Prof A.Ramasami’s FB status
_________________________________________________________________________________
ஜோக்கரும் கபாலியும் சமூக ஊடகங்கள் மட்டுமல்லாமல் அச்சு மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களிலும் விவாதிக்கப்படுகின்றன. இதுவரை சினிமாவின் வியாபார வெற்றிக்கு உதவும் விதமாக விமரிசனங்களை முன்வைத்த போக்கிலிருந்து கொஞ்சம் திசை திரும்பியிருக்கின்றன. இருபடங்களையும் இயக்கியுள்ள இயக்குநர்களிடம் வெளிப்படும் சமூகப்புரிதல் மற்றும் சமூக விமரிசனம் இந்தத் திசைமாற்றத்திற்குக் காரணமாக இருக்கலாம்.
இப்போதும்கூட விவாதங்கள் சினிமாவை உருவாக்கியது; வெளியிட்டது; ஏற்பது; தக்கவைப்பது எனச் சினிமாவை நோக்கியே விவாதிக்கப்படுகிறது. உண்மையில் ஊடகங்கள் விவாதிக்கவேண்டியன இதைத் தாண்டிய இன்னொன்று என நினைக்கிறேன்.
கபாலி, இந்தியாவின் தீர்க்கமுடியாத சாதியப்பிரச்சினையை மையப்படுத்தியிருக்கிறது என நம்பினால் கபாலி என்ற சினிமாவை நோக்கிய விவாதங்களைச் சாதியச் சிக்கல்கள், அவற்றைக் களைவதை நோக்கி நகர்த்தவேண்டும். கபாலிகள் இந்தச் சமூகத்தில் இருந்தார்கள்; இருக்கிறார்கள். ஆனால் இந்தக் கபாலி – ரஜினியின் உருவத்தில் வெளிப்பட்டுள்ள கபாலி- வேறுவிதமானவன் என முன்வைக்கிறது பா.ரஞ்சித்தின் சினிமா. இவனை இப்படி ஆக்கியது இந்தச் சமூக அமைப்பு; சாதியமுரண்கள் என்பது அவர் முன்வைக்கும் கருத்து. அப்படியானால் அந்த முன்வைப்பின்மீது நாம் விவாதங்களைத் திருப்பவேண்டும்.
ஜோக்கரில் ராஜுமுருகன் முன் வைப்பது ஒட்டுமொத்த மக்களாட்சிமுறை என்னும் அமைப்பின் மீது. எல்லா உரிமைகளும் இருப்பதாகப் பாவனை செய்துகொண்டு, அப்பாவிகளுக்கும் பொதுமக்களுக்கும் எந்தவித உரிமையையும் காட்டாத வன்முறை அமைப்பாக இருக்கிறது மக்களாட்சி என்கிறது படம். ஆட்சி செய்வது என்பதைத் தாங்கள் அனுபவிப்பது என்பதாகப் புரிந்துகொண்ட ஆட்சியாளர்களும், அவர்களுக்கு ஊழியம் செய்யும் நிர்வாக உறுப்புகளும் மனிதர்களை மனநோயாளிகளாக ஆக்கிக் கொண்டிருக்கின்றன என்ற கடுமையான விமரிசனத்தை வைக்கிறார். படத்தின் முதன்மையான விமரிசனத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தவேண்டிய சமூக ஊடகங்கள், அச்சு ஊடகங்கள், தொலைக்காட்சி ஊடகங்கள் முதலானவை இந்தச் சினிமாவைக் கொண்டாடுவதில் களிப்படைகின்றன.
கொண்டாடப்படவேண்டிய படங்கள் தான். அதையும் தாண்டி அவை எழுப்பிய அடிப்படைப் பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கும்போதுதான் அந்தப் படங்களைச் சமூக மாற்றத்தின் கருவியாக மாற்றும்.
– பேராசிரியர் அ.ராமசாமி அவர்களின் முகநூல் பதிவில் இருந்து
_______________________________________________________________________________