Ram’s article about people’s roll in electoral system
——————————————————
உள்ளாட்சித் தேர்தல் நெருங்குகிறது. அரசியல் கட்சிகள் அனைத்தும் வரிந்துகட்டிக்கொண்டு களத்தில் இறங்கத் தயாராகின்றன.
பொதுமக்களாகிய நாம் என்ன செய்யவேண்டும்? யாரை ஆதரிப்பது? யாருக்கு வாக்களிப்பது? என்ற கேள்விகள் ஒருசிலருக்கு எழலாம், பலருக்கு இதுபோன்ற கேள்விகள் எதுவும் எழாமலே போகலாம் (நான் ரொம்ப பிசி… பஞ்சாயத்துத் தேர்தல் பற்றியெல்லாம் கவலைப்பட நேரமில்லை…)
நாடாளுமன்றத் தேர்தலிலும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் ஏதாவது ஒரு கட்சிக்கு வாக்களித்து முகம் தெரியாத நபர்களைத் தேர்ந்தெடுத்து அனுப்பிவிட்டு அடுத்த ஐந்தாண்டுகள் அவர் என்ன செய்தார் என்பதைப்பற்றிக் கவலைப்படாமல் மீண்டும் நமக்குப் பிடித்த கட்சிக்காக இன்னொரு முகம் தெரியாத நபருக்கு வாக்களிக்கத் தயாராகிறோம். இப்படி அனிச்சைச் செயலாகக் கட்சி வேட்பாளர்களுக்கே வாக்களித்துப் பழகிவிட்ட நாம்தான் இன்று நம்மைச் சுற்றியுள்ள பல்வேறு சமூக அவலங்களுக்குக் காரணம் என்பதை உணர்வதில்லை. நம்மால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளின் செயல்பாடுகளைக் கண்காணிக்க, தவறுகளைச் சுட்டிக்காட்ட, அவர்கள் சார்ந்த கட்சிகளின் தலைமைகளுக்கு நமது உணர்வுகளைத் தெரியப்படுத்தத் தவறுகிறோம்.
கண்மூடித்தனமான கட்சி வெறியும் தனிநபர் வழிபாடும் நம்மை இட்டுச் சென்றது எங்கே எனச் சிந்திக்க மறுக்கிறோம். விளைவு… எதிர்ப்பைப் பற்றி எண்ணியும் பார்க்க இயலாத ஆடுகளின் நிலை குறித்த கவலை ஏதுமின்றி மேய்ப்பர்கள் உண்டு கொழுக்கிறார்கள். மந்தை மந்தையாக மேய்ப்பர்களுக்குப் பின் சென்று கிடைத்ததை உண்டு கிடையில் அடைந்து கிடந்து விதி வந்தால் மாளத் தயாராக இருக்கும் நமது நிலைக்கு நம்மைத் தவிர வேறு யாரைக் குற்றம்சொல்வது…?
இனியாவது விழித்துக்கொள்வோமா….? என்ன செய்வது…? எப்படிச் செய்வது…? சற்றே சிந்திக்கலாமா நண்பர்களே….
நன்றி – திரு ராமின் முகநூல் பதிவில் இருந்து
———————————————————