Manipur & Irom Sharmila – A detailed story
__________________________________________________________________________________________________________
முன் குறிப்பு: இது சற்றே நீண்ட கட்டுரைதான். ஆனால், பல தசாப்தங்களாக கனன்று கொண்டிருக்கும் பிரச்னையை புரிந்து கொள்ளவும், அங்கிருந்து எழுந்த ஒரு ஆளுமையை புரிந்துகொள்ளவும், இவ்வளவு விவரிப்புகள் தேவைப்படுகின்றன. ஒரு நீண்ட போராட்டம், வேறு வடிவில் பரிணமித்து.இருக்கிறது.
______________________________________________________________________________________________________
ஆம். பதினாறு ஆண்டு கால உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொள்ளப்போவதாக அறிவித்து இருக்கிறார் இரோம் சர்மிளா. “எனது போராட்டத்துக்கு அரசு தரப்பில் இருந்து இதுவரை எந்தவொரு நேர்மையான பதிலும் கிடைக்கவில்லை. எனவே 16 ஆண்டுகால உண்ணாவிரதத்தை வரும் ஆகஸ்ட் 9-ம் தேதியன்று முடிவுக்கு கொண்டு வந்துவிட்டு, தேர்தல் மூலம் தொடர்ந்து போராடப்போகிறேன்’’ என்று அறிவித்து இருக்கிறார் இந்த இரும்பு பெண்மணி.
நம் சமகாலத்தில் ஒரு பெண் மேற்கொண்டுள்ள ஒரு நெடிய போராட்டம் இது. உலகெங்கும் வரலாற்றின் பக்கங்களை தேடிப் பார்த்தாலும், எங்கும் ஒரு பெண் இத்தகையதொரு நீண்ட போராட்டத்தை மேற்கொண்டதாக தெரியவில்லை. சரி… யார் இந்த இரோம் சர்மிளா… அவர் ஏன் 16 ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருக்கிறார்…? இதற்கு ஒரு தெளிவான விடை வேண்டுமானால், நாம் மணிப்பூரை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டும். பிரிட்டன் ஆளுகைக்கு கீழ் மணிப்பூர்:
‘இந்தியாவினுடைய தங்கம்’. ஆம் இப்படிதான் இந்த ஊரை இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு வர்ணித்தார். எப்போதும் பெய்யும் மழை, அதனால் நிறைந்து காணப்படும் தடாகங்கள், அடர்ந்த காடு, எங்கும் காணப்படும் மலை. இந்தப் பகுதியை வேறு எப்படி அழைப்பது?. அவர் மிகவும் சரியாகத்தான் அழைத்து இருக்கிறார். ஆனால், அந்த தங்கத்தை தனதாக்கிக் கொள்ள அணுகிய முறையில்தான் மணிப்பூரின் ரத்த வரலாறு துவங்குகிறது.
பல நூற்றாண்டாக மணிப்பூர் தொடர்ந்து மன்னராட்சியின் கீழ்தான் இருந்து வந்தது. மன்னராட்சியின் கீழ் இருந்தபோது சில முறை பர்மா மீது தாக்குதல் கொடுத்து பல வியத்தகு வெற்றிகளைப் பெற்று இருக்கிறது. ஆனால், வரலாறு திரும்பும்தானே. இந்த முறை, பர்மா மணிப்பூர் மீது தாக்குதல் தொடுத்து வெற்றியடைகிறது. ஏறத்தாழ 7 ஆண்டு காலம், மணிப்பூர் பர்மாவின் ஆளுகைக்கு கீழ் செல்கிறது. அப்போது மணிப்பூரின் மன்னராக இருந்த கம்பீர் சிங், அசாமில் அடைக்கலமாகிறார். அங்கு பிரிட்டனின் துணையுடன் படையை திரட்டி, பர்மாவிடமிருந்து, தம் தேசத்தை மீட்கிறார் கம்பீர். இப்போது புது பிரச்னை முளைக்கிறது. பிரிட்டானிய அரசு, மணிப்பூரின் உள்விவகாரங்களில் மூக்கை நுழைக்கிறது. அப்போது இந்தியாவின் பெரும்பான்மையான பகுதிகள் பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில் இருந்த நேரம். எப்போது சுதந்திரத்தையும், தம் கலாச்சாரம் மீது பெரும் மதிப்பும் வைத்திருக்கும் மணிப்பூரிகள் பிரிட்டானியர்களை வெறுக்கிறார்கள். அது ஒரு பெரும் போரில் வந்து முடிகிறது. துப்பாக்கிகளையும், பீரங்கிகளையும் வைத்து இருக்கும் பிரிட்டானிய ராணுவத்தை, மணிப்பூர் வீர, வீராங்கனைகள் வாள்களை கொண்டு எதிர்கொள்கிறார்கள். ‘கோஞ்சம்’ என்னும் பகுதியில் ஏப்ரல் 23, 1891 ம் ஆண்டு நடந்த இறுதிக்கட்டப் போரில் மணிப்பூர் தோல்வி அடைகிறது. பல வீரர்கள் தங்கள் இன்னுயிரை ஈகம் செய்திருந்த அந்தப் போரை, இப்போதும் மணிப்பூர்வாசிகள் ‘கோஞ்சம் நாள்’ என்று நினைவு கூறுகிறார்கள்.
இதற்கு பின்னால், கொஞ்சம் கொஞ்சமாக மணிப்பூர் பிரிட்டனின் ஆளுகைக்கு கீழ் செல்கிறது. பெண்கள் முன்னெடுத்த போராட்டங்கள்: வடகிழக்கின் பெரும்பான்மையான பகுதிகள் தாய்வழிச் சமூகமாகத்தான் இருந்து இருக்கின்றன. அதன் எச்சம் மணிப்பூரிலும் உண்டு. அங்கு பெரும்பான்மையான போராட்டங்களை முன்னெடுத்தது பெண்கள் தான். 1834 ம் ஆண்டு, மணிப்பூரை ஆட்சி செய்து கொண்டிருந்த சந்திரகிருதன், யானைகளை எல்லாம் கட்டுப்படுத்த, அனைத்து ஆண்களும் காட்டிற்கு சென்று யானைகளைப் பிடிக்க வேண்டும் என்ற கட்டளையை இடுகிறான். இதற்கு எதிராக பெண்களெல்லாம் கிளர்ந்து எழுகிறார்கள். “ஆண்கள் எல்லாம் யானையைப் பிடிக்க காட்டிற்குள் சென்றுவிட்டால், குடும்ப வாழ்க்கையும், விவசாய பணிகளும் சிக்கலுக்கு உள்ளாகும். அதனால் இந்த முடிவை அரசு ரத்து செய்ய வேண்டும்” என்கிறார்கள். அரசர் பின்வாங்குகிறார், இந்த திட்டத்தை ரத்து செய்கிறார்.
அரசரின் கட்டுப்பாட்டில் இருந்தபோது மட்டுமல்ல, பிரிட்டிஷ் அரசிற்கு எதிராகவும், பல போராட்டங்களை முன்னெடுத்தவர்கள் பெண்கள்தான். 1904 ம் ஆண்டு, மணிப்பூரில் தங்கி இருந்த பிரிட்டிஷ் ஏஜென்ட் டன்லப் மற்றும் நுத்தால் இருவரையும், அடையாளம் தெரியாத சில போராட்டக்காரர்கள் எரித்துக் கொன்று விடுகிறார்கள்.
அதுமட்டுமல்லாமல், மணிப்பூர் தலைநகரம் இம்பாலில், பெண் வியாபாரிகளின் வீடுகளும் எரிக்கப்பட்டன. இது குறித்து பிரிட்டிஷ் அரசாங்கம் ஒரு நீண்ட விசாரணை மேற்கொள்கிறது. ஆனால், எந்த பயனும் இல்லை. குற்றவாளிகள் யார் என்று கண்டு பிடிக்க முடியாததால், அனைத்து ஆண்களுக்கும் தண்டனை கொடுக்க பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசாங்கம் முடிவு செய்கிறது. அவர்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனை, ‘இம்பாலிலுள்ள ஆண்கள் அனைவரும் காபோவாலியிலுள்ள காட்டுக்குள் சென்று, தேக்கு மரங்களை வெட்டிக் கொண்டு வந்து, பிரிட்டிஷ் அதிகாரிகள் தங்குவதற்கு உரிய மரவீடுகளை கட்டித் தர வேண்டும்’ என்பதுதான்.
முதலில் அனைவரும் போராட்டம் நடத்துகிறார்கள். ஆனால், பிரிட்டிஷ் அரசு அடிபணிவதாய் இல்லை. ஆண்கள் தண்டனையை ஏற்று காடுகளுக்கு சென்ற போது, பெண்கள் போராட்டத்தை முன்னெடுக்கிறார்கள். போராட்டத்துக்கு அனைத்து திசையிலிருந்தும் ஆதரவு பெருகுகிறது. பிரிட்டிஷ் அரசு, ‘சுட்டுக் கொன்று விடுவோம்…’ என்று மிரட்டுகிறது. ஆனால், பெண்கள் அடிபணிவதாய் இல்லை. இறுதியில் பெண்களின் போராட்டம் வெற்றி அடைகிறது.
இதை வரலாறு, ‘First Nuplian’ எனப் பதிவு செய்கிறது. அதுபோல், இன்னொரு போராட்டம் 1939 – ம் ஆண்டில் நடக்கிறது. மணிப்பூரில் செயற்கையான பஞ்சத்தை உண்டாக்கி, அரிசி ஏற்றுமதி செய்யபடுகிறது. ஊரெங்கும் பஞ்சம், பட்டினி…! பெண்கள், பிரிட்டன் அரசின் ஏஜென்டை சந்தித்து, ‘அரிசி ஏற்றுமதியை கைவிட வேண்டும்’ என்கிறார்கள். ஆனால், அவர்கள் செவிமடுப்பதாய் தெரியவில்லை. நியாயமான அவர்களின் போராட்டத்தை, ராணுவத்தைக் கொண்டு எதிர்கொள்கிறது அரசு. ஆனால், பெண்கள் அஞ்சுவதாய் இல்லை. ராணுவம், பெண்கள் மீது தாக்குதல் தொடுக்க துவங்குகிறது. பெண்கள் மரக்கட்டைகள் மற்றும் கற்களை கொண்டு ராணுவத்தை எதிர்கொள்கிறார்கள். இதற்குள் பெண்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் வேகமாக பரவுகிறது. அனைத்து திசைகளிலிருந்தும் பெண்களுக்கு ஆதரவு பெருகுகிறது. இதிலும் பெண்களே வெற்றி அடைகிறார்கள்.
மணிப்பூரை பிரிட்டன் நேரடியாக ஆட்சி செய்தாலும், ஒரு மன்னரை பொம்மையாக முன்னிறுத்தியே ஆட்சி செய்தது. 1947 ம் ஆண்டு, மணிப்பூரை விட்டு பிரிட்டன் கிளம்பிச் சென்ற போது, மணிப்பூரின் மன்னராக இருந்தவர் புதசந்தரன். மணிப்பூர் சுதந்திரமடைந்த பின்னர், மணிப்பூரின் நிர்வாகத்தை கவனித்துக் கொள்ள ஒரு அமைச்சரவையை மன்னர் அமைக்கிறார். முதல் அமைச்சரையும், பிற மந்திரிகளையும் அரசரே தேர்வு செய்கிறார். எல்லாம் சரியாக சென்று கொண்டிருந்தபோது, மணிப்பூரை இந்திய ஒன்றியத்துடன் இணைக்கும் ஒப்பந்தத்தில் மன்னர் கையெழுத்து இடுகிறார். எப்போதும் சுதந்திரத்தையும், சுயசார்பையும் விரும்பும் மணிப்பூர்வாசிகளை இந்த சம்பவம் கோபமடைய செய்கிறது. மக்கள் அனைவரும் மன்னர் மீது கோபம் கொள்ள துவங்குகிறார்கள். அப்போதுதான், அந்த விஷயம் பரவுகிறது. ஆம். ‘மன்னருக்கு இந்த இணைப்பில் விருப்பம் இல்லை.
இந்திய ஒன்றியம்தான் மன்னரை மிரட்டி, இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட வைத்தது’ என்ற தகவல் மெல்ல பரவத் துவங்குகிறது. இது இன்று வரை உண்மையா என்று தெரியாது. ஆனால், மணிப்பூர் மக்கள் எப்போதும் இந்திய அரசை வெறுப்புடன் பார்க்க இந்த தகவல்தான் காரணம். இந்தியாவிற்கு எதிராக தொடர்ந்த பெண்களின் போராட்டங்கள்.
‘இந்தியா, தங்களது தனித்துவமான பண்பாட்டை கபளீகரம் செய்யப் பார்க்கிறது’ என்று அஞ்சிய மணிப்பூரிகள், இந்தியாவை எப்போதும் சந்தேக கண்கொண்டுதான் பார்த்தார்கள். இது அவ்வப்போது போராட்டங்களாக, ஆர்ப்பாட்டங்களாக உருமாறியது. இந்த அனைத்து போராட்டங்களையும் முன் நின்று நடத்தியது பெண்கள்தான். இதனிடையே ஆயுதப் போராட்டக் குழுக்களும் முளைத்தன. இதனால் 1956 ம் ஆண்டு மணிப்பூர், மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ஆனால் மக்கள், மணிப்பூருக்கு முழு அளவிலான சுதந்திர சமஸ்தான பதவி வழங்க வேண்டும் என்று விரும்பினார்கள். 1972 ல், மணிப்பூருக்கென பிரத்யேக கூடுதல் அதிகாரங்களை வழங்கி, தனது ஆளுகைக்கு உட்பட்ட முழு உரிமை உள்ள நாடாய் அறிவிக்கிறது இந்திய அரசு. ஆனாலும், மறைமுகமாக இந்திய அரசின் கட்டுபாட்டிற்குள்தான் மணிப்பூர் இருந்தது. 1974 ம் காலக்கட்டம். மணிப்பூரில் சாராயம் ஆறாய் ஓடத் துவங்குகிறது. ஆண்கள் தங்கள் குடும்பங்களை மறந்து, வீட்டை மறந்து பல மணி நேரம் மதுக் கடைகளே கதி என்று கிடக்கிறார்கள். ஒரு பெண், தன் கணவன் வெகு நேரமாக வீட்டிற்கு வராததால், அவனைத் தேடி ஒரு சாராயக் கடைக்கு செல்கிறார். தன் கணவனை சாராயக் கடையிலிருந்து இழுத்து வர முற்படும்போது, அந்த சாராயக் கடைக்காரர் அந்த பெண்ணை மோசமாக தாக்கி இருக்கிறார். இந்த சம்பவம் குறித்த தகவல் பரவி, அதுவே மதுபான கடைகளுக்கு எதிரான பெரிய போராட்டமாக உருவெடுக்கிறது. பெண்கள் இணைந்து, ‘நிசாபந்த்’ என்னும் புது அமைப்பை துவங்கி, மதுவுக்கு எதிராக பிரசாரம் மேற்கொள்கிறார்கள். இதுவே பின்பு, ‘மெய்ர பீபி’ என்னும் பொது நல அமைப்பாக உருவெடுத்து, அனைத்து சமூக பிரச்னைகளுக்கு எதிராகவும் போராடத் துவங்குகிறது. அதே நேரம், ஆயுத குழுக்களும் இந்திய அரசிற்கு எதிராக சண்டையிட்டு வந்தன.
இதன் காரணமாக அவ்வப்போது அங்கு குண்டுவெடிப்பும் நிகழ்ந்தது. இதனால், அங்கு இந்திய அரசாங்கம் ராணுவத்தின் எண்ணிக்கையை அதிகப்படுத்தியது. இந்தச் சூழலில் ஒரு ராணுவ வீரர், கடைத்தெருவில் ஒரு பெண்ணை அடித்துக் கொன்ற சம்பவம், மக்களை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. மக்கள் கிளர்ந்தெழுந்தார்கள், ராணுவத்துக்கு எதிராகவும், மணிப்பூர் அரசுக்கு எதிராகவும் போராடத் துவங்கினார்கள். மணிப்பூர் அரசால் இதை கட்டுப்படுத்த முடியவில்லை. மத்திய அரசின் உதவியை நாடுகிறது. மணிப்பூரின் ரத்த வரலாறு இந்த புள்ளியில்தான் துவங்குகிறது. 1980 ம் ஆண்டு, மத்திய அரசு அதிக அளவிலான ராணுவத்தினரை மணிப்பூருக்கு அனுப்பி, அவர்களுக்கு சிறப்பு அதிகாரம் அளிக்கும் “Armed Forces (Special Power) Acts” சட்டத்தை நடைமுறைப்படுத்துகிறது. இந்த சட்டம் ராணுவத்திற்கு சகலவிதமான அதிகாரங்களையும் அளிக்கிறது. மணிப்பூர்வாசிகள் இந்த சட்டத்தை, “கொலை செய்வதற்கு அனுமதி வழங்கும் சட்டம்” என்று வர்ணிக்கிறார்கள். இதற்கு பின்னர், மணிப்பூரில் மக்களின் போராட்டம் தீவிரமடைகிறது. ஒரு பக்கம் ராணுவம் வன்முறைகளை நிகழ்த்தி கொண்டிருக்க, இன்னொரு பக்கம் மக்கள் தொடர்ந்து இதற்கு எதிரான போராட்டங்களை முன்னெடுக்கிறார்கள்.
ஒரு பெண்ணின் கதை:  இதுபோன்ற சூழலில்தான்,1972 ம் ஆண்டு, இம்பால் நகரத்தின் எல்லையிலுள்ள கொங்பால்லேக்கே மலை அடிவாரத்தில் வசித்து வந்த ஒரு எளிய விவசாய குடும்பத்தில் ஒன்பதாவது குழந்தையாய் பிறக்கிறார் சர்மிளா. அவர்களின் பெற்றோர் வேலை நிமித்தமாக அடிக்கடி நகரங்களுக்கு செல்ல நேரிட்டதால், பெரும்பாலான நேரத்தை, சர்மிளா தம் அண்டை வீடுகளில்தான் செலவிட்டாள். போராட்டம், மோசமான நிர்வாகம் ஆகிய காரணங்களால், அந்த சமயத்தில் கடுமையான வேலை இல்லா திண்டாட்டம் நிலவியது. இது மட்டுமல்லாமல், அந்த சமயத்தில் அடிக்கொரு ராணுவ வீரர்கள் நின்றது, சர்மிளாவின் பிஞ்சு மனதில் பல கேள்விகளை எழுப்பின.
இந்த சூழலில் பள்ளிப் படிப்பும் அவளை பெரிதாக ஈர்க்கவில்லை. பல முறை பத்தாம் வகுப்புத் தேர்வில் தோல்வி அடைந்தாள். ஒரு வழியாக கஷ்டப்பட்டு தேர்வாகிய அவளுக்கு, அடுத்த தடை கல்லாக அமைந்தது பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வு. அதிலும் தோல்வி அடைந்தாள். ஆனால், இம்முறை மீண்டும் கல்வியுடன் போராடாமல், தொழிற்கல்வி படிப்பை தேர்ந்தெடுத்தாள். அதே நேரம், வரலாறு புத்தகங்கள் அவளை மிகவும் ஈர்த்தன. ஆனால், அவற்றிலும் வடகிழக்கு மாகாணங்கள் பற்றி பெரிதாக சிலாகித்து எழுதாதது அவளுக்குள் பல கேள்விகளை எழுப்பின.
அது மட்டுமல்லாமல், அவள் தன்னைச் சுற்றி நடக்கும் அனைத்து விஷயங்களையும் கூர்ந்து கவனிக்க துவங்கினாள். எங்கும், எதிலும், அரசியல் சூழ்ந்த ஒரு சூழலில் வளர்ந்த அவளுக்கு, இயல்பாக அரசியல் மீது மிகுந்த ஆர்வம் ஏற்பட்டது. தனக்குள்ளேயே அரசியல் குறித்த கேள்விகளை எழுப்பினாள். * ஏன் மணிப்பூரை மட்டும் இந்திய அரசு இப்படி அணுகுகிறது…? * ஏன் மக்களுக்கு எதிராக எந்த ஆக்கிரமிப்பையும் நடந்த ராணுவத்திற்கு இவ்வளவு அதிகாரம் கொடுத்து இருக்கிறது…? * ஏன் உண்மையான வளர்ச்சியை முன்னெடுக்க மறுக்கிறது…? * ஏன் எங்கள் நியாயமான அபிலாஷைகளை நிறைவேற்ற மாட்டேன் என்கிறது…? இந்த கேள்விகளுக்கான விடையை தேடத் துவங்கினாள்.
இந்த தேடல்தான், இப்போது நாம் பார்க்கும் இரோம் சர்மிளா என்னும் ஆளுமையை வளர்த்து எடுத்து இருக்கிறது. இந்த தேடல்தான், இப்போது நாம் பார்க்கும் இரோம் சர்மிளா என்னும் ஆளுமையை வளர்த்து எடுத்து இருக்கிறது. இரோமுக்கு கவிதை எழுத மிகவும் பிடிக்கும். வரையவும் செய்வார். சித்திர தையல் வேலை என்றால் உயிர். ஆனால், இந்த தேடல் அவரை இவற்றில் எதையும் செய்யவிடவில்லை. அது அவரை வேறு இடத்திற்கு நகர்த்துகிறது. இதழியல் துறை மீது விருப்பம் வருகிறது. இதழியல் படிக்கிறார். அவள் இரும்பு மனுஷி ஆகிறாள்: படிப்பை முடித்துவிட்டு, அவர் மனித உரிமை அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றத் துவங்குகிறார். அங்கு அவள் கற்றவை, சந்தித்த மனிதர்கள், அவளுக்குள் ஒரு பெரும் மாற்றாத்தை உண்டாக்குகிறார்கள்.
இந்த சூழலில்தான், அந்த சம்பவம் நிகழ்ந்தது. அது நவம்பர் 2 ம் தேதி, 2000 ம் ஆண்டு. நமக்கெல்லாம் எப்படி விடிந்தது என்று தெரியாது. ஆனால், மணிப்பூருக்கு அந்த விடியல் மகிழ்ச்சிகரமானதாக இல்லை. ஆம், இம்பாலில் இருந்து 16 கி.மீ தொலைவில் மாலோம் என்னும் பகுதியில், மேகமூட்டமான அந்த விடியல் பொழுதில், பத்து பேர் பேருந்துக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். எப்போதும் போல், அப்போது ஆயுதப் படையினர் வாகனத்தில் சுற்றி கொண்டிருக்கின்றனர். இது வழக்கமான காட்சிதான் என்று நினைத்த, அந்த பத்து பேரும் நிலைமையை உணரும் முன்னரே மரணித்து இருந்தனர். ஆயுதப்படை எதுவும் நடக்காதது போல், அந்த இடத்தை விட்டுச் சென்றது. இந்த விஷயம் மெல்ல பரவத் துவங்கியது. ஆயுதப் படையின் மீது கொஞ்சமேனும் மதிப்பு வைத்திருந்த சிலரும் நம்பிக்கையை இழந்தார்கள். ‘மற்றொரு ஜாலியன்வாலாபாக்’ என்று இந்த சம்பவம் வர்ணிக்கப்பட்டது.
இந்த சம்பவம் சர்மிளாவை நிலைகுலையச் செய்தது. இந்த அரச வன்முறைகளுக்கு எதிராக ஒரு நிரந்தர தீர்வைத் தேட விரும்பினாள். அதற்கான, ஆயுதமாக அவள் தேர்ந்தெடுத்தது தனது உடலைத்தான். ஆம், அவளுக்கு எப்போதும் ஆயுதத்தின் மீது நம்பிக்கை இல்லை. ஆயுதப் படையின் பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுகிறோம் என்று சொல்லும் ஆயுத குழுக்களும், எந்த நன்மையையும் கொண்டு வரவில்லை. அதனால், சாத்வீகமான ஒரு அறப்போராட்டத்தை முன்னெடுக்க முடிவு செய்தவளின் ஒரே தேர்வாக இருந்தது, ‘உண்ணாவிரதம்’ மட்டும்தான். இதை தன் நண்பர்களிடம் சொன்னாள். ஆனால், அவர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தார்கள். ‘வீட்டில் சொல்லிவிட்டு முடிவு செய்து கொள்ளலாம்’ என்கிறார்கள். வீட்டில் ஒத்துக் கொள்ளமாட்டார்கள் என்பது அவர்களது நினைப்பு. அவளது அம்மா சகி, முதலில் தயங்குகிறார். பின்னர், அவளே, நாட்டின் நன்மைக்காகத்தானே… சரி… என்று இசைவு தருகிறாள். ஆனால், பின்பு சகி இவ்வாறு சொன்னார், “இத்தனை ஆண்டுகள் இந்த போராட்டம் நீளும் என்று தெரிந்து இருந்தால், நான் சம்மதித்து இருக்கவே மாட்டேன்…” என்றாள்.
இப்படியான சூழலில்தான், அவர் உண்ணாவிரதத்தில் அமர்கிறார். 16 ஆண்டுகள் ஆகிவிட்டன. உலக நடப்புகள் பல மாறிவிட்டன. பல கண்டுபிடிப்புகளை இந்த உலக மக்கள் உபயோகிக்க துவங்கிவிட்டார்கள். ஆனால், அவர் எந்த விஷயத்திற்காக போராட்டம் மேற்கொண்டாரோ, அது எந்த தீர்வையும் எட்டாமல் அப்படியேதான் இருக்கிறது. ஆயுதப் படையின் அட்டூழியங்களும் குறைந்ததாய் இல்லை. 2004 ம் ஆண்டு ஜூலை மாதத்தில், மனோரமா என்னும் பெண்ணை மோசமாக சிதைத்து, தெரு ஓரத்தில் வீசி சென்றது ராணுவம். பெண்கள் நிர்வாணமாக போராட்டங்களில் குதித்தனர். இந்த சம்பவத்திற்கு பின்தான் உலக ஊடகங்களின் கவனம் மணிப்பூர் நோக்கித் திரும்பியது. இரோமின் வெற்றி, ஜனநாயகத்தின் வெற்றி…!
இந்த 16 ஆண்டு காலகட்டத்தில், எண்ணற்ற முறை இரோம் கைது செய்யப்பட்டு இருக்கிறார். ஆனால், அவரின் உறுதியை யாராலும் சிதைக்க முடியவில்லை. ஆனால், இப்போது இந்திய அரசு மீது நம்பிக்கை இழந்துவிட்டதாகவும், தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொள்ளப்போவதாகவும், தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் அறிவித்து இருக்கிறார்.
இரோம், தம் மக்களின் தேவைகளை வலியுறுத்தி போராடுவதற்காக தேர்ந்தெடுத்த இரண்டு வழிகளும் ஜனநாயகபூர்வமானது. அவருக்கு செவிமடுக்க வேண்டியது அரசின் கடமை. அப்போதுதான் ஜனநாயகத்தை நம்பும் அனைவருக்கும், தாங்கள் சரியானதைதான் நம்புகிறோமென்ற நம்பிக்கை பிறக்கும். ஆம் இரோமின் வெற்றி தனி மனுஷியின் வெற்றியல்ல… அது ஜனநாயகத்தின் வெற்றி.
– மு. நியாஸ் அகமது | ஓவ பிரேம்
நன்றி : சமர்க்களம் (வாட்ஸ் அப் குரூப்)
——————————————————————————