RBI head must quit for havoc: Leader of bank officers’ union
____________________________________________________________________________
நாட்டில் மிகப்பெரிய பொருளாதாரக் குழப்பத்திற்கும், 11 வங்கி ஊழியர்கள் உட்பட பொதுமக்களில் பலர் உயிரிழப்பதற்கும் காரணமான ரூபாய் நோட்டு ஒழிப்பு முடிவை எடுத்ததற்கு தார்மீகப் பொறுப்பேற்று ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் பதவி விலக வேண்டும் என, அகில இந்திய வங்கி அதிகாரிகள் சம்மேளனத்தின் மூத்த துணைத் தலைவரான டி.தாமஸ் ப்ராங்கோ வலியுறுத்தி உள்ளார். ரூபாய் நோட்டுச் சிக்கலுக்கு மூல காரணகர்த்தாவாக விளங்கும் ரிசர்வ் வங்கி கவர்னருக்கு எதிராக வங்கி அதிகாரிகள் சம்மேளனமே குரல் எழுப்பி இருப்பது இந்தப் பிரச்னையின் தீவிரத்தை உணர்த்துவதாக உள்ளது. இது குறித்து நியூ இந்தியன் எக்ஸ்ப்ரஸ் நாளேட்டுக்கு பேட்டியளித்துள்ள ப்ராங்கோ கூறியிருப்பதாவது:
1978 ம் ஆண்டு இதே போல் ரூபாய் நோட்டு ஒழிப்பு அறிவிப்பைச் செய்ய அரசு முடிவு செய்த போது, அப்போதைய ரிசர்வ் வங்கி கவர்னர் ஐஜி. படேல் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இதேபோன்ற நடவடிக்கைகளை எடுத்த மற்ற சில நாடுகளும் பெரும் பிரச்னைகளைச் சந்தித்தன. இவற்றில் இருந்து நாம் பாடம் கற்றுக் கொண்டிருக்க முடியும். ஆனால் கற்றுக் கொள்ளத் தவறிவிட்டோம். பிரதமர் மோடியோ, நிதியமைச்சர் அருண் ஜெட்லியோ பொருளாதார வல்லுநர்கள் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், ரிசர்வ் வங்கியில் பல பொருளாதார வல்லுநர்கள் இருக்கிறார்களே…! சிறிதும் திட்டமிடாமல், நாட்டில் மிகப்பெரிய பொருளாதாரக் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ள இந்த முடிவை எடுத்ததன் மூலம், ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் மிக மோசமான தோல்வியைச் சந்தித்திருக்கிறார். 2000 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க முன் கூட்டியே முடிவெடுத்தவர்கள், 500 மற்றும் 100 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கத் தவறியது ஏன்? இந்தியா போன்ற ஒரு நாட்டில் ருபாய் நோட்டுகளின் பயன்பாடு மற்றும் பயணம் குறித்து, ஆர்பிஐ பொருளாதார வல்லுநர்களுக்கு சரியான புரிதல் இல்லை என்பதையே இது காட்டுகிறது. 2000 ரூபாய் நோட்டுகளை அச்சடித்தவர்களை 500 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க விடாமல் தடுத்தது எது? அதுமட்டுமல்ல… பழைய 1000 ரூபாய் நோட்டுகளை விட தற்போதைய 2000 ரூபாய் நோட்டுகள் சிறிதானவை என்பதையும், இதனால் நாட்டில் உள்ள 2 லட்சத்திற்கும் மேற்பட்ட ஏடிஎம்களை மாற்றியமைக்க வேண்டிய நெருக்கடி வங்கிகளுக்கு ஏற்படும் என்பதையும் ஏன் இவர்கள் கவனத்தில் கொள்ளவில்லை.
கடந்த 11 நாட்களில் இதனால் ஏற்பட்ட மன அழுத்தத்தில் 11 வங்கி அதிகாரிகள் உயிரிழந்திருக்கின்றனர். 11 நாட்களும் 16 முதல் 18 மணி நேரம் வரை ஓய்வே இல்லாமல் பணியாற்றி உள்ளனர். அரைநாள் விடுப்பு கூட அவர்களால் எடுக்க முடியவில்லை. மிக,மிக மோசமான முடிவை எந்தவிதத் திட்டமிடலும் இன்றி ரிசர்வ் வங்கி எடுத்திருக்கிறது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. பொருளாதார வல்லுநர்களிடம் இது குறித்து எந்த ஆலோசனையும் நடத்தப்படவில்லை என்பதும் தெரிகிறது. நாட்டின் பொருளாதாரம் எப்படி செயல்படுகிறது, அதன் பரிவர்த்தனைத் தன்மை என்ன என்பது குறித்து அடிப்படைப் புரிதல் இன்றியே இந்த முடிவை அறிவித்துள்ளனர். மத்திய நிதித்துறை செயலாளர் அமைதியாக இருக்க, பொருளாதார விவகாரத்துறைச் செயலாளர் சக்திகாந்த தாஸ் அனைத்து முடிவுகளையும் அறிவிக்கிறார். நாட்டின் கிராமப்புற மக்களுடன் பின்னிப் பிணைந்த, ரூ 10 லட்சம் கோடி முதலீட்டையும், ஒரு லட்சம் கிளைகளையும் கொண்ட கூட்டுறவு வங்கிகளில் பணம் மாற்றிக் கொள்ள ரிசர்வ் வங்கி அனுமதிக்கவில்லை.
இத்தனை பெரிய குழப்பத்திற்கும் காரணமான ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் குறைந்த பட்சம் தார்மீகப் பொறுப்பேற்று பதவி விலகுவதே சரியாக இருக்கும்.
இவ்வாறு ப்ராங்கோ கூறியுள்ளார்.
பாரதிய ஜனதா அரசையும், இந்துத்துவா அமைப்புகளையும் முழு மூச்சாக ஆதரிக்கும் நியூ இந்தியன் எக்ஸ்ப்பிரஸ் நாளேடு இந்தப் பேட்டியை வெளியிட்டிருப்பதன் மூலம், மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் இமாலயத்தவறு இனியும் நியாயப்படுத்தக் கூடியதோ, மறைக்கக் கூடியதோ அல்ல என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டியதுதான்.
__________________________________________________________________________________