மத்தியில் மதச்சார்பற்ற ஆட்சி உருவாக்கவும், தமிழகத்தில் மக்களுக்காக பாடுபடக்கூடிய ஊழலற்ற, நியாயமான, நேர்மையான ஆட்சியை உருவாக்கவும் உறுதியேற்போம் என்று ஸ்டாலின் பேசினார்.
இந்திரா காந்தியின் நூற்றாண்டு நிறைவு பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் கோவையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன், விசிக தலைவர் திருமாவளவன், சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.ஆர்.ராமசாமி உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர்.
திமுகவின் செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இந்த விழாவில் பேசியதாவது:
”பத்திரிகையாளர்கள் அடிக்கடி தலைவர் கருணாநிதியிடம் ஒரு கேள்வியைக் கேட்பதுண்டு. ‘உங்களுடைய மகனாக இருக்கும் ஸ்டாலினை அரசியலில் கொண்டுவர நீங்கள் முயற்சிக்கிறீர்களா?’ என்றெல்லாம் பலநேரங்களில் விமர்சனம் செய்வதற்காக, கேள்விகளை கேட்க வேண்டும் என்பதற்காக இந்த கேள்வியை அடிக்கடி கேட்பதுண்டு.
அப்படி ஒருமுறை கேட்ட நேரத்தில், தலைவர் கருணாநிதி பத்திரிகையாளர்களிடத்தில் பதில் சொல்லுகிற நேரத்தில் சொன்னார், ‘என்னுடைய மகன் ஸ்டாலினை நான் அல்ல,இந்திரா காந்திதான் அரசியலுக்கு முழுமையாக கொண்டு வந்து சேர்த்தார்’ என்று எடுத்துச் சொன்னார். எந்தப் பொருளோடு எடுத்துச் சொன்னார் என்பது உங்களுக்கும் தெரியும், மேடையில் இருக்கும் அத்தனை பேருக்கும் புரியும்.
நான் பள்ளிப் பருவத்தில், அரசியலில் முழுமையாக ஈடுபட வாய்ப்பில்லை என்று சொன்னாலும், பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கக்கூடிய வாய்ப்பை, நடத்தக்கூடிய வாய்ப்பை நான் தொடர்ந்து செய்து கொண்டிருந்ததுண்டு. ஆனால், நான் முழுமையாக அரசியலுக்கு வருவதற்கு காரணம், 1975-ம் ஆண்டு நாட்டில் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்ட நேரத்தில் , 1976-ம் ஆண்டு திமுக ஆட்சி கலைக்கப்பட்டு, 500க்கும் மேற்பட்ட திமுகவினர் மிசா கைதிகளாக கைது செய்யப்பட்டு சிறை கொட்டகைகளில் அடைக்கப்பட்டார்கள். அப்படி அடைக்கப்பட்ட 500 பேர்களில் நானும் ஒருவனாக இருந்தேன்.
ஓராண்டு காலம் சிறையில் இருந்து வந்த அனுபவத்தில், முழுவதுமாக அரசியலுக்கு வருவதற்கு அதுவொரு உந்து சக்தியாக இருந்தது. அதற்கு இந்திரா காந்தி காரணமாக இருந்திருக்கிறார் என்பதை எண்ணிப் பார்க்கின்ற நேரத்தில், உள்ளபடியே அவருடைய நூற்றாண்டு நிறைவு விழா நடைபெறுகிற நேரத்தில் நான் பங்கேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன், பெருமைப்படுகிறேன்.
அதேபோல, இன்னொரு பொருத்தம் என்னவென்றால், திராவிட இயக்க நூற்றாண்டு விழாவை நாம் நடத்திக் கொண்டிருக்கும் நேரத்தில், இந்திரா காந்தியின் நூற்றாண்டு விழா நடைபெறுவது பெருமைக்குரியதாக அமைந்திருக்கிறது. வட துருவத்தில் இந்திரா காந்தி ஒரு மாபெரும் தலைவராக விளங்கினார். அதே நேரத்தில், தென் துருவத்தில் தலைவர் கருணாநிதி இன்றைக்கும் அசைக்க முடியாத மாபெரும் சக்தியாக, திராவிட இயக்கத்தின் மூத்த தலைவராக விளங்கிக் கொண்டிருக்கிறார்.
இந்திரா காந்திக்கும், தலைவர் கருணாநிதிக்கும் இடையில் அரசியல் உறவு என்பது மட்டுமல்ல, சுயமரியாதைக்கும் சோஷலிஸத்துக்கும் இடையிலான உறவாக அமைந்திருந்ததை யாரும் மறுத்திட, மறைத்திட முடியாது. இந்திரா காந்தியை நாம் பல நேரங்களில் ஆதரித்திருக்கிறோம் என்றால், எந்தவொரு நேரத்திலும் நமது சுயமரியாதையை இழந்து நாம் ஆதரித்ததில்லை, சுயமரியாதையை நாம் என்றைக்கும் விட்டுக் கொடுத்ததில்லை. அதனால்தான் இந்திரா காந்தி தலைவர் கருணாநிதியைப் பற்றி, ‘திமுக தலைவர் கருணாநிதி என்னை எதிர்த்தாலும் உறுதியோடு எதிர்ப்பார், என்னை ஆதரித்தாலும் உறுதியோடு ஆதரிப்பார்’ என்று பல நேரங்களில் பெருமையோடு சொல்லியிருக்கிறார்.
இன்றைக்கு இந்த நிகழ்ச்சி கோவையில் நடைபெறுகிறது. இதே கோவையில் நாலைந்து நாட்களுக்கு முன்பாக, மாநிலத்தின் உரிமை பறிபோகும் அளவுக்கு ஒரு மோசமான சம்பவம் நடந்திருக்கிறது. தமிழகத்தின் புதிய ஆளுநர் கோவைக்கு வந்து, அதிகாரிகளை மட்டுமல்ல அமைச்சர்களையும் அழைத்து ஆய்வுப் பணிகளை நடத்தி, என்னென்ன பணிகள் நடந்திருக்கின்றன, என்னென்ன திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன என்று கேள்விக் கணைகளை எல்லாம் தொடுத்திருக்கிறார். மாநிலத்தின் சுயாட்சி, மாநில உரிமைகள் இந்தக் கோவையில் பறிபோகும் நிலைய் வந்த காரணத்தால்தான் இதே கோவையில் திருநாவுக்கரசர் தலைமையில், இந்திரா காந்தியின் நூற்றாண்டு விழா நடைபெறுகிறது என்பதை என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது.
இன்றைக்கு தமிழகத்தின் நிலை என்ன? நீட் தேர்வில் நமது உரிமையை இழந்தோம். அதேபோல, படிப்படியாக நமது உரிமைகளை எல்லாம் இழந்து தவிக்கும் நிலையில் சிக்கியிருக்கிறோம். இதுபற்றி எல்லாம் மத்தியில் இருக்கும் ஆட்சியும் கவலைப்படவில்லை, மாநிலத்தில் உள்ள அதிமுக அரசும் சிந்தித்துப் பார்க்கவில்லை.
அண்மையில் பெய்த பருவமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நாம் தொடர்ந்த் பார்த்து வருகிறோம். ஏற்கெனவே வார்தா புயலால் ஏற்பட்ட பாதிப்புகள், விவசாயிகள் வறுமையால் கொத்துக் கொத்தாக தற்கொலை செய்து உயிரிழந்து, தொடர்ந்து போராட்டங்கள் நடத்தும் அவல நிலை, அதையும் தாண்டி, இன்றைக்கு அனைவரையும் கொன்று வரும் டெங்கு காய்ச்சல் என பல இன்னல்களை நாம் தொடர்ந்து அனுபவிக்கிறோம். இதற்காக நிதி மத்திய அரசிடம் நிதி கேட்கிறார்கள். ஆனால், அவை முறையாக வழங்கப்படுகிறதா என்றால் இல்லை.
ஆனால், இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, 1969-ம் ஆண்டு தமிழகத்தில் மிகப்பெரிய வறட்சி ஏற்பட்டபோது, தலைவர் கருணாநிதி புள்ளி விவரங்களுடன், இந்திரா காந்தியிடம் நிவாரண நிதியாக 1 கோடியே 25 லட்சம் ரூபாய் கேட்டபோது, அடுத்த நாளே அந்த நிதியை அவர் உடனே வழங்கினார். ஆனால், இன்றைக்கு என்ன நிலை? அப்படி நடக்கிறதா என்றால் இல்லை.
அதுமட்டுமல்ல, டெல்லியில் 5 ஆண்டு திட்டம் என்ற பெயரில் வளர்ச்சிக் கூட்டங்களை பிரதமர் நடத்துவதுண்டு. இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, மாநில முதல்வர்களை எல்லாம் அழைத்து அப்படியொரு கூட்டம் நடத்தியபோது, தமிழக முதல்வராக இருந்த தலைவர் கருணாநிதி, ‘சேலத்தில் இரும்பு உருக்காலை திட்டம் கொண்டு வந்தால் தமிழ்நாட்டு அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பிழைக்க முடியும், எனவே 4 கோடி மக்களின் கோரிக்கையாக இதனை நான் வைக்கிறேன்’ என்று எடுத்துரைத்த நேரத்தில், பிரதமராக இருந்த இந்திரா காந்தி, ‘யோசிப்போம், கொஞ்சம் அவகாசம் வேண்டும்’ என்று சொன்னதும், தலைவர் கருணாநிதி, ‘உடனே திட்டத்தை இப்போதே அனுமதிக்காவிட்டால், நீங்கள் இங்கு நிறைவேற்றும் எந்தவொரு தீர்மானத்தையும் நாங்கள் ஆதரிக்க மாட்டோம்’ என்று அழுத்தம் திருத்தமாக தெரிவித்தார்.
இதைக் கேட்டதும் ஒரு பிரதமருக்கு, முதல்வர் ஒருவர் இப்படி பேசுகிறாரே என்று நியாயமாக கோபம் வர வேண்டும். ஆனால், இந்திரா கந்தி கோபப்படவில்லை, ஆத்திரப்படவில்லை, வருத்தப்படவில்லை, ஆனால் சிரித்தபடியே, ‘உடனே உங்கள் கோரிக்கையை நிறைவேற்றுகிறேன்’ என்று உத்திரவாதம் வழங்கி, 10 நாட்களுக்குள் அதற்கான உத்தரவை வழங்கினார்.
இங்கு பேசியவர்கள் எல்லாம் வங்கதேசம் உருவான கதைகளை எல்லாம் அடுக்கடுக்காக இங்கு தொகுத்தார்கள். அப்போது இந்திரா காந்தி பாதுகாப்பு நிதி ஒன்றை திரட்டினார். ‘பாதிக்கப்பட்ட வீரர்களுக்கு நிவாரணம் வழங்கிட வேண்டும், உடைமைகளை இழந்தவர்களுக்கு உதவிகள் வழங்கிட வேண்டும், எனவே உதவித்தொகை வழங்கிட வேண்டும்’ என்று எல்லா மாநில முதல்வர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பினார்.
அப்போது, 1972-ல் முதல்வராக இருந்த தலைவர் கருணாநிதி, இந்திரா காந்தியை சென்னைக்கு வரவழைத்து, தீவுத்திடலில் விழா நடத்தி, ‘இந்திரா காந்தி கேட்ட பாதுகாப்பு நிதியில், எங்கள் மாநிலத்தின் சார்பில் ரூ. 6 கோடி வழங்குகிறோம்’ என்று சொல்லி நிதியை ஒப்படைத்தார். அன்றைக்கு தமிழக ஆளுநராக இருந்த கே.கே.ஷா தலைமையில்தான் அந்த விழா நடைபெற்றது. தலைவர் கருணாநிதி வழங்கிய நிதியைப் பெற்றுக் கொண்டு, அதற்கு நன்றி தெரிவித்து உரையாற்றிய இந்திரா காந்தி, ‘நான் இந்த பாதுகாப்பு நிதிக்கு மொத்தமாக 25 கோடி ரூபாய் திரட்ட முடிவு செய்தேன், எங்களுடைய ஆட்சி நடைபெறும் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேச மாநிலத்தில் கூட 5 கோடி ரூபாய் தான் கொடுத்தார்கள், ஆனால், கருணாநிதி முதல்வராக இருக்கும், திமுக ஆட்சி நடைபெறும் தமிழ்நாட்டில் ரூ.6 கோடி கொடுத்திருக்கிறீர்கள்’ என்று நன்றி தெரிவித்து, அந்த நிதியைப் பெற்றுக் கொண்டார்.
அந்த நிகழ்ச்சியில்தான் தலைவர் கருணாநிதி, ‘உறவுக்கு கை கொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம்’ என்ற பிரகடனத்தை வெளியிட்டார். இதையெல்லாம் குறிப்பிடக் காரணம், மாநில உரிமைகளை எல்லாம் நாம் எந்தளவுக்கு பெற்றோம், ஆனால் இன்றைக்கு அவற்றையெல்லாம் எப்படி படிப்படியாக நாம் இழந்து கொண்டிருக்கிறோம், என்பதையெல்லாம் நீங்கள் உணர வேண்டும்.
எனவே, இந்த நிலையிலிருந்து நம்மை காப்பாற்ற, இந்த இனத்தைக் காப்பாற்ற, இந்த நாட்டைக் காப்பாற்ற வேண்டும் என எல்லோரும் இங்கு எடுத்துச் சொன்னதன் அடிப்படையில், மத்தியில் மதச்சார்பற்ற ஆட்சி உருவாக்கவும், அதேபோல தமிழ்நாட்டில் மக்களுக்காக பாடுபடக்கூடிய ஊழலற்ற, நியாயமான, நேர்மையான ஆட்சியை உருவாக்கவும் உறுதியெடுக்கும் நிகழ்ச்சியாக இந்திரா காந்தியின் நூற்றாண்டு விழாவைப் பயன்படுத்துவோம்” என்று ஸ்டாலின் பேசினார்.