ஐக்கிய ஜனதா தளம் கட்சியும், அதன் “அம்பு” சின்னமும் நிதிஷ்குமார் அணிக்கே உரியது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளத்தில் பிளவு ஏற்பட்டதை அடுத்து, முதலமைச்சர் நிதீஷ்குமார் அணியினரும், கட்சியை நிறுவிய சரத்யாதவ் தரப்பினரும் கட்சியின் அம்புச் சின்னத்திற்கு உரிமை கோரி தேர்தல் ஆணையத்தில் முறையிட்டனர். இதில், நிதீஷ்குமார் தரப்பிற்கு மூத்த வழக்கறிஞர் கோபால் சிங்கும், சரத்யாதவ் தரப்பிற்கு ஆதரவாக காங்கிரஸ் மூத்த தலைவரும், பிரபல வழக்கறிஞரான கபில் சிபலும் ஆஜராகி வாதிட்டு வந்தனர்.
இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தனது முடிவை அறிவித்துள்ளது. நிதீஷ்குமார் தலைமையிலான பிரிவே ஐக்கிய ஜனதா தளம் கட்சியாக அங்கீகரிக்கப்படுவதாகவும், கட்சியின் அம்புச் சின்னத்தை பயன்படுத்தும் உரிமையும் அந்த அணியினருக்கே உரியது என்றும் இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஐக்கிய ஜனதா தளம், பீகாரில் மட்டும் செயல்படக் கூடிய மாநிலக் கட்சியாக மட்டுமே அங்கீகரிக்கப்படுவதாகவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.