கோபாலய்யரிடமும்மேலும் பல தமிழ்ச்சான்றோர்களிடமும் தமிழ் பயின்றவர் என்பது குறிப்பிடத் தக்கது. மேலும் மதுரகவி  எனப் போற்றப்பட்ட பெரும்புலவரும், சைவத்துறவியுமான  தவத்திருmeyyandav 5மதுரகவி ஆண்டவர் சுவாமிகளின் மகள் வயிற்றுப் பேரனுமாவார். மதுரை தமிழ்ச்சங்கத்தில் கற்றுத் தேர்ந்த வெள்ளாடைத் துறவி  தவத்திரு நாராயணசுவாமியால் வளர்த்தெடுக்கப்பட்ட தமிழ் வாரிசுமாவார். சிவகங்கை மாவட்டம் வேப்பங்குளத்தில், மெய்யப்பன், சௌந்தரநாயகி  (மதுரகவி ஆண்டவர் சுவாமி மகள்)  தம்பதியருக்குப் பிறந்த புலவர் மெய்யாண்டவர் தமிழாசிரியராக, தலைமையாசிரியராக, பின்னர் கல்வித்துறை அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார்.  தமிழில் தலைசிறந்த சொற்பொழிவாளரான  இவர் செந்தமிழ் இலக்கியங்களைப் படிப்பதும், பரப்புவதுமாக தமது தமிழ்வாழ்வைத் தொடர்ந்து வருகிறார்.

___________________________________________________________________________________________________________

பதிற்றுப்பத்தில், இரண்டாம் பத்துப் பத்துத் தலைப்புகளில் உள்ள பாடல்களில், புண்ணுமிழ் குருதி எனும் தலைப்பில் உள்ள பாடல் பற்றி அறிவோம். முதல் பத்து கிடைக்கவில்லை. கிடைக்காத அப்பத்துப் பாடல்களை எண்ணிக்கையில் சேர்த்து இரண்டாம் பத்து முதல் பாடலைப் பதினோராம் பாடலாக, இந்நூலைத் தொகுப்பித்தவர் குறிப்பிட்டுள்ளார். புண்ணுமிழ் குருதி எனும் தலைப்பில் இந்தப் பாடல் அமைந்துள்ளது. இத்தலைப்பு பாடலின் இடையே அமைந்துள்ள ஒரு பாடல் வரி. ஒவ்வொரு பாடலையும் அப்பாடலின் இடையே வரும் சிறப்பான வரி கொண்டு அப்பாடல்களின் தலைப்புகளாக அமைத்துள்ளனர். அந்த வகையில் இப்பாடலில் வரும் “புண்ணுமிழ் குருதி” எனும் வரியே தலைப்பாக வைக்கப்பட்டுள்ளது.

திணை: பாடாண் திணை

துறை : செந்துறைப்பாடாண் பாட்டு

வண்ணம் : ஒழுகு வண்ணம்

தூக்கு : செந்தூக்கு தூக்கு தூக்கு எனப் பொருள்படும் சொல்

இதனால் (இப்பாடலால்) சேர மன்னனின் வெற்றிச் சிறப்பு உரைக்கப் படுகிறது. இனி அப்பாடலைக் காண்போம்.

 

11. புண்ணுமிழ் குருதி

 

வரைமருள் புணரி வான்பிசிர் உடைய

வளிபாய்ந் தட்ட துளங்கிருங் கமஞ்சூல்

நளியிரும் பரப்பின் மாக்கடல் முன்னி

அணங்குடை அவுணர் ஏமம் புணர்க்கும்

சூருடை முழுமுதல் தடிந்த பேரிசைக்

கடுஞ்சின விறல்வேல் களிறூர்ந் தாங்குச்

செவ்வாய் எஃகம் விலங்குநர் அறுப்ப

அருநிறந் திறந்த புண்ணுமிழ் குருதியின்

மணிநிற இருங்கழி நீர்நிறம் பெயர்ந்து

மனாலக் கலவை போல அரண் கொன்று

முரண்மிகு சிறப்பின் உயர்ந்த ஊக்கலை

பலர்மொசிந்து ஓம்பிய அலர்பூங் கடம்பின்

கடியுடை முழுமுதல் துமிய வேஎய்

வென்றெறி முழங்குபனை செய்த வெல்போர்

நாரரி நறவின் ஆர மார்பில்

போரடு தானைச் சேர லாத

மார்புமலி பைந்தார் ஓடையொடு விளங்கும்

வலனுயர் மருப்பில் பழிதீர் யானைப்

பொலணனி எருத்தமேல் கொண்டு பொலிந்த நின் seralathan

பலர்புகழ் செல்வம் இனிது கண்டிருக்குமே

கவிர்த்ததை சிலம்பில் துஞ்சுங் கவரி

பரந்திலங் கருவியொடு நரந்தங் கனவும்

ஆரியர் துவன்றிய பேரிசை இமயம்  

தென்னங் குமரியொடு ஆயிடை

மன்மீக் கூறுநர் மறந்தபக் கடந்தே

 

தெளிவுரை:

 

இது இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைக் குமட்டூர்க் கண்ணனார்பாடிய இரண்டாம் பத்தில் முதல் பாடல், எண்ணிக்கையில் 11ம் பாடல்.

 

இதில் சேரலாதன் இமயமுதல் குமரிவரை தன்னை எதிர்க்கும் பகைவரின்றி ஆட்சி செலுத்தியவன் என்பதும் கடலின் நடுவே உள்ள ஒரு தீவில் வாழ்ந்த பகைவராகிய கதம்பரை (கடம்பர்கள்) வென்று அவர்களின் காவல் மரமாகிய கடம்ப மரத்தை வெட்டி வீழ்த்தினான் எனும் வரலாற்றுச் செய்தியும் அவனது செல்வச் சிறப்பும் குறிக்கப் பெற்றுள்ளன.

 

செந்துறை:

 

உலகத்தில் இயற்கை வகையால் மக்களைப் பாடுவது.

 

பாடாண் பாட்டு:

 

பாடும் செயலையும் அதன் விளைவையும் பாடப்படும் ஆண்மகனைக் கருதாது அவனது ஒழுகலாறான (வாழும்வழி, இடம்) திணையை உணர்த்துதல்

 

வண்ணம்:

 

வண்ணம் (ஓசை) இங்கு ஒழுகுவண்ணம் என்பது அற்று அற்றுச் செல்லாமல் (விட்டு, விட்டு) ஒரே சீராய்த் தொடர்ந்து வரும் ஓசை.

 

“ஒழுகிய வண்ணம் ஓசையின் ஒழுகும்” என்பது தொல்காப்பியம். வண்ணம் என்பது சந்த வேறுபாட்டைக் குறிப்பது, யாப்பு (செய்யுள்) பொருளினை நோக்குவது இதனை யாப்பு எனக் கொள்ளல் தவறு. இப்பாடல் ஓசையையே நோக்குவது. இது பேராசிரியர் உரை. சந்த வேறுபாட்டைப் பாடலில் வடித்துக்காட்டியவர் அருணகிரிநாதர். இவர் பாடிய திருப்புகழ் இதற்குச் சான்று. சந்த விருத்தம் எனச் சந்த வேறுபாட்டைத் தம் பக்திப் பனுவல்களில் பாடிக் காட்டியுள்ளார்.

 

தூக்கு :

 

செந்தூக்கு, அதாவது ஆசிரியப்பா வகையுள் ஒன்று என விளக்குவது

 

புண்ணுமிழ் குருதி:

 

புண்ணிலிருந்து வழியும் இரத்தம் என்பது பொருள். இப்பாட்டில் சேரலாதன் போரில் பகைவர்களின் மார்புகளைப் பிளந்தபோது அப்புண்களில் இருந்து சிவந்த குருதி வெள்ளமாகப் பெருகி ஓடியது. அதனால் நீரின் நிறம் இரத்தக் கலவையால் குங்குமச் சேறுபோல் கருஞ்சிவப்பாய் விளங்கியது. எனவே, “புண்ணுமிழ் குருதி” என இப்பாடல் அழைக்கப் பெற்றது.

 

பாடல் தெளிவுரை:

 

(வரிகள் 1-6)

 

மலைபோல் எழும் கடல் அலைகள் வெண்மையான சிறுதுளிகளாய்ப் பிளவு படுகின்றன. இவ்வாறு காற்றே கடல் அலைத்துளிகளைப் பிளவு படுத்துகிறது. இத்தகைய நிறைந்த நீரையும், மிகுந்த பரப்பையும் உடைய கடல் நடுவில் உள்ள பகைவரை வென்று அழிக்கக் கூடிய வீரர்களை அனுப்பி வெற்றி பெற்றவன் சேரலாதன். இச்சொல் மற்றவரை வருத்தும் இயல்புடையது காவல் செய்யும் மாமர வடிவில் இருந்த சூரபன்மனை அம்மாமரத்தை வேருடன் வெட்டி வீழ்த்திக் குறைத்த மிகுந்த புகழும், கொடிய சினமும் வெற்றிப் பெருமிதமும் உடைய முருகப்பெருமான் “பிணி முகம்” எனும் யானை மீது உலா வந்தது போல் இருப்பது.

 

(வரிகள் 7-16)

 

இவ்வாறு கூர்வாளால் எதிர்த்த பகைவர் மார்புகள் பிளக்குமாறு போரிட்டுப் பகைவர் அரண்களை அழித்தாய். அதனால் சிறப்புற்று விளங்கினாய். பகைவரால் காக்கப்பெற்ற கடம்பமரங்களை வெட்டி வீழ்த்துமாறு வீரர்களை ஏவினாய். அம்மரத்தால் முழங்கும் வெற்றி முரசம் செய்து கொண்டாய். நாரால் வடிகட்டப்பட்ட கள்ளையும், மாலை அணிந்த மார்பையும், அஞ்சாமல் நின்று அறப்போர் புரியும் படையையும் உடைய சேரலாதனே!

 

(வரிகள் 17 -25)

 

முருக்கமரங்கள் செறிந்த மலையில் இரவில் உறங்கும் கவரிமான்கள், பகலில் தாம் மேய்ந்த நரந்தம் புல்லையும் அவை வளர்ந்துள்ள பரந்து விளங்கும் அருவிகளையும் கனவிலே கண்டு மகிழ்கின்றன. இத்தகைய இயல்பு கொண்ட ஆரியர் நெருங்கி வாழும் பெரும் புகழை உடைய இமயமலை, தெற்கில் உள்ள குமரி ஆகிய இவ்விரண்டு எல்லைக்கு இடைப்பட்ட நாட்டில் மன்னர்கள் தமக்குள் செருக்கு அடைந்து தம்மைத் தாமே புகழ்ந்து கூறிக் கொள்பவரின் வீரம் கெடும்படி வஞ்சியாமல் போரிட்டு வென்றாய். பொன்னணி அணிந்த யானை மீது அமர்ந்து விளங்கும் பலரும் புகழ்கின்ற உன்னுடைய (சேரலாதன்) செல்வச் சிறப்பினையாம் காண்கின்றோம். நீ வாழ்க! – என்று குமட்டூர்க் கண்ணனார் சேரலாதனை வாழ்த்துகின்றார்.

 

அரும்பொருள் விளக்கம்:

 

புணரி – கடலின் அலை

பிசிர் – சிறுதுளி

வளி – காற்று

அட்ட – வருத்திய

இடும் கமம் சூல் – நிறைந்த நீர் கருப்பத்தைப் போல விளங்குவதால் சூல் என்றார்

அணங்குடை வவுணர் – பிறர்க்குத் துன்பத்தைச் செய்யும் அவுணர் (அசுரர்)

சூர்உடை முழுமுதல் தடிந்த – சூரபன்மாவின் மாமரத்தை வெட்டிக் குறைத்த என்பதை விட, ‘சூரபன்மாவே மாவாகி நின்றான். ஆதலால் அதை வெட்டிய’ என்ற பொருளும் இங்கு கொள்ளத் தக்கது ஆகும்.

வேள் : செவ்வேள் – முருகன்

செவ்வாய் எஃகம் – கூரிய வாயை உடைய வாள் என்பது பொருள். எஃகம் – படைக்கருவி எனப் பொருள் படும். இங்கு வாளை உணர்த்தும்.

இருங்கழி – பெரிய நீர்நிலை

மணிநிற நீர் – நீலமணி போன்ற நீர்

மனாலக் கலவை – குங்குமக் குழம்பு

கவிர் – முள் முருக்கமரம் (முள் முருங்கை எனத் தற்போது விளங்குகிறது)

நரந்தம் – ஒருவகைப்புல்

ஓடை – யானையின் அணி

_____________________________________________________________________________________________________

முகநூலென்னும் ஒன்பதாம் திணை: அ.ராமசாமி

உதிராப் பூக்கள் – 2 : சுந்தரபுத்தன்

Recent Posts