கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன், தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை வலுவடைந்து வருவதாக தெரிவித்தார்.
இலங்கை மன்னார் வளைகுடாவில் நிலைகொண்டு இருந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தற்போது இலங்கை மற்றும் தென்மேற்கு வங்கக் கடலில் நிலைக்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதன் காரணமாக வட மற்றும் தென் தமிழகத்தில் அநேக இடங்களில் கனமழை பெய்யும் என்றும் அவர் குறிப்பிட்டார். இதேபோல் கடலோர மாவட்டங்களில் கனமழை முதல் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், சென்னையில் பெரும்பாலான பகுதியில் இன்று காலை முதல் கனமழை பெய்து வருகிறது. நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம், வடபழனி, சிந்தாதிரிப்பேட்டை, மயிலாப்பூர், மந்தைவெளி, அடையாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை கொட்டி தீர்த்து வந்தது.
வெள்ளம்:
இதன் காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுயது, இதனால் பல இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், வாகன ஓட்டுகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்
சென்னையில் விட்டு விட்டு மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் இயக்குநர் பாலசந்திரன் குறிப்பிட்டுள்ளார். இரண்டு நாட்களுக்கு மழை தொடரும் என்பதால் அரசுக்கு எச்சரிக்கை அளித்துள்ளதாகவும் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
விடுமுறை:
கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை (2-11-2017, வியாழன்) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.